பழகியே இருந்தாலும் கூட, பல நேரங்களில் வீட்டின் வெளிப்புற கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழையும் போது, 'நானிருக்கிறேன்..' என்பதை போல அந்த நாய் குரைத்து அதனது எஜமான் போடும் சோற்றிற்கு விசுவாசத்தை காட்டுவது பாராட்டப்பட வேண்டிய விஷயமே என்றாலும், எனக்கு எரிச்சல் தான் வரும். 'அந்நியன் எவன்.. அருகிலிருப்பவன் எவன்..' என்பது கூடவா இந்த நாய்க்கு தெரியாது. நான் அந்த வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்து ஒரு வருடங்களுக்கு மேலாகப் போகிறது. இருந்தாலும், அவ்வப்போது யாரென்றே தெரியாதது போல என்னை பார்த்ததும் சப்தமிட்டு குரைக்கும் போது, "ரொம்ப ஓவரா தான் பண்ற நீ.." என்று ஓங்கி அடிக்க வேண்டும் போலிருக்கும். நான் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் குடியிருக்கிறேன். கீழே அடித்தளத்தில் வீட்டுக்கு சொந்தக்காரர் இருக்கிறார். அவர் வளர்க்கும் நாய் தான் அது. அந்த நாயை பார்க்கும் போதெல்லாம், "உன் சந்தோசம் பற்றி கவலைப்படாதவர்களிடம் அப்படியென்ன விசுவாசம் காண்பிக்கிறாய்..?" என்று கேட்க வேண்டும் போலவே இருக்கும் எனக்கு.
ஒருவிதத்தில் அந்த நாயின் மேல் எனக்கு அவ்வபோது எரிச்சல் வந்தாலும், பல நேரங்களில் அதை பார்க்கும் போது பரிதாபமாக தான் இருக்கும். அந்த வீட்டின் சொந்தக்காரரோ சைவம் சாப்பிடுபவர். பாவம், அந்த நாய்க்கும் அவர்கள் சைவமே வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
"நீங்க வெஜிடேரியன் தான் சாப்பிடுவீங்க.. அந்த நாய்க்காவது கறி எழும்புனு ஏதாச்சும் வாங்கிப் போடுவீங்களா..?", என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.
"அட.. நீங்க வேற தம்பி.. அது வெஜிடேரியன் நாய்.. அது எங்களோட இருந்து அப்படியே பழகிடுச்சு.. அது கறியெல்லாம் சாப்பிடாது..", என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
என்னவோ அந்த நாய்க்கு இவர் கறிசோறு போட்டு, அது வேண்டாமென்று தட்டை எட்டி உதைத்த மாதிரி சொன்னார். "அட பாவிகளா.. இந்த நெனப்பு வேறயா..", என்று தோன்றியது எனக்கு.
இதுவாவது பரவாயில்லை. அந்த நாயை வெகு சில நேரங்களில் மட்டுமே அவர்கள் அவிழ்த்து விடுவதுண்டு. அதுவும் அந்த வீட்டின் சுற்றுச் சுவரை தாண்டி செல்ல அதற்கு அனுமதியில்லை. அந்த நாயினால் போகவும் முடியாது. கதவு சாத்தியே இருக்கும்.
"ஏன்யா.. நீ மட்டும் நாலு பிள்ளைங்கள பெத்து வச்சிருக்கியே.. அந்த நாய்க்கும் அதுக்குண்டான உணர்ச்சி இருக்கும்னு என்னிக்காச்சும் யோசிச்சிருக்கியா..?" என்று கேட்டு அவர் தலையில் ஒரு கொட்டு வைக்க வேண்டும் போலிருக்கும் எனக்கு. இதுவரை அதை கேட்டதுமில்லை. அவர் தலையில் கொட்டியதுமில்லை. ஒருவேளை 'இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே..' என்பதான விரக்தியில் தான் அது யாரை பார்த்தாலும் அப்படி குரைக்கிறதோ என்று கூட தோன்றுவதுண்டு சில நேரங்களில். நாய்கள் வாய் பேசுவதில்லை என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் நம் மக்கள்.
onga feelings naiyamanadhu.
ReplyDelete