Wednesday, March 17, 2010

கொஞ்சம் சந்நியாசம் பற்றி..

நடிகையுடன் நித்யானந்தாவென்று பலரும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்திருக்க, என் மனமோ 'இதற்கு இவ்வளவு நாட்களா..?' என்பதாகவே கேள்வி எழுப்பியது. ஆசாமிகளை சாமிகளென்று நம்பும் மனிதர்களுக்கு என்ன தான் அதிர்ச்சி வைத்தியங்கள் அவ்வபோது கிடைத்த வண்ணமிருந்தாலும், மக்களென்னவோ திருந்துவதாக தெரியவில்லை. கடவுளையே நம்பாதவர்கள் உலவிக்கொண்டிருக்கும் போது, ஆசாமிகளை தெய்வமாக பாவிக்கும் மக்களை நினைக்கும் போது ஒருவிதத்தில் உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், இன்னொருவிதத்தில் இப்படி ஏமாறுகிறார்களே என்று பரிதாபமும் தோன்றுகிறது.

நித்தியானந்தாவின் எழுத்துக்களென்னவோ படிப்பதற்கு நன்றாக இருக்குமென்பது உண்மை தான். அவரது ஒன்றிரண்டு கட்டுரைகளை குமுதத்தில் படித்திருக்கிறேன். அவர் பேசும் விதமும் மனதை சாந்தப்படுத்தும் விதமாக இருக்குமென்று கேள்விப்படிருக்கிறேன். ஆனால், எப்பொழுது ஒருவன் தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறானோ, அப்பொழுதே அங்கு ஏதோ சரியில்லையென்று என் மனம் சொல்ல ஆரம்பித்துவிடுவதுண்டு. 'அன்பே சிவம்' சொல்லும் மனித கடவுள்களில் நம்பிக்கையில்லாதவனல்ல நான். ஆனால் ஒரு மனிதனை கடவுளென்று இன்னொருவன் நினைக்க வேண்டுமே தவிர அவனே சொல்லிக் கொள்ளக் கூடாது. அப்படியே இன்னொருவனை கடவுளென்று நினைக்கிறோமென்பதற்காக அத்தகைய மனிதனிடம் சரணாகதி அடைவதென்பதெல்லாம் கொஞ்சம் அறிவின்மையின் வெளிப்பாடு தான்.

என்ன தான் இருந்தாலும் ஒரு மனிதன் என்பவன் மனிதன் தானே! ஒரு மனிதனுக்குண்டான எல்லா உணர்ச்சிகளும் எல்லா மனிதர்களுக்கும் உண்டென்பது இயற்கை. இதில் யாரும் விதிவிலக்கல்ல.. தன்னை சந்நியாசியென்று பொய் போர்வை போர்த்தி போலி வேடம் தரிக்காமல் இருந்திருந்தால், நித்யானந்தாவை ஒன்றும் சொல்வதற்கில்லை. எவ்வளவோ பேர் நல்ல கருத்துக்களை போதித்து சம்சார வாழ்க்கையில் ஈடுபடவில்லையா என்ன..? போலி வேடம் போடும் போது தான், எல்லாமே போலியாகிவிடுகிறது. அது தான் அதிர்ச்சிக்கு அடித்தளமாகி போகின்றது. ஒருவிதத்தில் அது நம்பிக்கை துரோகமாகிவிடுகிறது.

அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கெல்லாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ பட தேவையில்லை. இயற்கைக்கு விரோதமாக அடக்கி வைக்கும் எதுவுமே அடங்கி இருந்ததாக செய்தியில்லை. எல்லாம் அனுபவித்து, பின்பு அவை பிடிக்காமல் போய் அவற்றின் மீது பற்று குறைந்து சந்நியாசம் போகிறவர்கள் மட்டுமே நிஜமாக சந்நியாசியாக இருக்க முடியுமென்பது என் கருத்து. அல்லது பாலியல் சம்பந்தமான உணர்வுகள் ஆச்சர்யப்படும் விதமாக அவர்களிடம் ஏதோ சில நிறைபாடுகளின் [நிறைபாடா அல்லது குறைபாடா என்று தெரியவில்லை :-)] காரணமாக இல்லாது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே சந்நியாசமென்பது சாத்தியம்.

வறுமை மற்றும் வாய்ப்பின்மை காரணமாக செய்ய இயலாத சில விஷயங்களை முன்நிறுத்தி, நான் இனி இப்படியே வாழப்போகிறேன் என்று சந்நியாசம் போகிறவர்கள் என்னை பொறுத்த வரையில் வாய்ப்புகளை தேடித் போகிறவர்கள் தான். அப்படியாவது சில வாய்ப்புகள் அமையாதவென்று ஏக்கத்துடன் போகிறவர்கள் அவர்கள். நினைக்க கசப்பாக இருந்தாலும், அது தான் நிதர்சன உண்மை. இயற்கையாகவே உள்ளுக்குள் அனுபவிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுத்தும் சில விஷயங்களை எவ்வளவு காலம் தான் ஒரு மனிதன் அடக்கியாள முடியும். அடக்கியாழ்தல் என்பது வாய்ப்புகள் அமையாவிட்டால் மட்டுமே உண்டு. உண்மையில் அது அடக்கியாழ்தல் அன்று. அதற்கு பெயர் அடங்கி போதல்.. வேறு வழியின்றி.. சூழ்நிலையின் காரணமாக!!

இப்போதெல்லாம் சந்நியாசம் போகிறேன் அல்லது துறவு பூணுகிறேன் என்பதெல்லாம் 'உங்களை விட அதிக வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்க போகிறேன்' என்று அர்த்தமாகி விட்டது. துரதிஷ்டவசமாக மாட்டிக்கொள்வோர் மாட்டிக் கொள்கின்றனர். மற்றவர் மறைவுகளில் இன்னும் வசதியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், வாழ்வின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்களிடம் தான் சில மக்கள் தங்களது சுயத்தேவைகளை துறந்து இருப்பனவற்றை அவர்களிடம் கொட்டிக் கொடுத்து வாழ முற்படுகிறார்கள். உண்மையில் துறவு என்பது அத்தகைய மக்களுக்கு தான் மிகவும் பொருந்துமென்று நினைக்கிறேன்.

உண்மையிலேயே துறவறத்தில் ஈடுபடுவோர் தம்மை கடவுளென்று மற்றவர் புகழ்வதையோ வழிபடுவதையோ விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை. துறவென்பது எல்லாவற்றையும் துறத்தல். 'நான் எல்லாவற்றையும் துறக்கிறேன், ஆனால் எனக்கு பெயரும் புகழும் மட்டும் வேண்டுமெ'ன்று சொல்பவர்கள் எப்படி துறவு பூண்டதாக அர்த்தமாகுமென்பது எனக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment