Friday, January 29, 2010

முன்னோக்கிய பயணத்திலெழும் பின்னோக்கிய நினைவுகள்..


சில நாட்களுக்கு முன்பு எதற்காகவோ எதையோ புரட்டிக் கொண்டிருக்கும் போது தட்டுபட்டது அந்த காகிதம். துண்டு காகிதமாக இருந்தாலும் சட்டென்று மனதை தூண்டும் மேற்கோளொன்று கண்ணில் பட்டது.

"வாழ்க்கையை பின்னோக்கியே புரிந்துக் கொள்ள முடியும் ஆனால் அதை முன்னோக்கி தான் வாழ்ந்தாக வேண்டும்.." [Life can be understood backwards but it has to be lived forward]

வாழ்க்கையின் மிக பெரிய தத்துவங்களிளொன்றை ஆழமாக பொதிந்து அழகாக வடிக்கப்பட்ட வரி அது.. சில விஷயங்கள் நடந்து முடிந்த பின்பு தான் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஒரு சிலருடன் பழகிய பின்பு தான் இனி இம்மாதிரியான நபர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிற புரிதல் ஏற்படுகிறது. சில நிகழ்வுகள் நடந்த பின்பு தான் 'அதை அவ்வாறு செய்திருக்க கூடாது..' என்பதான எண்ணமும், 'அதை இவ்வாறு செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கு'மென்பதான சிந்தனைகளும் தோன்றுகிறது. சொல்லப்பட்ட வார்த்தைகளின் விளைவாக மற்றவரிடமிருந்து வரும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை கண்ட பிறகு தான் நமது எண்ணங்களை அவ்வாறு வெளிப்படுத்தியிருக்க கூடாது என்பதும் அவ்வாறு பேசுதல் தவறென்பதும் புரிகின்றது. இப்படி எத்தனையோ.. சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழ்வில் படிப்பினை தருவதான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தானிருகின்றன. 'ஏன்.. எதற்கு.. எப்படி..' என்பதான கேள்விகளுடன் வாழ்வின் கடந்த கால சுவடுகளை தூசு தட்டி ஆராய்வதில் தான் பலரின் (நான் உட்பட) நேரம் செலவழிக்கப்படுகிறது. இன்னும் பலரோ, நடந்து முடிந்தவை பற்றிய ஆதங்கம், கோபம், வெறுப்பு, வருத்தம், வேதனையென்று பலவித உணர்ச்சிகளின் கலவைகளினூடே நிகழ்காலத்தையும் கடந்த காலத்தின் நிழலிலேயே வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.

கடந்த கால பக்கங்களை புரட்டிப் பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. அது ஒரு வகையில் அவ்வபோது அவசியமும் கூட. ஏனென்றால் அவை வாழ்வின் முன்னோக்கிய பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும், மீண்டும் சறுக்கி விழாமல் கவனமாக பயணிக்கவும் உதவும். அதே நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளை படிப்பினையாக அல்லாமல் பாரமாக எடுத்துக் கொண்டோமேயானால் வாழ்க்கையில் முன்னோக்கி நகர இயலாது. அது தலையில் பாராங்கல்லை சுமந்தபடியே நடப்பதை போன்றது. நீண்ட தூரம் தொடர்ந்து நடப்பதென்பது கடினமான காரியமாகிவிடும்.

'ஏன் இப்படி நடந்ததென்பதான' கவலைகளுக்குள்ளேயே நமது நேரத்தை செலவிட ஆரம்பித்தோமென்றால், இப்போது நடந்து கொண்டிருப்பதிலும் இனி நடக்க இருப்பதிலும் கவனம் செலுத்த தவறி விடுவோம். எனவே நடப்பதும் நடக்க இருப்பதும் தவறுதலாக போய் வருங்காலத்திலும் இதே கவலைகளுக்குள்ளேயே வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பின்னோக்கிய நினைவுகளை முன்னோக்கி செல்வதை தடுக்கும் தடைகளாக பாவிக்காமல், சரியான திசையில் முன்னோக்கி செல்ல உந்து சக்திகளாக உபயோகிப்பதே விவேகம்.

