Monday, March 8, 2010

பெண்கள் தினத்தைப் பற்றி.. (பெண்களுக்காக)

ஆண்களுக்கு சரி சமானம்.. எல்லா துறைகளிலும் முன்னேற்றம்.. படிப்பில் அசரவைக்கும் சாதனைகள்.. பெரிய பதவிகள்.. பொறுப்புகள்.. பட்டங்கள்.. என்று எல்லா இடங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி கொடி கட்டி பறக்கும் போது, நமக்கேன் தனியொரு நாள் கொண்டாட்டமாக 'பெண்கள் தினம்' என்று கேள்வி எழுகிறதல்லவா..

இத்தனை போராட்டங்கள்.. தொடர்ந்திட்ட முழு இரவு கண்விழிப்புகள்.. குடும்ப பாரங்களுடன் கூடுதலான சுமைகள்.. உங்களாலும் முடியுமென்று நிரூபிக்க பட்ட கஷ்டங்கள்.. என்று எல்லாமும் எதற்காக.. உங்களுக்கென்று ஒரு நாள் (பெண்கள் தினம்) என்றிருப்பதில் இருந்து "இனி எல்லா நாளும் உங்களுக்கே" என்னும் நிலைக்கு வருவதற்காக தானே..

"அது தான் வந்து விட்டோமே.. இனியும் ஏன் நமக்கென்று ஒருநாளை கொண்டாட வேண்டுமென்"கிற கேள்வி எழுகிறதென்றால், அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், என்ன தான் இமயம் தொட்டுவிட்டாலும், தொட துணிந்து எடுத்து வைத்த அந்த முதல் அடியை மறக்க முடியுமா என்ன.. அதற்காக தான் தொடர்கிறது இந்த 'ஒரு நாள் கொண்டாட்டம்'. ஒருவிதத்தில் பார்த்தால் சாதித்து விட்ட பெண்களுக்கும், சாதித்து கொண்டிருக்கும் பெண்களுக்கும், தமது சாதனைகளை திரும்பி பார்த்து பெருமிதப்படுவதற்கும், தோள் தட்டி தம்மையும் தம் இனத்தை சேர்ந்த பிற மகளிரையும் தத்தம் சாதனைகளுக்காக பாராடுவதற்குமான நாளாக நீங்கள் இந்த நாளை பாவிக்கலாம்.. வெளி உலகிற்கு வந்து வெற்றி கொடி நாட்டுவதிலும், வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் தமது நிலைப்பாட்டை நிரூபிக்க முயற்சி எடுப்பதிலும் மிக மும்முரமாக இருப்பதனால், சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே முதுகு தட்டி உற்சாகப்படுத்தி கொள்ள மறந்து விடுகிறீர்கள்..

பலவித கஷ்டங்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் கூட தொடர்ந்து போராடி, என்னாலும் முடியுமென்று நிரூபித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, சற்று நின்று திரும்பி, தாம் கடந்து வந்த பாதைகளையும் எதிர்த்து போராடிய தடைகளையும் பற்றி கொஞ்சம் அசை போட்டு, தமது அயராத உழைப்பையும் உத்வேகத்தையும் பாராட்ட நிச்சயமாக ஒரு நாள் தேவை. அன்றைய தினமாக இருக்கட்டும் இன்றைய தினம்..

ஒருபுறம் சாதனைகளையும் வெற்றிகளையும் திரும்பி பார்த்து, சாதித்தவர்களையும் சாதித்து கொண்டிருப்பவர்களையும் பாராட்டும் அதே தருணத்தில், நீங்கள் கேட்க மறந்திருக்கும் கேள்விகள் கொஞ்சம் மிச்சமிருகின்றன என்பதை நினைவுபடுத்தும் நாளாகவும் இது அமையட்டும்.. இன்று மலையேறி சிகரம் அடைந்து கொடி நாட்டுவதிலிருந்து, வான் பறந்து சந்திரன் தொடுவது வரை, எதுவெல்லாம் இருக்கிறதோ எல்லாமும் செய்தாயிற்று.. சாதித்தும் காட்டியாயிற்று.. என்றாலும் எல்லாரும் சாதித்திருக்கிறார்களா என்றொரு கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறதே..

கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாலைகள் ஒரு தீக்குச்சியிலிருந்து பிறப்பதை போன்று, எவ்வளவு நாட்கள் தான் அடங்கியிருப்பதென்று எங்கோ உரசிய தீக்குச்சியிலிருந்து கொதித்தெழுந்த தீயல்லவா இன்று பெரும் தீப்பிழம்பாகியிருக்கிறது.. ஆனால் இன்னும் வெளிச்சம் தேவைப்படும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன. இன்னும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டும், தங்கள் உரிமைகளை உணராமலும், உணர்ந்தாலும் அவற்றை பெற முடியாமலும், சொல்ல முடியா துன்பங்களுடன் வாழும் உங்கள் இனத்தவர்கள் இன்னும் உலகெங்கும் இருக்க தானே செய்கின்றனர்..

எனவே இன்னொரு புறத்தில் பார்த்தால் இன்றைய தினமானது அத்தகைய பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவும் நாளாகவும் இருக்க வேண்டாமா.. 'இனி நீயும் வெளிவரலாம் சுதந்திரமாய்.. சாதிக்க உனக்கும் உரிமைகள் இருகின்றன'வென்று அவர்களுக்கு தேவையான உற்சாகங்களையும் உதவிகளையும் செய்வதற்கும், அவர்களை தைரியப்படுத்தி உத்வேகம் அளிக்கவும் இந்த நாளை பயன்படுத்துங்கள்..

வெளியே வரலாம் என்பது கூட அறியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் பெண்களையும், சாதிக்க சக்தியிருந்தும் அதற்கான வழிமுறைகளை அறியாத பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு உணர்வளவில் உங்களாலான உதவிகளை செய்து 'இங்கே பாருங்கள்.. உங்களுக்கும் வழிகள் இருக்கின்றன..' என்று உற்சாகப்படுத்துங்கள்.. பெண்களுக்கு பெண்களே முன்மாதிரியாக இருந்து உற்சாகப்படுத்தும் போது அங்கே 'நாமும் சாதிக்க வேண்டுமெ'ன்கிற அழுத்தமான உத்வேகம் மற்ற பெண்களுக்கு தோன்றும் என்பதை அறியுங்கள். பெண்களாக பிறந்த நீங்கள், உதவி தேவைப்படும் உங்களது இனத்தவருக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்..

வெறும் கூட்டங்கள் கூடி, ஆடி பாடி சிரித்து மகிழும் நாளாக மட்டும் இந்த நாள் அமையாமல், நீங்கள் கடந்து வந்த பாதைகளில் சாதித்தவைகளை திரும்பி பார்க்கும் நாளாகவும், உங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும் உணர்வளவிலான பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளும் நாளாகவும், உதவி இன்னமும் தேவைப்படும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களும் மேலே வர உங்களாலான உதவிகளை செய்வதற்கு முடிந்த முயற்சிகளை எடுக்கும் நாளாகவும் இது அமையட்டும்.. பெண்கள் எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. நீங்கள் இதுவரை செய்த சாதனைகளுக்கும், செய்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும், எடுக்க போகும் விஸ்வரூபங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

No comments:

Post a Comment