நினைவுகள் சார்ந்த சிந்தனைகளின் வேகத்திற்கு பேனா முனையோ அல்லது அதை வழி நடத்தும் விரல் நுனியோ எப்போதும் ஈடு கொடுக்க முடிவதே இல்லை. அதனால் தான் பல நேரங்களில் மனதின் ஈரமான பக்கங்களில் வேகமாக ஓடிச் செல்லும் சிந்தனைகளை ஏட்டில் வடிக்க முடிவதில்லை.. ஒருவேளை மனதின் எண்ண ஓட்டங்கள் உடலின் அசைவுகளை சிறை பிடித்து விடுவதனாலேயோ என்னவோ, கண்கள் மேற்கூரையை மேய உடலும் உணர்வுகளும் சட்டென்று ஸ்தம்பித்து விடுகின்றன. எப்படியோ முயன்று சிந்தனைகளை ஏட்டில் வடித்து விடலாமென்றால், வார்த்தைகள் கனக்கின்றன என்று ஏட்டில் முன்னோக்கி நகர மறுக்கின்றது எழுதுகோல்.
கண்களுக்கு விடை கொடுத்த நிகழ்வுகளோ அல்லது கைகளுக்கு விடை கொடுத்த மனிதர்களோ விடை கொடுப்பதில்லை மனதிற்கு. நிஜம் சார்ந்த நினைவுகள் இனிப்பதை விட கசப்பது தான் அதிகம். சிந்தை அளவில் அவை நிலைத்து நிற்பது மட்டுமல்லாது, பல நேரங்களில் நிலைகொள்ள முடியா நிலையையும் ஏற்படுத்தி விடுகின்றன. அது ஏனோ தெரியவில்லை.. விடைபெறுதல்கள் எப்போதும் உடலளவில் மட்டுமே நிகழ்கின்றன!!
எழுத்துக்களில் வடிப்பதன் மூலமோ அல்லது வாய் திறந்து கதறுவதன் மூலமோ அவற்றிடமிருந்து விடை பெறலாமென்றால், அதற்கும் வழியில்லை. வார்த்தைகள் தடுமாறும் கணங்களில் உள்ளுக்குள்ளேயே சிக்கி உறைந்து கொள்கின்றன அவை. பின்பு வேறொரு உருவம் கொண்டு மீண்டும் அரிக்க ஆரம்பித்து விடுகின்றன மனதை..
ஞாபக செல்களில் வாடகைக்கு குடியேறி, பின்பு நிரந்தரமாக தங்கிக்கொள்ளும் சிந்தனைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மனதின் செல்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணங்களை வேண்டாமென்னும் போது அழிக்கும் சக்தி தன்னிடம் இல்லையேவென்று ஏங்கும் மனிதர்கள் இன்னமும் ஆங்காங்கே உலவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறான மனிதர்களின் முகத்திரையை விலக்கிப் பார்க்கும் போது அவ்வப்போது தட்டுப்படுவது என் முகமும் கூடத் தான்.
நல்லாயிருக்குடா மாப்ள...
ReplyDelete