தவறிழைப்பதில் தவறொன்றும் இல்லை. அது முதன் முறையாக இருக்கும் வரையில்.. செய்த தவறையே திரும்ப செய்யாதிருக்க ஏற்கனவே செய்த தவறுகளிலிருந்து பாடங்களை கற்று கொள்வது அவசியமாகிறது. தவறி விழலாம்.. அது பல நேரங்களில் தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் விழுந்த இடத்திலேயே 'விழுந்து விட்டோமே' என்று யோசித்தபடியே படுத்திருப்பதில் பயனில்லை. எழுவதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். "விழுந்ததால் காலொடிந்து விட்டதே, நானெப்படி எழுவது..?" என்று கேட்பீர்களேயானால், அத்தகைய கேள்வியை கேட்குமளவிற்கு தெளிவாயிருக்கும் (consciousness) உங்களுக்கு ஊர்ந்தாவது உதவி கிடைக்குமிடத்திற்கு செல்லும் சக்தி இருக்கிறதென்று தான் அர்த்தம். அதையாவது செய்யுங்கள். விழுந்த இடத்திலேயே இருப்பதால் எதையுமே சாதிக்க முடியாது; சாவதை தவிர..

Tuesday, January 26, 2010

முன்னுரிமை யாருக்கென்பதில் தெளிவாயிருங்கள்..

பத்தோடு பதினொன்றாகவும் (one among the ten), மற்றவர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுக்கு பதிலீடாகவும் (alternative or choice) மட்டுமே நினைத்து நம்மோடு பழகும் மனிதர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்கள் முக்கியமென்று அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தோமேயானால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. நம்மை பெரிதாக எண்ணாத சிலருக்கு நாம் முக்கியதுவம் அளித்தோமேயானால் விரைவிலேயோ அல்லது பின்னாளிலோ நமது இதயத்தின் ஆழம் வரை பதியுமளவிற்கு மிக பெரிய காயத்தை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

அவர்களை பொறுத்த வரையில் நீங்களொரு விளையாட்டு பொம்மை. தேவைப்படும் போது எடுத்து விளையாடி பின்பு கிடப்பில் போட்டு விட்டு தங்கள் வாழ்நாள் முழுதும் கூட இனி அவர்கள் உங்களை கண்டுக் கொள்ளாமல் போக கூடும். காரணம் நீங்கள் அவர்களுக்கு பத்தோடு பதினொன்று. அவர்கள் உங்களை என்றுமே முதன்மைபடுத்தி எதையும் யோசிப்பதில்லை. நீங்கள் தான் அவர்களை மையபகுதியாக வைத்து அவர்களை சுற்றி உங்களது உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; அவர்கள் உங்களை விட்டு நகரும் போது உங்களது உலகம் சரிந்து விடுமென்பது புரியாமல்..

அவன்(ள்) என்னை கண்டுக் கொள்ளவில்லையென்றால் பரவாயில்லை ஆனால் நான் அவனு(ளு)க்காக உருகுவேன்.. எதையும் செய்வேன்.. உயிரை கொடுப்பேன்.. என்பதை விட மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை புரிந்துக் கொள்ளாமலோ அல்லது புரிந்துக் கொள்ள தயாராக இல்லாமலோ இருந்தோமேயானால், மீண்டும் மீண்டும் வேகமாக ஓடி சென்று சுவற்றில் மோதி நமது மூக்கை நாமே உடைத்துக் கொள்வதை போன்றதாகி விடும் வாழ்க்கை.

உங்களை முக்கியமென்று நினைக்காத சிலருக்காக நீங்கள் வருத்தப்படுவதிலோ, உருகுவதிலோ, அவர்களுக்காக கண்மூடித்தனமாக எதையும் செய்ய தயாராக இருப்பதிலோ அர்த்தமொன்றும் இல்லை. அவ்வாறு செய்வதால் உங்களுக்கு அதிகபட்சமாக கிடைப்பது மனதளவிலான (சில நேரங்களில் உடலளவிலும் கூட) ஆறாத காயங்கள் மட்டுமே. உங்களது சிந்தனைக்கும், அன்புக்கும், அக்கறைக்கும் அவர்கள் சிறிதும் தகுதியானவர்கள் இல்லையென்பதை உணருங்கள்.

