தனிமை ஏற்படுத்தும் வலியின் உணர்வினாலோ என்னவோ தனிமையை பிரதிபலிக்கும் எதனையும் கண்கொண்டு பார்க்க தோன்றுவதில்லை.. வெறிச்சோடிய தெருக்கள்.. தனித்து நிற்கும் மரங்கள்.. ஒற்றைப்பூ செடிகள்.. ஆளரவமற்ற வீடு.. துளிகளற்ற தடாகம்.. துடைக்கப்பட்ட வானம்.. இப்படி எதுவுமே பார்க்க தோன்றுவதில்லை. அண்ணாந்து ஆகாயம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் நிலை பிரதிபலிக்கும் நிலவை பார்த்து, 'என் நிலை தானா உனக்கும்..!!' என்று சப்தமிட்டு கேட்க தோன்றுகிறது.. பரிதாபப்படுவதற்கு கூட ஆட்களில்லாத நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது தான்!!
ஓடும் தடாகத்தில் பயணத்தினிடையில் சட்டென்று தடுப்பொன்று தட்டுபட, முன் சென்றுவிட்ட தன் இனத்தவர் பிரிந்து, தடுப்பினுள் சிக்கிக்கொண்ட ஒற்றை மீனின் நிலை தான் என்னுடையதும்..!! நிமிடங்கள் கரைவதை போல் நாமும் கரைந்து வெகு விரைவில் இல்லாமல் போய்விட்டால் நன்றாகவிருக்குமேவென்று தோன்றும் கணங்கள் இல்லாமலில்லை.. என்ன தான் தனிமையின் உணர்வை மனதினுள் புதைக்க முயன்றாலும், அது நீருக்கடியில் அடைக்கப்பட்ட காற்றுக்குமிழியை போல் அவ்வபோது மேலெழுந்த வண்ணமே உள்ளது.
விலங்குகளைப் போன்று சட்டென்று சில நாளில் தூக்கியவருடன் கொஞ்சி மகிழ்ந்து கூடிவிடும் இயல்பு வருவதில்லையேவென்று ஏக்கம் கொண்டதும் உண்டு. ஒருவேளை விலங்கின் மொழி புரியாததாலோ என்னவோ வந்த ஏக்கமது. பழக பழக பக்குவப்படுமென்பது பழமொழியோடு நின்றுவிட்டது போலும்.. தனிமை பழக பழக பக்குவமொன்றும் அடைவதாய் தெரியவில்லை. சுய பரிதாபம் தான் மேலோங்குகிறது..
விதி மாற்ற முயலும் முயற்சிகள் வீணாகவே போகின்றன.. விமோசனம் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு விடியலும் விடைகளில்லாமலேயே விடைபெறுகின்றன. உள்ளுக்குள் படர்ந்திருக்கும் தனிமை வெளியிலும் கலந்துவிடும் நிமிடங்களை கையாள்வது சற்று கடினம் தான். சுற்றமும் பிரதிபலிக்கும் தனிமை இன்னும் கொடியது. அது ஏன் எப்போதும் விடை கொடுக்கவே எத்தனிக்கின்றன கரங்கள்..?
No comments:
Post a Comment