Friday, March 12, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (7)

கெளரவம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்வதே தவிர, மற்றவர் உங்களுக்கு தருவதல்ல என்பது என் கருத்து. மாயைகளில் சிக்கி கௌரவ குறைச்சலென்று எண்ணி, வாழ்வில் பலவற்றை 'மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ'வென்று யோசித்து, மற்றவர்களுக்காக அவற்றை செய்யாமல் தவற விட்டு, பின்பு உள்ளுக்குள் வருத்தப்படும் பலரை இப்போதெல்லாம் பார்க்க நேரிடுகிறது.

செத்து மடிந்தாலும் பரவாயில்லை, ஆனால் என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து 'அதை' செய்ய இயலாது என்று, இருத்தலிற்கான கேள்வியினூடும் (question of survival) வறட்டு கெளரவம் பார்ப்பதால் என்ன லாபம். அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகள் உங்களை என்றும் உயரத்திற்கு கொண்டு செல்லாது. மற்றவர் என்ன நினைத்தால் என்ன..? நீங்கள் செய்வது எவரையும் மனதளவிலோ பொருளளவிலோ அல்லது உணர்வளவிலோ பாதிக்காமல் இருக்கும் பட்சத்தில், பிறர் இழிவாக நினைப்பார்கள் என்றெண்ணி உங்களுக்கு தேவையான சிலவற்றை செய்ய தயங்குவதென்பது பெரிய அறிவின்மை அல்லவா..

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களை புரிந்துக் கொள்ளாமல் இழிவாக நினைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு முக்கியத்துவமளித்து நீங்கள் ஏன் உங்களது வாழ்வை இழக்கிறீர்கள்..? வாழ்வில் வரும் வாய்ப்புகளும், கிடக்கும் சந்தர்ப்பங்களும் மிக அரிதாக இருக்கும் போது, 'அவர்கள் அப்படி நினைத்தால் என்ன செய்வது..' 'இவர்கள் இப்படி நினைக்க மாட்டார்களா..?' என்பதாக யோசித்து வரும் வாய்ப்புகளை தவற விடுவீர்களேயானால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.

உங்களை சுற்றி இருப்போரும், இந்த சமுதாயமும் தவறாக நினைக்குமே என்றெண்ணி நீங்கள் விரும்பியவற்றை செய்யாமல், உங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் தியாகம் செய்து வாழ முனையும் உங்களுக்கு இந்த சமுதாயத்திடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் என்ன கிடைத்து விட்டது..? இவர்கள் குறை சொல்லவும், இழிவாக பேசவும், தாழ்வுபடுத்தவுமே முன்வரும் கூட்டம்.. நாளை உங்களது வாழ்வில் ஒரு கஷ்டம் வந்து உதவிகள் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று மறைந்து விடும் மனிதர்கள் தான் அவர்கள்.. அவர்கள் என்ன நினைத்தாலென்ன..! உங்களது விருப்பங்களையும் தேவைகளையும் விட அவர்கள் எந்தவிதத்தில் முக்கியமாகி போய்விட்டார்கள்..

உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, எது உங்களை மகிழ்ச்சிபடுத்துமோ, எது உங்களது இருத்தலிற்கு வழிகாட்டுமோ அவற்றை செய்ய உங்களுக்கு யாருடைய அனுமதி தேவை..? கௌரவமென்னும் மாயையில் சிக்கி உங்களது வாழ்க்கையை தொலைக்காமல், வாழ்வை எப்படி உங்கள் விருப்பப்படி வாழ்வதென்று பாருங்கள். உங்கள் கையில் இருப்பது ஒரேயோரு வாழ்க்கை. அதை மற்றவர்களுக்காக வாழாமல், உங்கள் மனசாட்சிக்கு பயந்து, நீங்கள் விரும்பியவற்றை செய்து, உங்கள் போக்கில் வாழுங்கள்.

நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது தேவைகளோ முக்கியமென்று நினைக்காத சுற்றத்தாரையும் சமுதாயத்தையும் முன்னிலைப்படுத்தி, உங்களது சுயவிருப்பங்களை துறந்து வாழ்கிறேன் என்கிற பெயரில் ஏன் சாகிறீர்கள்..? மாயைகளுக்கு மதிப்பு கொடுப்பதை நிறுத்துங்கள். பிறருக்காக வாழ்வதை விடுத்து உங்களுக்காக வாழ முனையுங்கள். பிறரது கருத்துக்களுக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதான சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் தருவதை விடுத்து, உங்களது மனம் என்ன சொல்கிறது என்பதை முன்னிலைப்படுத்துங்கள். உங்களுக்கு எது தேவை என்பது உங்களுக்கு தான் தெரியும். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களும், அவர்கள் தரும் அறிவுரைகளும், அவர்களது ஆதரிப்புகளும் அவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் சார்ந்தே இருக்கும் என்பதை அறியுங்கள்.

உங்களுக்கென்று ஒரு வாழ்வு இருக்கிறது. அதை மற்றவர்கள் கையில் ஒப்படைப்பதை விட பெரியதொரு இழப்பு எதுவுமில்லை. உணர்வுகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் உள்ளுக்குள்ளேயே பூட்டி வாழ்நாள் முழுதும் வருத்தங்களுடன் வாழ்வதை விட, மாயைகளை உடைத்தெறிந்து, இருக்கும் சில நாட்களில் உங்களது வாழ்வை உங்களது விருப்பப்படி வாழுங்களேன்.. நீங்களோ, உங்களது உணர்வுகளோ, உங்களது சந்தோசமோ முக்கியமென்று உண்மையிலேயே உங்களை நேசிக்கும் மனிதர்கள் நிச்சயமாக உங்களுக்கு ஆதரவாக அப்போதும் இருப்பார்கள் என்பது தான் உண்மை. அதை உணர்ந்தீர்களேயானால் ஒரு விதத்தில் நீங்கள் வாழ்க்கையை கண்டு கொண்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்..

1 comment:

  1. "கெளரவம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்வதே தவிர, மற்றவர் உங்களுக்கு தருவதல்ல""
    உண்மை நண்பரே...

    ReplyDelete