உங்களை பெரிதாக மதிக்காதவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதால், உங்களையே உலகமென்று எண்ணி வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிலரை நீங்கள் கண்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட பாடம். நம்மை பெரிதாக எண்ணாத சிலரை முக்கியமானவர்களென்று நினைத்து வாழ்வின் சில மதிப்பு மிக்க கணங்களை அவர்களுக்காக இழந்து, உணர்வளவிலும் மனதளவிலும் காயப்பட்டு, கோமாளியை போன்று வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் அழும்படியான சூழ்நிலைகளுக்குள் சிக்கியவர்களில் நானும் ஒருவன்.

ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள்: "Don't allow someone to be your priority when you are just their option.." அதே அழகுடன் மொழி பெயர்க்க தெரியாததால் அதை தமிழாக்கம் செய்யவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள அர்த்தம் மிக மிக ஆழமானது.. நிச்சயமாக நடைமுறைபடுத்த வேண்டியது.. நம்மை முக்கியமென்று நினைக்காதவர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அது யாராக இருந்தாலும் சரி. அவ்வாறு முக்கியத்துவமளித்து அவர்களுக்காக உருக ஆரம்பித்தால், உங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்.. ஒருவிதத்தில் எனது வாழ்க்கையை நான் வாழும் விதத்தை மாற்றியமைத்த வார்த்தைகள் அவை.. சொல்ல வேண்டுமென்று தோன்றியது அதனால் சொல்கிறேன் :-)

Saturday, January 23, 2010

தொடர்ந்திடும் முட்டாள்தனம்..

உறவு மற்றும் நட்பு வட்டங்களிலிருந்து வரும் கோரிக்கைகளை பல நேரங்களில் 'முடியாது..' 'இல்லை..' என்று சொல்ல முடியாமல் தவிக்கும் பலரில் நானும் ஒருவன். தமது சக்திக்கு மீறியதாக இருந்தாலும், அவர்களது கோரிக்கையை நிறைவு செய்வதால் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் உணர்வளவிலோ பொருளளவிலோ பாதிக்கும் என்பதான சூழ்நிலையிருந்தாலும் கூட பல நேரங்களில் 'இல்லை (no).. என்னால் அப்படி செய்ய இயலாது (அல்லது) உங்களுக்கு உதவ கூடிய சுழலில் நான் இல்லை..' என்று சொல்வதற்கு உதடுகள் ஒத்துழைப்பதில்லை.

நன்றாக பழகியவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற கூடிய சூழ்நிலையில் உண்மையிலேயே இல்லாவிட்டாலும் கூட, 'இல்லை.. என்னால் இயலாது' என்று சொல்லும்படியாக மனதிலிருந்து கட்டளைகள் வரும் முன்பே, 'சரி..' என்று நா சொல்லி விடுகிறது. அதன் பின்பு 'சரி..' சொல்லிவிட்டோமே என்பதற்காகவே, மிகவும் கஷ்டப்பட்டு தனது சுய தேவைகளையும் சுய விருப்பங்களையும் துறந்து எப்படியாவது அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

