சில நேரங்களில் பாராட்டப்படும் போது என் செவிகளில் விழும் வார்த்தைகள், "உண்மையிலேயே நல்லாயிருக்கு (really good or really nice)", என்பது..
உடனே அப்படி பாராட்டுபவர்களிடம், "அதென்ன உண்மையிலேயே நல்லாயிருக்கு? அப்போ இவ்வளவு நாள் வெறுமனே 'நல்லாயிருக்கு'ன்னு மட்டும் நீங்க சொன்னதெல்லாம் உண்மையான பாராட்டில்லையா..?", என்று கேட்க வேண்டும் போலிருக்கும் எனக்கு.
ஆனால் இதுவரை யாரிடமும் அதை கேட்டதில்லை. ஒருவேளை 'ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றதுக்கு பதிலா தான் உண்மையிலேயே நல்லாயிருக்குன்னு சொல்றாங்களோ..', என்று மனதை தேற்றிக் கொள்ள முயல்வதுண்டு. ஆனால் அந்த சிந்தனை தட்டிய சில வினாடிகளிலேயே மறுபடியும் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், "உண்மையிலேயே ரொம்ப நல்லாயிருக்கு". "மறுபடியும் 'உண்மையிலேயே'வா..? அப்போ இவ்வளவு நாள் சும்மா தான் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு இருந்தீங்களா..?", என்று கேட்க எத்தனிக்கும் நாவை மிகவும் கடினப்பட்டு அடக்க வேண்டியதாகிவிடும்.
எதற்காக 'உண்மையிலேயே' என்று பல இடங்களில் தேவையில்லாமல் சேர்த்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. 'உண்மையிலேயே டேஸ்ட்டா இருக்கு (really tasty)'.. 'உண்மையிலேயே உனக்காக நா சந்தோஷப்படுறேன் (really i'm happy for you)'.. 'இன்னிக்கு உங்க டிரஸ் உண்மையிலேயே நல்லாயிருக்கு (your dress is really looking good today)'.. இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். "எப்பவும் உண்மையே பேசுங்க.. அப்ப தேவையில்லாம 'உண்மையிலேயே'ன்னு ஒரு வார்த்தைய சேத்துக்கனும்னு தோணாது", என்று அவர்களுக்கு பொதுவானதொரு அறிவுரையை கூற வேண்டுமென்று தோன்றுவதுண்டு.
'எல்லா நேரத்திலயும் நல்லாயில்லன்னு உண்மைய சொல்ல முடியாதில்லையா.. அவங்க மனசு கஷ்டப்படாதா?', என்று கேட்பீர்களேயானால், அப்படி அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பொய் சொல்லி இருந்தால், அது பொய்யென்று அவர்களுக்கு தெரியாமலேயே இருக்கட்டும். அப்போது தான் நீங்கள் பொய் சொன்னதற்கு கொஞ்சமாவது அர்த்தமுண்டு.. எனவே இனி 'உண்மையிலேயே' என்பதை கொஞ்சம் பார்த்து உபயோகியுங்கள். 'உண்மையிலேயே' என்று சொல்லப் போய், நீங்கள் இதுவரை சொன்னது உண்மையில்லையென்று ஆகிவிடக் கூடாது..
'டேய்.. இது ஒரு சாதாரண விஷயம்.. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற..' என்று சொல்கிறீர்களா..? என்ன செய்வது.. இப்போதெல்லாம் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் அசை போடுகின்றது மனம். வார்த்தைகளை ஆராயாமல் வாக்கியங்கள் தரும் இதமான சூட்டில் குளிர் காய நான் முயலாமலில்லை. சில நேரங்களில் என்னால் அது முடிவதில்லை..
No comments:
Post a Comment