Sunday, April 11, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (8)

பல வருடங்கள் பொறுமையுடன், பார்த்து பார்த்து கட்டியெழுப்பிய உறவுகளையும், அதனுள்ளான நெருக்கங்களையும் தகர்த்தெறிய சில நிமிடங்கள் போதும், ஆனால் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதல்ல. அது பெரும்பாலும் முடியாத காரியம் தான். சிலர் அடங்கி போவதற்கும், எதிர்வாதம் பேசாது பணிந்து போவதற்கும் அது தான் காரணம். பணிந்து போகிறார்கள், எதிர்த்து கேள்வியேதும் கேட்பதில்லை என்பதற்காக அப்படிப்பட்டவர்களது பொறுமையின் எல்லையை சோதிக்காமல் இருப்பது நன்று.

மிக நீண்ட விவாதங்களோ, நாட்கணக்கில் தொடர்ந்திடும் சண்டைகளோ தேவையில்லை பிரிவை உண்டாக்குவதற்கு.. விஷம் தடவப்பட்ட சில வார்த்தைகள் போதும் ஒரு உறவு அறுவதற்கு. பிடி தளர்த்திய பின்பு மீண்டும் பற்றிக் கொள்ளுதலென்பது சற்று கடினமாகி விடலாம். பிடி தளர்த்தப்பட்ட விரல்கள் கூட்டத்தில் வேகமாக கரைந்து காணாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம்.

உறவுகளில் விழும் பிளவோ அல்லது நீண்டு விடும் பிரிவோ பெரும்பாலான நேரங்களில் அறுபடும் கயிறை போன்றது தான்.. அவ்வாறான பிளவையோ பிரிவையோ களைந்து மீண்டும் இணைந்தாலோ அல்லது இணைக்க முனைந்தாலோ அது ஒரு முடிச்சுடன் தான் முடியும். முன்பிருந்த சீரான பிணைப்பு காணாமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே தான் அத்தகைய அறுபடும் நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய பிரிவுகளோ அல்லது மனத்தாங்கல்களோ உறவுகளில் விழாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது.

என்ன தான் முயற்சிகள் எடுத்து நீண்டுவிட்ட இடைவெளிகளை ஈடுகட்ட நினைத்தாலும், அறுபட்ட கயிறை இணைத்த இடத்திலான முடிச்சி இறுதிவரை சற்று உறுத்தலாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில், இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அறுந்து கிடக்கும் கயிறை விட முடிச்சுடன் இருந்தாலும் இணைத்திருக்கும் கயிறு எவ்வளவோ பரவாயில்லையென்றும் தோன்றுகிறது. அதனால் தான் உடைந்து விட்டாலும் பல நேரங்களில் ஒட்டவைக்க முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. ஆனால் அறுபட்ட உறவுகள் மீண்டும் இறுக்கமாக இணைய இருவரும் 'இணைய வேண்டுமெ'ன்ற உந்துதலுடன் முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்போது தான் அங்கே மீண்டுமொரு பிணைப்பு ஏற்பட வாய்ப்புகளுண்டு.

காலடிகளை கவனமாக எடுத்து வைத்து கீழே விழாமல் பார்த்து நடக்கிறோம், கை கால்களை முறித்துக் கொள்ளக் கூடாது என்று. ஆனால் தவறுதலாக இடறி விழுந்து கையையோ காலையோ உடைத்து கொண்டுவிட்டால், உடைந்தது அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிடவா முடியும்..? கட்டுகள் போட்டு சரி செய்ய முயற்சிகள் எடுப்பதில்லையா! அதை போன்றது தான் வாழ்க்கையும்.

No comments:

Post a Comment