மனதளவிலும் பொருளளவிலும் நஷ்டப்பட்டு, 'நம்மிடம் கேட்டுவிட்டார்களே..' என்று கஷ்டப்பட்டு அவர்களுக்கு நாம் உதவ, அவர்களோ உணர்வளவிலான நமது பலவீனத்தை ஆதாயப்படுத்தி நம்மை அவர்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு எளிதாக அவர்களது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். அவர்களது தேவைகளுக்காக உபயோகித்துக் கொள்ளும் நோக்குடன் நம்மை அணுகும் சுயநலவாதிகள் தான் நம்மை சுற்றி உலா வரும் மனிதர்களில் பலர். அவர்களை பொறுத்தவரையில் அவர்களது காரியம் ஆகா வேண்டும். அவ்வளவே.. நம்மை பற்றியோ, நம் உணர்வு மற்றும் சூழ்நிலை பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை. உண்மையை சொல்லப் போனால், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற கூடிய சூழ்நிலையில் நாம் இல்லையென்பதும் அவர்களது கோரிக்கை நியாயமற்றது என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உணர்வளவிலான நமது பலவீனத்தால் நாம் 'இல்லை..' என்று சொல்ல மாட்டோம் என்பதை பயன்படுத்தி நம்மிடம் காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். நமது உணர்வுகளுடன் எளிதாக விளையாடி நம்மை 'சரி..' என்று சொல்ல வைத்து வெற்றிப் புன்னகையுடன் சென்று விடுகின்றனர். நாமோ அவர்கள் சென்றவுடன், 'ஏன் சரியென்று ஒத்துக் கொண்டோ'மென்று தனிமையில் சிந்தித்து நம்மை நாமே கடிந்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை தான் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறாக நாம் அவர்களுக்கு உதவி கொண்டிருக்க, நமது அத்யாவசிய மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் அவர்களிடம் உதவி கேட்டால், 'இல்லை.. என்னால் இப்போது உதவ முடியாது..' 'உனக்கு அதை கொடுக்கும் சூழ்நிலையில் நான் இல்லை..' என்று எவ்வளவு எளிதாக சொல்லி நழுவிக் கொள்கிறார்கள். என்ன தான் இத்தகைய பாடம் கற்பிக்கும் நிகழ்வுகள் நடந்து 'உனது தேவைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து உதவுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்ல.. அவர்களிடம் எச்சரிக்கையாயிரு!!' என்று நமக்கு உணர்த்தினாலும், அதே மனிதர்கள் மீண்டும் நம்மிடம் வந்து "எனக்கு இது வேண்டும்.. இதை செய்துக் கொடு.." என்று கேட்கும் போது, 'உன்னை உபயோகித்துக் கொள்ள மறுபடியும் வந்து விட்டார்கள்.. இந்த முறையாவது முட்டாளாகாமல் தைரியமாக முடியாது என்று சொல்..' என்று மனம் அடித்துக் கொண்டாலும் கடைசியில் 'சரி..' என்று சொல்ல தான் வாய் வருகிறது. மீண்டும் முட்டாளாகவும் இளிச்சவாயாகவும் நாம் தயாராகி விடுகிறோம்.

அவர்களது தேவைகளுக்காக எளிதாக நம்மை பயன்படுத்திக் கொள்ளும் அத்தகைய சுயநல மனிதர்களை காணும் போதும், அவர்களுக்கு 'இல்லை..' என்று சொல்லாமல் மீண்டும் மீண்டும் நாம் முட்டாளாகும் சூழ்நிலைகளிலும், மனதளவில் கோபமும் ஆதங்கமும் கொள்ள முடிகிறதே தவிர அத்தகைய மதிப்பற்றவர்களிடம் உணர்வளவில் பலவீனமாக இல்லாமல் எச்சரிக்கையாக இருந்து, அடுத்த முறை 'இல்லை' என்று சொல்ல முடியவில்லை. நம்மை அவர்களது சுயநலத்திற்காக பயன்படுத்தி, மாடி படிகளைப் போன்று நம் மீது கால் வைத்து எளிதாக அவர்கள் வாழ்க்கையில் மேலேறி சென்று கொண்டிருக்க, நாமோ உதவுகிறோமென்கிற பெயரில் இன்னும் அடிமட்டத்திலேயே உழன்றுக் கொண்டிருக்கிறோம்.

உணர்வளவில் பலவீனமாக இருப்பது தவறான காரியமொன்றும் அல்ல. ஆனால் நாம் யார் மீது அவ்வாறு இருக்கிறோமோ அதற்கு அவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமென்று தோன்ற ஆரம்பித்து விட்டது இப்போதெல்லாம். விழித்துக் கொள்ளும் தருணம் வந்து விட்டது.. எனக்கும், என்னை போன்று இருப்பீர்களேயானால் உங்களுக்கும்..

Thursday, January 14, 2010

அதிர்ச்சி வைத்தியங்கள்..

இக்கட்டான சூழ்நிலைகளிலும், வாழ்வின் துயர நேரங்களிலும் தான் சில மனிதர்களின் உண்மையான ரூபங்களை (true color) உணர முடிகின்றது. பல நேரங்களில் நாம் சந்திக்கும் கஷ்டங்களையும் துன்பங்களையும் விட, அவ்வாறான நேரங்களில் நம்முடன் இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் நம்மை கண்டுக் கொள்ளாத போது, 'ஏன்.. என்னாயிற்று..?', என்று கேட்க கூட அவர்கள் முன்வரவில்லையே என்பதான வருத்தமே மிக அதிகமாக மனதை பாதிக்கின்றது.

