வறுமையின் காரணமாக ஒரு தாய் தனது மூன்று பெண் குழந்தைகளை அனாதையாய் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தியொன்று வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவத்தை தினமலர் நாளிதழின் இணையதளத்தில் படித்த போது நெஞ்சுக்குள் வலித்தது.
ராமாயி என்னும் 30 வயது பெண்மணி தனது நான்காவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த சமயத்தில் அவளது கணவன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் தனது மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் தவித்திருந்த ராமாயி, தனது நான்காவது குழந்தையை தனது தங்கைக்கு தத்து கொடுத்துவிட்டு, கூலி வேலை செய்து வறுமையில் வாழ்ந்திருக்கிறார். திடீரென்று ஒரு நாள் வறுமை தாங்காமல் மனமுடைந்த ராமாயி தனது மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பசியில் மட்டுமே தவித்திருந்த அந்த குழந்தைகள், இனி பாசத்திற்கும் ஆதரவிற்கும் கூட தவிக்கட்டுமென்று விட்டுவிட்டு எப்படி இவர்களால் இப்படியொரு முடிவை எடுக்க முடிகிறது? தற்கொலை செய்து கொள்வதெப்படி என்பது இவர்களுக்கு தெரிந்திருப்பதால் எளிதாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். உயிர் விடுவது எப்படியென்பது கூட தெரியாத அந்த இளம் தளிர்கள் என்ன செய்யுமென்பதை ஒரு கணம் ஏன் சிந்திக்காது இப்படி முடிவெடுக்கிறார்கள்..? வறுமையில் உழல்கிறோமென்று தெரிந்தும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை ஏன் பெற்றுக் கொள்கிறார்கள்..?
ஆறறிவற்ற நாய் கூட அடித்து பிடித்து தம் சேய்களுக்கு ஏதேனும் கொடுத்து எப்படியாவது வாழ்ந்து பார்க்க முயலும் போது, இவர்களுக்காக இல்லாவிட்டாலும் பெற்ற குழந்தைகளுக்காகவாவது எப்பாடுபட்டாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதான பிடிவாதம் ஏன் இவர்களுக்கு வருவதில்லை..?
தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி.. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் உழன்று பசியில் தவித்திருக்கும் இன்றைய உலகில் வறுமையென்னும் பிணியை போக்க நாம் என்ன முயற்சிகள் எடுக்கிறோம்..? ஜகத்தினை அழிக்க வேண்டாம். இவர்களது ஜாதகத்தை மாற்றவாவது ஏதேனும் செய்ய வேண்டாமா..? 'பசி' என்பதை ஏட்டில் எழுதி அதை நெருப்பில் போட்டாலோ அல்லது அழிப்பான் கொண்டு அழித்தாலோ, பசியென்னும் பிணி நம் சமூகம் விட்டு போய்விடாது. அதை களைய நம்மாலான முயற்சிகளை நாம் தான் எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பலர் இவ்வாறு பசியில் தவித்திருக்க, மறுபக்கம் நாமோ வீட்டில் கொடுக்கும் சாப்பாட்டை எட்டி உதைக்கிறோம். 'அது இல்லை.. இது இல்லை..' என்று வாழ்க்கையின் மேல் குறை கூறுகிறோம். உணவினை தேவைக்கும் அதிகமாக வாங்கி சமைத்து, பின்பு வீதியில் வீசி எறிந்து வீணாக்குகிறோம். நம் இனத்தை சேர்ந்த பலர் பசியில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதான எண்ணம் பெரும்பாலும் நமக்கு வருவதே இல்லை.
வறுமையில் உழலும் இம்மாதிரியான மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், உணவினை வீணாக்காமல் உங்களாலான உதவியை மறைமுகமாக செய்யுங்களேன். கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவில்லாமல் தவித்திருக்கும் போது, நம்மிடம் பணமிருக்கிறது என்பதற்காகவும் நம்மால் முடியும் என்பதற்காகவும் தேவைக்கதிகமாக உணவு பொருட்களை வாங்கியும் உணவினை சமைத்தும் வீணாக்குவதை தவிர்த்தாலே அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
'நான் உணவை வீணாக்காமல் இருப்பதால், அது எப்படி இத்தகைய மக்களுக்கு உதவியாக இருக்கும்' என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால், உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் தேவையான உணவு பொருட்களை மட்டுமே வாங்கும் போது, அத்தகைய உணவு பொருட்களுக்கான தேவை குறைகிறது. எனவே பொருட்களுக்கான தேவை குறையும் போது, உற்பத்தி அதே அளவில் இருந்தாலும் கூட விலையும் குறையும். அவ்வாறு விலை குறையும் போது அவற்றை நடுத்தர மற்றும் கீழ்நிலை மக்களும் கூட எளிதாக வாங்க முடியும்.
நம்மிடம் பணமிருக்கிறது என்பதற்காகவும், வீணாக்குவதால் நமக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை என்பதற்காகவும் எதையுமே வீணாக்குவதென்பது மறைமுகமாக இந்த சமூகத்திற்கு நாம் செய்கின்ற தீமையே.
No comments:
Post a Comment