Saturday, April 17, 2010

பிழைப்பேற்படுத்தும் சோம்பேறித்தனம்..

முற்றிலும் சீவப்படாத தலை.. அழகுபடுத்தப்படாத முகம்.. கழுத்தில் மெலிதாக தெரியும் மஞ்சள் கயிறு.. சற்றே சுருங்கிய உடையென்று எதிர் வீட்டு வாசல் தொட்டு உள் நுழைந்த அந்த பெண்ணிற்கு இருபத்தைந்து வயதிருக்கும். முகத்தில் கொஞ்சி அழுது வடிந்தது சோகத்தின் சாயல். அது சோகமா அல்லது சோர்வா..? சொல்லத் தெரியவில்லை எனக்கு. வெளிக் கதவை திறக்கையிலேயே பழகிவிட்ட நாயின் முகம் பார்த்து லேசாய் புன்னகைத்தாள். நாய் முகத்தில் எட்டிப் பார்த்தது சின்னதாய் ஒரு சிநேகிதம்.. வளைந்து நெளிந்து ஒரு குட்டியாட்டம் போட்ட அதன் வாலிலிருந்து அதை அறிய முடிந்தது. சில வினாடிகளில் புன்னகை வடிந்து, மீண்டும் அவள் முகம் போர்த்திக் கொண்டது அந்த சோர்வின் (சோர்வா அல்லது சோகமா) சாயம்..

அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அவள் அவ்வீட்டு வேலைகளை செய்ய வந்திருக்கிறாள் என்பது. திறக்கப்பட்ட கதவின் வழி உள்ளே அனுமதிக்கப்பட்டவளின் காதுகளை சட்டென்று மொய்க்க ஆரம்பித்தன வீட்டு எஜமானியின் அடுக்கடுக்கான ஆணைகள்.. செய்ய வேண்டிய வேலைகள் பற்றி.. வீட்டு எஜமானி அவளிடம் பேசிய தோரணைகளும், அவள் நடத்தப்பட்ட விதமும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றாலும், அவளென்னவோ அதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை அவள் மனம் அதற்கு பழக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவள் தன்னை அதற்கு பழக்கப்படுத்தி இருக்கலாம்.

அழுக்கு துணிகளை துவைக்க, சமைக்க, பாத்திரம் கழுவ, வீடு பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய என்று வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வோரை சந்திக்க நேரும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது, 'ஏன் அவரவர் வேலையை அவரவரால் பார்த்துக் கொள்ள முடியாது..?' என்பதே. 'உண்பதையும் உறங்குவதையும் மட்டுமே என்னால் செய்ய முடியும்.. மற்ற எல்லாவற்றிற்கும் எனக்கு ஆட்கள் வேண்டுமெ'ன்னும் மனப்பாங்கு கொண்டவர்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்து விட்டனர். தான் உண்ணும் தட்டை கழுவக் கூடவா இன்னொருவர் வேண்டுமென்று எனக்கு தோன்றுவதுண்டு.

அத்தகைய வேலைகளை செய்ய தனக்கு நேரமில்லையென்று சிலர் காரணம் கூறினாலும், பலரது காரணங்களோ சலிப்பு, சோம்பேறித்தனம் மற்றும் அருவெறுப்பு என்பதாகவே இருக்கின்றன.. ஆழ்ந்து நோக்கும் போது, ஒரு விதத்தில் அவர்கள் சொல்லும் அத்தகைய காரணங்கள் நல்லதென்றும் தோன்றுவதுண்டு.. சிலரது சோம்பேறித்தனமும் அருவெருப்பும் தானே பலரது வீடுகளிலின்று உலை கொதிக்க காரணமாக உள்ளன. பிரியமில்லையென்றாலும் பிழைப்பிற்காகவாவது வேறு வழியில்லாமல் அத்தகைய வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தானே இருக்கிறார்கள் பலர்.. ஆனால் அதற்காக அவர்கள் எந்த விதத்தில் குறைந்து விடுகிறார்கள்.. அவர்களும் நல்ல விதமாக நடத்தப்படலாமே..!

No comments:

Post a Comment