"நாம் அவர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறோம்.. அவர்களது கடினமான பயணங்களின் போது நம் தேவைகளை விட்டுக் கொடுத்து அவர்களுடன் எவ்வாறெல்லாம் கூட இருந்து ஆறுதல் அளித்திருக்கிறோம்.. அவர்களுக்காக எவ்வளவு அக்கறை எடுத்திருக்கிறோம்.. நமக்கு அவர்கள் முக்கியமானவர்களென்று எத்தனை விஷயங்களை அல்லது எத்தனை மனிதர்களை அவர்களுக்காக இழந்திருக்கிறோம்.. ஆனால் இன்று நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்முடன் இருக்கவும், ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்பதற்கும் கூட அவர்கள் தயாராக இல்லையே" என்பதான ஆதங்கமே அதிகமாகின்றது. மனதை அது காயப்படுத்தவும் செய்கின்றது.

அத்தகைய நேரங்களில், 'நமது வாழ்நாளின் பெரும் பகுதியை ஏன் அத்தகைய மதிப்பற்றவர்களுக்காக (worthless people) வீணாக்கினோம்..?' என்பதானதொரு ஆதங்கம் மனதை இடைவிடாமல் அரிக்க ஆரம்பித்து விடுகிறது. துயரம் சூழும் நேரங்களில் உடனிருந்து ஆறுதல் தரும் உறவுகளையும் நட்புகளையும் அடையாளம் கண்டு கொள்வதென்பது மிக கடினம். அது அத்தகைய சூழ்நிலைகள் வரும் போது தான் தெரிய வரும். அத்தகைய நேரங்களில் நமக்கு தோள் கொடுக்க சில மனிதர்கள் இல்லையென்றால் நம் வாழ்வில் என்ன சம்பாதித்தோம் என்பதான கேள்வி குறியே எழுகிறது மனதில். எல்லாவற்றையும் விட, நம்முடன் கூட இருப்பார்கள் என்று நம்பியிருந்த சிலர் அத்தகைய நேரங்களில் திடீரென்று 'நீ யாரோ நான் யாரோ..' என்பதை போன்று நம்மை விட்டு விலகி கொள்ளும் போது அதனால் ஏற்படும் வேதனையும் வலியும் மிக ஆழமாக மனதை பாதிக்க கூடியது.

ஒரு சிலரை அவர்களின் உண்மையான சுயரூபம் அறியாமல் முழுமையாக நம்பி, எப்போதும் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று தவறுதலானதொரு எண்ணத்துடன் வாழ்பவர்களுக்கு பல நேரங்களில் வாழ்க்கை தருவதோ அதிர்ச்சி வைத்தியம் தான். ஆனால் நாம் நம்பியவர்களின் சுய ரூபங்கள் தெரியவரும் நேரங்களில் அதை மனதளவில் தாங்கிக் கொள்ளும் நிலையில் நாம் இருப்பதில்லை. அதற்காக எல்லோரும் நம்பிக்கைகுரியவர்களல்ல என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வாறான மனிதர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவு என்பது எனது கருத்து.

ஆனால் நாம் நம்பியிருந்தவர்கள் நமக்கு மிகவும் தேவையான தருணங்களில் நம்மை விட்டு விலகும் போது, அதனால் மனதில் ஏற்படும் வருத்தத்தையும் வலியையும் தவிர்க்க முடியாது என்றாலும், அதை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதிலும் எந்த பயனுமில்லை. அடுத்து என்ன செய்வது என்பதிலும், நாம் எவ்வாறு இப்போது முன்னோக்கி நகரலாம் என்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

பொதுவாகவே 'வாழ்கையில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்..' என்பதை ஏற்றுக் கொள்ள கூடிய பக்குவத்தை நமக்குள்ளேயே வளர்த்துக் கொண்டேமேயானால் அத்தகைய 'அதிர்ச்சி வைத்திய' சூழல்களில் மனதளவில் மிக ஆழமான காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வாழ்வின் சில நேரங்களில் நாம் தனியாக பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய கணங்கள் ஒருவர் மட்டுமே செல்ல கூடிய குறுகிய வழியை போன்றது. எனவே அதிகமாக சார்ந்திருத்தலென்பது நமது சுயத்தின் (self) மீது இருக்க வேண்டுமே தவிர மற்றவர் மீதல்ல. அவ்வாறான பக்குவமும், மனதளவில் அதற்காக நம்மையே நாம் தயார் செய்து கொள்வதும் நாம் மட்டுமே தனியாக சந்திக்க வேண்டிய வாழ்க்கையின் சில கணங்களை எளிதாக கடந்து செல்ல உதவும்.

