Monday, May 12, 2014

பிரபலங்களும் அவர்களது மனப்போக்கும் !!

சில நாட்களுக்கு முன்பு, பேஸ்புக்கில் நண்பராயிருக்கும் வளர்ந்து வரும் கவிஞர் ஒருவரை சாட்டில் அழைத்தேன். 

"Hi xxxx.."

கவிஞர் பதில் அனுப்பவே இல்லை. இது முதல் முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு நிறைய கவிதைகள் எழுதினேன். அல்லது கவிதைகள் போன்றவைகளை. கவிதை உலகில் போதிய ஞானம் அற்ற எனக்கு எனது கவிதைகள் பற்றி சற்று தெளிவானவர்களின் மதிப்பீடு தேவைப்பட்டது. அது கவிதைகள் பற்றி மேலும் புரிந்து கொள்ளவும், என்னை நானே வளர்த்துக் கொள்ளவும்.

எனவே அக்கவிஞரிடம் சில மாதங்களுக்கு முன்பு எனது கவிதைகளைப் படித்து விட்டு அவை பற்றிய கருத்துகளை தெரிவிக்குமாறு செய்தி அனுப்பினேன். நண்பரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. பதில் எழுதவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ அவருக்கு பெரிதாய் அவசியம் ஒன்றும் இல்லை தான். என்றாலும் கூட யாரேனும் உதவ மாட்டார்களா என்கிற எண்ணத்தில் நான் விடுத்த கோரிக்கை தான் அது. பொதுவாகவே தமிழில் பெரிதாய் யாரும் கவிதைகள் நன்றாக எழுதுவதில்லை என்று குறைபட்டுக் கொண்டிருந்த கவிஞரிடம் என் கவிதைகளுக்கு கருத்து கேட்டது என் தவறாகக் கூட இருக்கலாம். எனக்கென்னவென்றால் ...... அதை விடுங்கள்.

இந்த முறை நான் அவரை சாட்டில் அழைத்ததற்கு காரணம் புதிதாக வெளிவந்திருக்கும் அவரது கவிதைத் தொகுப்பிற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க தான். உண்மையிலேயே அவரது கவிதை தொகுப்பு வெளி வந்ததிலும் அவர் வளர்ந்து செல்வதிலும் ஏனோ எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

நண்பர் வேறு ஏதோ கோரிக்கை விடுக்க அழைக்கிறேன் என்று நினைத்து விட்டார் போலும். பொதுவாகவே ஒரு பிரபலம் ஆணாக இருக்கும் பட்சத்தில், உங்களது கடிதம் மற்றும் செய்திகளுக்கு பதில் எழுதவோ அல்லது உங்களுடன் உரையாடவோ நீங்கள் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் போலும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் இதை அவ்வப்போது நிரூபித்து இருக்கிறார்கள் என்ற போதும், அவர்கள் மேல் குறை சொல்ல நாம் யார்.

என்னவோ போங்கள். பிரபலங்களும் அவர்களது மனப்போக்கும்..

பால் ஆரோக்கியம்.
12-மே-2014.

No comments:

Post a Comment