Tuesday, May 18, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (10)

பல உறவுகளில் தொடங்கும் போது இருக்கும் உற்சாகமும், அதன் மீதான மோகமும் போக போக மழை பொழிந்துவிட்ட மேகமாய் வறண்டு விடுகின்றன.. புதிதாக சந்திக்கும் போதும், முதன் முதலில் புன்னகைத்து பேச ஆரம்பிக்கும் போதும், மனதிற்குள் பறக்கும் பட்டாம்பூச்சிகள் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன ['பட்டாம்பூச்சிக்கு வாழ்நாள் குறைவு தானேப்பா' என்றெல்லாம் மொக்கை போடாதீர்கள் ப்ளீஸ்!! :-)]..

நட்பு, நேசம், பாசம், அன்பு, காதல் என்பதில் தொடங்கி, பாராட்டு, வியப்பு, ஆச்சர்யம், மலர்ச்சி என்பதான எல்லா உணர்ச்சிகளையும் உறவுகளின் தொடக்கத்தில் நாம் வெளிப்படுத்த தயங்குவதில்லை. 'நீ என் வாழ்வில் வந்ததில் நான் எவ்வளவு மகிழ்கிறேன்..' என்பதை எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறோம். மலர்களை கொடுப்பதிலிருந்து, கை கோர்த்து நடப்பது, வானவில்லின் வண்ணங்களைக் கொண்டு அழங்கரிப்பதென்று இல்லாத கவிஞனை இதயத்திற்குள் ஏற்றி புதிதாக கிடைத்த உறவை முடிந்தவரை மகிழ்ந்து கொண்டாடுகிறோம்.

'நீ என் வாழ்வில் முக்கியமானவன்(ள்)'.. 'என் உலகமே உன்னை சுற்றி தான் இயங்குகிறது'.. 'என்ன வரம் பெற்றேன் உன்னுடன் உறவாட'.. என்று உள்ளுக்குள் பொங்கும் உணர்வுகளை உறவுகளின் தொடக்கத்தில் வெளிப்படுத்த நாம் தயங்குவதில்லை.. ஆனால் மாதங்களும் வருடங்களும் போக போக, ஏதோ சில காரணங்கள் மனதை மந்தமாக்கி விடுகின்றன. முன்பிருந்த அதே உற்சாகமும், உறவினை கொண்டாட வேண்டுமென்பதான உந்துதலும் மெல்ல மறைய தொடங்கி விடுகின்றன.

ஒருவிதத்தில் அதற்கு காரணம், 'அது தான் நம் வசமாகி விட்டதே..' என்பதான ஒரு அலட்சியபோக்கு.. தேவையான அளவிற்கு பாராட்டியும் கொண்டாடியும் விட்டோமே என்பதான எண்ணம் மனதிற்குள் புகுந்து கொள்கிறது. இன்னும் சிலருக்கோ, 'கழுதை வயதாகிறது.. இன்னுமென்ன கொஞ்சல்கள் வேண்டியிருக்கிறது..' என்று வயோதிகத்திற்கு அப்பாற்பட்ட உணர்வுகளுக்கும் மனதிற்கும் கூட வயோதிகத்தின் முத்திரை குத்தி கொள்கின்றனர். நாட்களாகிவிட்டது என்பதற்காக வாசனை வடிந்துவிட உறவுகளென்ன உதிர்ந்து கையிலிருக்கும் ஒற்றை பூவா..? அது தினந்தோறும் பல மலர்களை பூத்து குலுங்க வைக்க வேண்டிய மிகப் பெரிய மலர் செடியாயன்றோ இருக்க வேண்டும்..!! ஒற்றை இடத்திலேயே அசையாது நிற்கும் மலர்ச்செடிக்கு கூட தொடர்ந்து உயிர் வாழ தினந்தோறும் நீர் தேவைப்படுகிறது.. அப்படியிருக்கும் போது உறவுகள் எப்போதும் உயிரோடிருந்து வசந்தம் வீச அவ்வப்போது அதை கொண்டாடி உற்சாகப்படுத்த வேண்டாமா..?

No comments:

Post a Comment