Tuesday, January 12, 2010

பழகிவிடும் ஏமாற்றம்..


வழக்கம் போல் காலையில் விசில் ஊதும் சப்தம் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். பெங்களூரு மாநகரில் தினந்தோறும் காலையில் குப்பைகளை வாங்கிக் கொண்டு போக வரும் துப்புரவு தொழிலாளர்கள் கொடுக்கும் ஒலி (signal) தான் அது. நான் வசிக்கும் தெருவில் தினமும் மூன்று சக்கர வண்டியை தள்ளிக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை வாங்கிக் கொண்டு போகும் அந்த பெண்மணிக்கு முப்பத்தைந்து வயதிருக்கும்.

விசில் ஊதும் சப்தம் ஒன்றாக இருந்தாலும், அன்று வந்திருந்தது வழக்கமாக வரும் பெண்ணல்ல. அவளுக்கு பதிலாக வேறொரு பெண் வந்திருந்தாள். குப்பைகளை கொண்டு போய் கொட்டும் போது ஏனோ தெரியவில்லை, "அந்த பெண் ஏன் வரவில்லை.." என்றொரு கேள்வி எழுந்தது.. எனக்கும் அவளுக்கும் துளியும் சம்பந்தமில்லையென்றாலும் , "என்னாயிற்று அவளுக்கு..?" என்பதான கவலை கலந்த எண்ணம் என் மனதை ஆக்கிரமித்தது. பழகி விட்ட முகத்திற்கு பதிலாக இன்னொரு முகத்தை பார்க்க நேர்ந்ததோ அல்லது எப்போதும் வரும் அந்த பெண்ணின் முகத்தில் பூக்கும் சிநேக புன்னகையை புதிதாக வந்த பெண்ணின் முகத்தில் காண முடியாததோ அதற்கு காரணமாக இருக்கலாம்.

குப்பையை கொட்டிவிட்டு திரும்புகையில், பக்கத்துக்கு சந்திலிருந்து துள்ளி குதித்துக் கொண்டு நாய் குட்டியொன்று  அங்கு ஓடி வந்தது.. விசில் சப்தம் கேட்டதும் வாலை ஆட்டிக் கொண்டு அங்கு பாய்ந்து வந்த அந்த நாய் குட்டி புதிதாக வந்திருந்த பெண்ணை பார்த்ததும் சற்று உற்சாகமிழந்தது. அதன் முக மலர்ச்சி வேகமாக சுருங்கியதும் அதன் வாலாட்டும் வேகம் குறைந்ததும் அதை தெளிவாக காட்டியது.

முன்பு வந்து கொண்டிருந்த பெண் வரும் போதெல்லாம் இந்த நாய் குட்டியும் அவள் சப்தம் கேட்டு வாலாட்டிக் கொண்டு ஓடி வர, அவளும் ஒரு பெரிய புன்னகையுடன் புடவை மடிப்பிலிருந்து சில பிஸ்கட்களை எடுத்து அதற்காகவென்றே சின்னதாக உடைத்து அன்பாக அதனருகில் வைப்பாள். அதுவும் மெல்லிய சிணுங்கலுடன் சாப்பிடும். இவ்வாறாக அவள் காலையில் வந்து விசிலடிப்பதும், அந்த நாய் குட்டி ஓடி வருவதும், அவள் அதற்கு சிரித்த முகத்துடன் பிஸ்கட் வைப்பதும், அது சாப்பிட்டு விட்டு கொஞ்சலுடன் வாலாட்டிக் கொண்டே அவளுடன் கொஞ்ச தூரம் நடந்து போவதுமான காட்சியை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். இரு வெவ்வேறு உயிர்கள் சிநேகம் பரிமாறிக் கொள்ளும் காட்சி அது.. பார்பதற்கு மிக அழகானது..

