Thursday, April 29, 2010

காதல் சார்ந்தவை..

பின்னிக் கொள்ளும் விரலிடுக்குகளில் காற்றுக் கூட நுழைந்திடாதவாறு பிடித்திருக்கும் இறுக்கம் அழுத்தமாய் உணர்த்துகிறது நீ என் மேல் வைத்திருக்கும் பிரியங்களின் அளவை.. அன்பும் காதலும் இரண்டற கலந்து பிணைந்திருக்கும் அத்தருணங்களில் உள்ளங்கைகளுக்குள் மெலிதாய் படரும் வியர்வையின் சில துளிகள் இயல்பே என்றாலும் கூட, பிணைப்பின் இறுக்கம் குறைவதை போன்றதொரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாலோ என்னவோ அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

நீ என்னுடன் கைக் கோர்த்தபடியே பூமிக்கு காயமேற்படாதவாறு அடிமேல் அடி வைத்து பூனைநடை நடக்கும் போதெல்லாம், உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தை சொந்தமாக்கிக் கொண்டதொரு பெருமிதம் என் நடையில் லேசாக கலந்திருப்பதை நீ கவனித்தாயோ என்னவோ.. எல்லோரும் நம் திசை கவனிப்பதை போன்றதொரு உணர்வு உள்ளுக்குள் மேலெழ பெருமிதத்தின் அளவு கூடுகின்றது..

கடற்கரை மணலில் தோள் சாய்ந்து நாம் அமர்ந்திருக்கும் கணங்களில், உனக்கும் எனக்கும் மட்டுமே கேட்குமானதொரு மெல்லிய குரலில் உன்னை நான் சீண்ட, நீயோ பொய்க் கோபம் கொண்டு மெல்லமாய் என் மேனியை அடிப்பதாக பாவனை செய்கிறாய்.. தென்றல் தீண்டுவதை விட மேலானதொரு சுகத்தை அப்போது உணர்ந்தாலும், உள்ளுக்குள்ளிருக்கும் ஏதோவொரு உணர்வின் தூண்டலில் வலிப்பதாய் நடித்து உடலை பின்னுக்கிழுக்கிறேன்.. நீயோ காற்றினது திசையில் தலை சாய்க்கும் நாணலைப் போல் என் இழுப்பிற்கு ஈடு கொடுத்து, உடல் வளைத்து தோளில் சாய்கிறாய்.. உலகத்தின் இன்பங்களெல்லாம் ஒட்டுமொத்தமாய் என் திசை ஓடிவந்து தேகம் நனைத்ததொரு உணர்வு உள்ளுக்குள் பரவுகிறது..

உன் உதடுகளில் மோதும் காற்றானது ஓசையுடன் திரும்பி வந்து என் செவிகளில் தொடர்ந்து விழுந்த வண்ணமிருந்தாலும், அருந்திடாத மதுவின் போதையொத்த மயக்கத்திலேயே மனமானது மயங்கி கிடக்கின்றது.. நீ கதைக்கும் வார்த்தைகள் காதுகளுக்குள் நுழைந்து அவற்றின் அர்த்தம் உணர்வதற்குள் உன்னை பற்றிய ஏதோ ஒன்று மனதின் கவனத்தை ஈர்த்து விடுகின்றது.. மீண்டும் அகம் தழுவுகின்றது அந்த மது மயக்கம்.. சொல்வதை கவனிக்கவில்லையென்று மீண்டும் நீ பொய் கோபம் போர்த்திக் கொள்ள, 'உன் உதடுகளிலிருந்து பிரிந்து வந்து விடுவதால் தான் அவ்வார்த்தைகளை என்னுள்ளம் கவனிக்க தவறிவிடுகின்றது' என்பதை எப்படி சொல்லி உனக்கு புரியவைப்பேன்.. மீண்டும் பொய்யாய் அடிக்கிறாய்.. நான் விலகிக் கொள்ள, சிரித்தபடி தோள் சாய்ந்து அணைக்கிறாய்.. மீள முடியாத இன்பத்தில் புதையுண்டதொரு உணர்வு உள்ளுக்குள் படர்கிறது..

1 comment: