மொழியிலுள்ள அத்தனை வார்த்தைகளும் தீர்ந்த பின்பு நமக்குள் நிலவும் அந்த மௌனப் பொழுதுகளின் போது தான் பேசுகின்ற மௌனத்தை நான் முழுதாய் உணர ஆரம்பித்தேன்.. இரவில் பல மணி நேரம் கதைத்தப் பின்னும் அலைபேசியை வைக்க மனமில்லாது, "அப்புறம்" என்று நீ கேட்க, அடுத்தென்ன பேசலாமென்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி வழியே கசியும் உன் மூச்சுக் காற்றின் மெல்லிய சப்தம் என் சிந்தையை ஆழ்நிலை போதையொன்றில் ஆழ்த்துகின்றது..
நாமிருவரும் பேசிக் கொண்ட தருணங்களை விட நம்மிருவருக்குமிடையில் நிலவுமந்த மௌனமான பொழுதுகளும், செவி தட்டும் இதழுதிர்க்காத வார்த்தைகளும் , நாசியின் இயக்கம் நிமித்தம் வெளிவரும் சுவாசத்தின் சன்னமான சப்தங்களும், நெஞ்சுக்குள் படருமந்த அருகாமையின் உணர்வுகளும் தான் நம்முறவிற்கு உயிரூட்டுவதான எண்ணம் எப்போதும் தோன்றுவதுண்டு..
பொழுது புலரப் போவதற்கான அறிகுறிகள் தட்ட, 'அலைபேசியை நீ வை..' என்று நான் சொல்ல, 'மாட்டேன், நீ வை..' என்று நீ சொல்ல, 'நான் வைக்க மாட்டேனெ'ன்று இருவரும் மாறி மாறி அடம் பிடிக்க நீளும் அப்பொழுதுகளில் சொட்டும் நம் காதலின் துளிகளில் வழியும் போதை.. பருக பருக இன்பம்..
இருவரும் ஒன்றாக வைக்கலாமென்று எண்களை எண்ணி முடித்தப் பின்பும் கூட நீ வைப்பாயென்று நானும் நான் வைப்பேனென்று நீயும் மூச்சை இழுத்துப் பிடித்தபடி காத்திருக்க, மீண்டும் பொழுதுகளை ஆட்கொள்கின்றது பேசுகின்ற அதே மௌனம்.. அதை தொடர்ந்த, "எனக்கு தெரியும்டா நீ வைக்க மாட்டனு" என்பதான உன் சிரிப்பொலிகள்.. எப்படியோ அலைபேசியை வைத்தப் பின்னும் கூட இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன உன்னிதழ்கள் உதிர்த்த வார்த்தைகளும் நீ பேசிய மௌனங்களும்..
பொழுது புலரப் போவதற்கான அறிகுறிகள் தட்ட, 'அலைபேசியை நீ வை..' என்று நான் சொல்ல, 'மாட்டேன், நீ வை..' என்று நீ சொல்ல, 'நான் வைக்க மாட்டேனெ'ன்று இருவரும் மாறி மாறி அடம் பிடிக்க நீளும் அப்பொழுதுகளில் சொட்டும் நம் காதலின் துளிகளில் வழியும் போதை.. பருக பருக இன்பம்..
ReplyDeleteவாவ் அருமை பால்
ரொம்ப நன்றீங்க சக்தி :)
ReplyDelete