ஆனால் இன்று எப்போதும் வரும் அந்த பெண்ணை காணாததால் அந்த நாயின் முகத்தில் ஏமாற்றம். புதிதாக வந்திருந்த பெண் அந்த நாய் குட்டியை கண்டு கொள்ளவில்லை.. உற்சாகம் முகத்தில் குறைந்திருந்தாலும், அது அன்று வந்திருந்த பெண்ணிடம் சிநேகத்துடன் வாலாட்டிக் கொண்டு நட்பு பரிமாற்ற முயல, அவளோ அதை விரட்டி விட்டு சட்டென்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அது ஏமாற்றத்துடன் அங்கு கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து விட்டு திரும்பி சென்றது.

அதே காட்சி அடுத்த நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்தது. முன்பு வந்து கொண்டிருந்த பெண் மீண்டும் திரும்ப வந்திருக்க கூடும் என்கிற எதிர்பார்ப்புடன் துள்ளி குதித்து வரும் அந்த நாய் குட்டி, அவள் இன்றும் வரவில்லையென்று  தெரிந்ததும் ஏமாற்றம் கலந்த முகத்துடன் சற்று நேரம் அங்கிருந்து விட்டு திரும்பி போகும். அவள் இப்போதெல்லாம் வருவதில்லை.. ஏமாற்றம் பழகிவிட்டதாலோ என்னவோ அந்த நாய் குட்டியும் இப்போதெல்லாம் விசில் சப்தம் கேட்டு அந்த நேரத்திற்கு அங்கு வருவதேயில்லை.. ஏனோ தெரியவில்லை, வாழ்வின் ஒரு பகுதியினுடைய அர்த்தத்தை அந்த காட்சிகள் பிரதிபலிப்பதாக என் மனதிற்கு பட்டது..

Monday, January 4, 2010

ஆசைகள் பற்றியவை..

மனிதனின் ஆசைக்கு தீனி போடுவதென்பது ரொம்பவே கடினமான விஷயம் தான்.. சத்குரு ஜாக்கிவாசுதேவின் 'அத்தனைக்கும் ஆசைப்படு..' தலைப்பை படித்த போது, "அதை சொல்லியா கொடுக்க வேண்டும்.. அது தான் எல்லாவற்றின் மேலும் ஆசை கொண்டு அவற்றை துரத்தி அலைகிறோமே.. ஆசைப்படுவதெல்லாம் சரி தான், ஆனால் ஆசைப்படுவதை அடைந்த பிறகு அதை முழுவதுமாக அனுபவிக்க முயல்கிறோமா..?" என்றொரு கேள்வி எழுந்தது.. பொருளளவில் மட்டுமல்லாது சிந்தை அளவிலும், மதிப்பு, கெளரவம், பதவி என்று எதுவெல்லாம் மனிதனால் கற்பனை செய்ய முடிகின்றதோ அத்தனைக்கும் நாம் ஆசைப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்..இந்த பதிவை சத்குரு ஜாக்கிவாசுதேவ் அவர்களின் எழுத்துக்கள் பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது வேறு.. இது வேறு.. அந்த தலைப்பை படித்த போது எனக்குள் எழுந்த எண்ணங்களைப் பற்றிய பதிவே இது..

பலருக்கு ஆசைப்படும் போது இருக்கும் உந்துதலின் (curiosity) வீரியம் அதனை அடைந்த பிறகு, அதை அனுபவிக்க இருப்பதில்லை. அந்த பலரில் நானும் அவ்வபோது அடக்கம் என்பதும் உண்மை. ஆசைப்பட்ட ஒன்றை அடைந்த பிறகு, அடுத்த ஆசையை பற்றியும் அதை அடைவதெப்படி என்று வியூகம் அமைப்பதிலும் மனம் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றது. அடைந்ததை முழுதாக அனுபவிக்க எப்போதும் முயல்வதில்லை. ஒருவேளை, "இது தான் நமக்கு சொந்தமாகிவிட்டதே, அதை எப்போது வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம்.." என்னும் அலட்சியப் போக்கு கூட ஒரு காரணமாக இருக்கலாம். முடிந்தவரை ஆசைப்பட்ட எல்லாவற்றையும் தம் வசப்படுத்திக் கொள்ளும் மும்முரத்தில் இருப்பதாலும், மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லை என்பதாலும் கடைசிவரை ஆசைப்பட்டவைகளை துரத்திக் கொண்டு ஓடுவதிலேயே பலரின் கவனமிருகின்றது..

ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடைந்த பின், 'இனி அவற்றை அனுபவிக்கலா'மென்று அசந்து உட்காரும் போது, "உனக்கான காலம் முடிந்தது.. இஜ்-ஜென்மம் போய் மறு ஜென்மம் வா.." என்று காலதேவன் கூறும் நாள் வந்துவிடக் கூடும் என்னும் உண்மையை அறியாமலேயே இருக்கிறோமோ என்னும் குற்ற உணர்ச்சி வர ஆரம்பித்து விட்டது இப்போதெல்லாம். நமக்கு சொந்தமானவைகளை அனுபவிக்க நேரம் ஒதுக்காமல் அத்தனைக்கும் ஆசைப்படுவதில் என்ன பயன்..?

சில நேரங்களில் ஆசைப்படுவதை ஓடியாடி அலைந்து திரிந்து அடைந்த பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். எதற்காக அதை ஆசைப்பட்டோமென்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. "ஏன் அதன் மேல் ஆசை கொண்டாய்..?" என்றொரு கேள்வி கேட்கப்பட்டால், அவர்களது குறைந்தபட்ச பதில் 'திரு திருவென்ற முழிப்பாக'வும், அதிகபட்ச பதில் 'அவனை(ளை)ப் பார்த்து நானும் ஆசைப்பட்டேன்' என்பதாகவுமே இருக்கின்றது. பலர் அவர்களது உண்மையான சுய தேவைகளை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுக் கொள்வதில்லை. காரணம் அவர்களது கண்ணோட்டம் முற்றிலும் வெளிப்புற உலகம் பற்றியதாகவே இருப்பது தான். அக உணர்வு பற்றிய சிந்தனைகளிலும், அதன் மேலான தேடல்களிலும் அவர்கள் கவனம் செலுத்த முயல்வதில்லை.

அத்தனைக்கும் ஆசைப்படுங்கள்.. ஆனால் அந்த ஆசையை பூர்த்தி செய்த பின், அதை அனுபவிக்க தயாராக இருக்கிறோமா என்பதிலும் அது உண்மையிலேயே தேவை தானா என்பதிலும் தெளிவாக இருங்கள். நிறைய ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை.. அதை அடைந்த பின், அனுபவிக்க தவறாதீர்கள்.. இருப்பதை அனுபவிக்கும் மனமில்லாமல், இல்லாதவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதில் பயனென்ன இருக்கின்றது..

இது இவ்வாறிருக்க, சிலர் ஆசைப்படுவதை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்று பெரு முயற்சிகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் துறக்கவும் தயங்குவதில்லை. உணவு, உடை, உறக்கம் என்று தொடங்கி சில நேரங்களில் உறவு மற்றும் நட்புகளையும் கூட துறக்க தயாராகி விடுகின்றனர். "அட இவ்வளவை இழந்து எதையோ அடைந்தாயே, மகிழ்ச்சி கொண்டாயா..?", என்று கேட்டால் பெரும்பாலனவர்களின் பதில், "வரும் வழியில் இழந்தவைகளை இப்போது மீண்டும் தேடி போய் கொண்டிருக்கிறேன்" என்பதாகவே இருக்கின்றது. அவ்வாறு பதில் சொல்பவர்கள் பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம்..

Friday, January 1, 2010

இனிய வாழ்த்துக்கள் :-)

னைருக்கும் 
து 
னி 
புத்தாண்டு 
ல்வாழ்த்துக்ள்

நடந்தவைகளை நல்லதுக்கே என்று ஏற்றுக் கொண்டு, நடப்பவைகளும் நடக்க இருப்பவைகளும் நல்லதாகவே இருக்குமென்கிற நம்பிக்கையுடன் முன்னோக்கி காலடி எடுத்து வைப்போம் இந்த புதிய ஆண்டில்.. என்றும் போல் இன்றும் வாழ்க்கை நாம் வசத்தில் தான் உள்ளது.. வாருங்கள்.. வாழ்ந்து தான் பார்த்து விடுவோமே..

..அன்புடன்
பால்