Tuesday, April 13, 2010

உறை போர்த்திக் கொள்ளும் சில விசும்பல்கள்..

'ஏன் சோகமாக இருக்கிறாய்..?' என்பதான கேள்விகள் தான் என்னை சுற்றி உலா வருகின்றன இப்போதெல்லாம்.. நட்பும் பாசமும் உள்ளவர்கள் சட்டென்று கண்டு கொள்கின்றனர் சில விஷயங்களை சொல்லாமலேயே.. உதடுகளை மேல்நோக்கி விரிக்க நான் என்ன தான் முயன்றாலும் ஏதோ ஒன்றின் பாரம் தாங்காமல் அவைகளாக கீழ் நோக்கி சுழித்துக் கொள்கின்றன.. நான் என்ன செய்வது!!

என்னால் முடிந்தவரை சிரிக்கிறேன்.. ஆனாலும் சிரிப்பின் சப்தங்கள் காற்றில் கரையும் முன்பே கண்களில் எட்டிப்பார்த்து விடுகின்றன சின்னதாய் சில துளிகள். உதடுகள் நடிப்பது கண்களுக்கு உடனடியாக தெரிந்து விடுகின்றது.. அதுவே பல நேரங்களில் அழுகையின் வீரியம் இன்னும் அதிகமாக காரணமாகி விடுகின்றது.

"ஏன் சோகமாக இருக்கிறாய்..?", என்று கேட்பவர்களுக்கு பெரும்பாலும் நான் அளிக்கும் பதில், "சோகமாக ஒன்றும் இல்லை.. சற்று சோர்வாக இருக்கிறது..!!" என்பது தான். ஆனால் அடிவேர் அறுந்து விட்ட பிறகு மரத்தால் எவ்வளவு நாட்கள் தான் தாக்கு பிடித்து நிற்க முடியும். கூடிய சீக்கிரமே வறட்சி தொற்றி பட்டு போய் சாயம் வெளுத்து விடாதா என்ன.. அப்படி தான் ஆகிவிடுகிறது பல நேரங்களில் என் நிலையும்..

சமாளித்து பதிலளிக்கிறேன் என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் மறுமொழியாக, "நன்றாக ஓய்வெடு.." என்று மட்டும் சொல்லாமல் "பார்த்துக் கொள்.." என்று நாசுக்காக சொல்லி விட்டும் பலர் செல்வதுண்டு. ஒருவிதத்தில் அப்படி அவர்கள் எளிதாக கண்டுபிடிக்கும்படி பதிலளிப்பது கூட என் மனதை அவர்களுக்கு வெளிப்படுத்த நான் எடுக்கும் முயற்சி தான். மனதின் எல்லா நிலைகளையும் (state of mind) மற்றவர்களுக்கு வெளிப்படுத்த எல்லா நேரங்களிலும் அகப்படுவதில்லை வார்த்தைகள்..

ஆழமாக உள்ளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் நடந்து விட்டாலோ அல்லது அதற்கு நிகரான சில சொற்கள் செவி தொட்டாலோ, பட்டென்று உடைந்து சுக்கு நூறாகி போகின்றது இதயம். உள்ளுக்குள் ஏற்பட்டுவிடும் பாதிப்பை கடினப்பட்டு மறைக்க முயன்றாலும் கூட பல நேரங்களில் முடிவதே இல்லை.. எப்படியோ அதன் சாயல் வெளியிலும் தெரிய ஆரம்பித்து விடுகிறது. நாடி நரம்புகளில் கலக்கப்பட்டுவிடும் விஷத்தால் உடல் ஊதா நிறம் தட்டி விடுவதை போல.. இதயம் கீறும் நிகழ்வுகளோ அல்லது வார்த்தைகளோ விஷத்திற்கு எந்த விதத்தில் குறைந்தவை..

இன்னும் சில நேரங்களில், நிகழ்ந்துவிட்ட சம்பவங்களை விட அதை பற்றிய மற்றவர்களது 'ஏன்' என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது தான் கையாள்வதற்கு கடினமான ஒன்று. எனவே தான், பலர் முகமூடிகளை அவ்வப்போது அணிந்து புன்னகைகளையும் சிரிப்புகளையும் முகத்தில் தவள விட்டுக் கொண்டு இருக்கின்றனர். இப்போதெல்லாம் சிரிப்பை பூசிக் கொண்டு புன்னகைக்கும் பல முகங்கள் உண்மையில் அவர்களது முகங்களே அல்ல. அவர்களது நிஜ முகத்தை பெரும்பாலும் அவர்களது அறையின் உட்சுவர்களும் நிலைக் கண்ணாடியுமே காண்பதுண்டு. உறைகளுக்கு பின்னால் தான் பல முகங்களால் விசும்ப முடிகிறது..

அவ்வப்போது நானும் அத்தகைய முகமூடிகளை அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.. காரணம், முகம் மலர்ச்சியாக புகைப்படங்களில் புன்னகையுடன் நான் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல.. என் சோகம் கண்டு என்னை சார்ந்த சிலரது உள்ளம் சுருங்கி அவர்களது கண்கள் ஈரமாகி விடக்கூடாது என்பதற்காக..!!

No comments:

Post a Comment