Thursday, May 13, 2010

ஆலோசனைகளோடு நிற்பதல்ல சமூக அக்கறை!!

சமூகத்தில் ஆங்காங்கே தன் கண்களில் தட்டுப்படும் பிரச்சனைகளையும் அவலங்களையும் பற்றி இப்பொழுதெல்லாம் பலர் இணையதளங்களில் அவர்களது பதிவுகளில் எழுத தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்திருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இணையதளம் ஒரு மிக சிறந்த ஊடகமாக பயன்பட ஆரம்பித்து விட்டது. சமூக அக்கறையின் கண்ணோட்டத்திலான இத்தகைய பதிவுகளை படிக்கும் போது, 'பரவாயில்லையே இவ்வளவு பேர் சமூகத்தின் மீதான அக்கறையுடன் நல்லதொரு சமுதாயத்தை காண துடிப்புடன் இருக்கிறார்களே' என்று மகிழத் தோன்றும் அதே சமயத்தில் ஏமாற்றம் தரக்கூடிய ஒரு விஷயமும் பெரும்பாலான அத்தகைய பதிவுகளில் காண முடிகிறது.

தம் கண்முன் நிகழும் அவலங்களையும், மற்றவர் படும் கஷ்டங்களையும் தமது பதிவுகளில் எழுதி, சமூக அக்கறையுடன் வெளியிடும் அவர்களது பெரும்பாலான ஆலோசனைகள் சமூக ஆர்வலர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் மற்றும் அரசுக்கும் விடுக்கும் அழைப்புகளாகவே உள்ளன. சமூகத்தின் அவலங்களை சரி செய்யக் கூடிய பல நல்ல கருத்துக்கள் இவர்களிடம் இருந்தாலும்,
'இத்தகைய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த இருக்கவே இருக்கின்றன சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு..' என்பதாகவே இருக்கிறது பெரும்பாலும் இவர்களது கண்ணோட்டமும் எண்ணங்களும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை செய்வதற்கு யாரோ ஒரு சிலரோ அல்லது சில அமைப்புகளோ அல்லது அரசோ தான் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதான கண்ணோட்டம் மாற வேண்டும். சமூகத்தின் அவலங்களை கண்டு சகிக்க முடியாமல் கொதித்தெழுந்து அதை சரி செய்வதற்கான ஆலோசனைகளை மட்டும் வழங்காமல் தாமும் நேரடியாக களத்தில் குதிப்பது மிக சிலரே. சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என்பதான சிந்தனை ஏன் மற்றவர்களுக்கு வர மறுக்கிறது என்பது தெரியவில்லை. மாற்றங்கள் எப்போதுமே 'தன்'னிலிருந்தே தொடங்குகிறது என்பதை எல்லோரும் அறிய வேண்டும்.

சமூகத்தின் அவலங்களை தமது பதிவுகளில் எழுதுவதற்கோ அதை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கோ தைரியமாக முன்வரும் இவர்கள், அதை செயல்படுத்தும் பொறுப்பை மட்டும் 'யாரோ ஒருவர்' செய்வார்கள் என்பதான எண்ணத்தில் விட்டு விடுகிறார்கள். ஆலோசனைகள் சொல்வதோடு கடமைகள் எப்போதும் முடிவதேயில்லை. அந்த ஆலோசனைகளை செயல்படுத்த தாமும் தமது கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் எண்ணம் கொண்ட தம் இனத்தவர் சிலரையும் இணைத்து கொண்டு அவற்றை செயல்படுத்த களத்தில் இறங்கும் போது தான் உண்மையான மாற்றங்கள் பிறக்கின்றன. பெரும்பாலும் அத்தகைய பதிவுகளை படிக்கும் போது, பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு, அவற்றை செயல்படுத்த தம்மாலான முயற்சிகள் எடுப்பதை பற்றி அவர்கள் அறிவித்தால் நாமும் கை கொடுக்கலாமே என்று தொடர்ந்து படிக்கும் போது, பெரும்பாலும் முடிவில் எஞ்சுவது ஏமாற்றமே. ஆலோசனைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவிதத்தில், சமூக அவலங்களை கண்டவுடன் தம் உடலுறுப்புகளை மூடிக் கொண்டு அவ்விடம் விட்டு நகரும் மனிதர்களை விட அவற்றை பற்றி எழுதுவதோடு அவற்றை தடுக்க என்ன செய்யலாமென்று ஆலோசனைகளையாவது சொல்ல முன்வரும் இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக அவர்களை பாராட்ட தோன்றினாலும், 'யாரோ ஒருவர் இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று இல்லாமல் சமூகத்தில் ஒரு அங்கமான நீங்களும் உங்களாலான முயற்சிகளை எடுங்களேன்' என்று சொல்லவே தோன்றுகிறது.

வீட்டில் தூசு தட்டியிருக்கும் அலமாரியை பார்க்கும் போது, 'இத சுத்தம் செய்யலாம்ல.. வாரத்துக்கு ஒரு தடவ முடியாட்டியும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவயாச்சும் துடைச்சு விடுங்க..' என்று வீட்டிலிருக்கும் மற்றவரிடம் சொல்லும் பலர், தாமும் வீட்டில் ஒருவர் என்பதையும் அதை தாமே ஏன் செய்யக் கூடாது என்பதையும் யோசிப்பதில்லை. உற்று நோக்குகையில், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதோடு எல்லாம் முடிந்து விட்டதென்று நினைக்கும் அந்த மனோபாவம் அங்கு தான் தொடங்குகிறது. இது ஒரு சின்ன உதாரணம். அவ்வளவே!!

தாம் ஒரு முன்னுதாரணமாக இருந்து ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டுமென்பது பலருக்கு தோன்றுவதேயில்லை. எல்லாவற்றையும் எல்லோரும் செய்ய முடியாது என்பது உண்மையென்றாலும், முயற்சிகளை பகிர்ந்து செயல்படுத்த முன்வருபவர்களை காண்பது அரிதாகி விட்டது. "'இந்த' முயற்சியை நான் எடுக்கிறேன்.. 'அதை' நீங்கள் செய்யுங்கள்.." என்று முதலில் நாமும் செயல்படுத்த களத்தில் இறங்கும் போது தான் அங்கே உண்மையான மாற்றங்களை நாம் காண முடியும். இங்கிருக்கும் எல்லோருக்குமே 'ஸ்டார்டிங் ட்ரபிள்' என்று சொல்லப்படும் ஆரம்ப பிரச்சனை உண்டு. முதல் அடியை எடுத்து வைக்க எல்லோருக்குமே ஒரு தயக்கம் தான். பிரச்சனைகளை கண்டு சகித்து கொண்டு போகும் மக்கள் அத்தகைய அடியை எடுத்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முதல் அடியை நாம் எடுத்து வைக்கும் போது, நமக்கு பின்னால் கைக்கோர்த்துக் கொண்டு பின்தொடர நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக முதல் அடியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டுமென்பதை உணர வேண்டும். மாற்றங்களை கனவுகளிலும் கற்பனைகளிலும் ஏடுகளிலும் மட்டுமே வடிப்பதோடு இல்லாமல், நிஜத்திலும் கொண்டுவர நம்மாலான முயற்சிகளை எடுப்போம்.

No comments:

Post a Comment