"கவலைகள் உனக்குள் வாழட்டும்.. நீ கவலைகளுக்குள் வாழாதே..!!" என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.. படித்தது பிடித்து விட்டதால், பசையில்லாமலேயே பட்டென்று ஒட்டிக் கொண்டு விட்டது மனதில். தெரிந்தோ தெரியாமலோ, பிடித்தோ பிடிக்காமலோ பலர் வாழ்ந்துக் கொண்டிருப்பது கவலைகளுக்குள் தான். ஏதோ ஒன்றை பற்றியதொரு கவலையும் அதை சார்ந்த சங்கடங்களையும் மனதிற்குள் அசை போட்டுக் கொண்டு, அறையினொரு மூலையில் தலையணையை அணைத்தபடியே சாய்ந்துக் கொண்டு தம்மை வருத்திக் கொள்வது பலருக்கு வாடிக்கையாகி விட்டது.
"துன்பமென்னும் பறவை உன் தலை மேல் பறந்து செல்ல அனுமதி.. ஆனால் அது உன் தலையில் கூடு கட்ட அனுமதிக்காதே" என்று சொல்லுவார்கள்.. இங்கே பலர் கூடு கட்ட அனுமதிப்பது மட்டுமல்லாமல், அது குஞ்சு பொறித்து குடும்பம் நடத்தும் அளவிற்கும் கூட விட்டு விடுகிறார்கள். ஒருவிதத்தில் நடந்தவை பற்றியும் அவை சார்ந்த கவலைகள் பற்றியும் மட்டுமே யோசிக்கும் போது, கண்முன் தெரியும் வாய்ப்புகளையும் மகிழ்வதற்காக நமக்கிருக்கும் காரணங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
உண்மையை சொல்லப்போனால், கவலைகளும் பதற்றமும் கடந்த காலத்தின் சுவடுகளை பாதிக்கின்றனவோ இல்லையோ, நிச்சயமாக அவை நிகழ்காலத்தின் இருப்புகளையும் எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் பாதிக்கும் சக்தி படைத்தவை. தவறிழைத்தவன் கவலையிழாந்து பதறும் போது தொடர்ந்து எடுத்து வைக்கும் அடிகளும் தவற ஆரம்பித்து விடலாம். கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு எடுத்து வைத்த அடியை பற்றியோ, அப்போது பாதங்களை பதம் பார்த்த முட்கள் பற்றியோ எண்ணுவது உதவவே உதவாது. எடுத்து வைக்க இருக்கும் அடிகள் பற்றியும், அங்கே பாதங்களை கீறும்படியாக ஏதேனும் உள்ளனவா என்று கடந்தகால படிப்பினைகளின் உதவியுடன் ஆராயும் மனப்பான்மையும் தான் கீழே விழாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
துன்பம் வந்து விட்டால் அறை கதவை தாழிட்டு கண்ணீருடன் படுக்கையில் புரள்வது தான் ஒரே தீர்வென்றால், வீதிகளெல்லாம் எப்போதோ வெறிச்சோடிப் போயிருக்கும்.. வாழ்க்கை கடினமான கரம் கொண்டு உங்களை நோக்கி போர்த் தொடுக்கும் போது, 'ஐயகோ.. நான் என் செய்வேன்..' என்று அதனிடம் கண்ணீருடன் அழுது புலம்பினால், "நிராயுதபானியே நீ போ.." என்று பரிதாபப்பட்டு உங்களை விட்டுவிடுவதற்கு வாழ்க்கையொன்றும் உயர்ந்த கொள்கை மிக்க போர் வீரனல்ல.. நாம் போராட முயலவில்லையென்றால் எதிர்த்து நிற்கும் சோதனைகள் எளிதாக நம்மை வீழ்த்தி விடும்.
எனவே கவலை சார்ந்தவைகளை எண்ணி கண்கலங்கிக் கொண்டிராமல், முன்னோக்கிய பார்வையுடன் எதிர்த்துப் போராடும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கு உங்கள் போர்ப்படையில் மந்திரிகளாகவும் அமைச்சர்களாகவும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். தனியாயிருக்கும் போது உள்ளுக்குள் பரவும் நடுக்கமும் கலக்கமும், ஆதரவாக சிலர் இருக்கும் போது இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போய்விடும். எப்படியிருந்தாலும் வாளெடுத்துக் கொண்டு முன் செல்ல வேண்டியது நீங்கள் தான் என்பதை மறவாதீர்கள்..
No comments:
Post a Comment