Sunday, October 17, 2010

கடற்கரைப் பொழுதுகள்..

எவ்வளவு ஓடியாடினாலும் கூட அசந்திடாத தன்மை கண்டு கொஞ்சம் பொறாமை பற்றிக் கொள்கிறது அலைகளைப் பார்க்கும் போது.. நீரில் நனைந்தவாறு இரண்டு அடிகள் எடுத்து வைத்த பின்பு முற்கால நிகழ்வுகள் சில கண்முன் வந்து செல்ல, தேகம் தாண்டி உட்புற செல்களையும் உறைய வைக்கும் கடல் நீரின் குளுமை பிடித்திருந்தாலும் கூட ஏனோ தொடர்ந்து அலைகளுடன் சல்லாபிக்க தோன்றவில்லை.. அலையை ஒட்டியவாறே மணற்பரப்பில் கால்கள் பரப்பி கையூன்றி சாய்ந்தமர்ந்து உப்பு கலந்த காற்றை எதிர்கொண்டு கடல் வெறிக்கிறேன்..

மேடும் பள்ளமுமான பட்டு போன்ற கடலினது மேனியை ரசித்தாலும் கூட விழிகளினது ஓரம் கண்டுக் கொள்ள தவறவில்லை அயர்ச்சிக் கொள்ளாது கரையுடன் காதல் கொள்ளும் அலையினது நுனிகளை விரட்டியபடி குதித்தாடிக் கொண்டிருக்கும் குட்டிச் சிறார்களை.. 'கடந்திட்டதே குழந்தை பருவம்' என்பதான அங்கலாய்ப்பு உள்ளுக்குள் படர்கிறது..

விழிகளை திசை திருப்புகிறேன்.. சற்று தள்ளி விற்றவாறே கடந்து செல்லும் காத்தாடியை கைகாட்டி வேண்டுமென்பதாக சிறுவனொருவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, வாங்கி தர மறுக்கும் பெற்றோரோ அவனது கவனத்தை திசை திருப்ப முயன்றுக் கொண்டிருக்கின்றனர்.. காண்பனவற்றை வேண்டுமென்று கைநீட்டி ஏக்கங்களை வெளிப்படுத்திய பிஞ்சு பருவம் சில நொடிகள் கண்முன் விரிகின்றன..

இன்று பை நிறைய காசிருந்தும் கூட சிறுவயதில் ஆசைக் கொண்டு விழிநீர்க் கோர்த்தவைகளை வாங்கி அனுபவிக்க வேண்டுமென்பதான எண்ணமோ அப்போதிருந்த உற்சாகமோ பெரிதாய் எழவில்லை.. ஆசைபடும் வேளைகளில் அவை கைகெட்டா தொலைவில் இருப்பதும், இயலும் வேளைகளில் அவ்வாசைகளின் மீதான உற்சாகம் கரைந்து போவதும் வாழ்வின் இயல்பாகிவிடுகிறது..

இழந்திட்ட குழந்தை பருவம் குறித்த வருத்தம் நெஞ்சுக்குள் எழுந்தாலும் கூட கையிலிருக்கும் இளைமைப் பருவத்தை கவலைகளுக்குள் துளைக்க விருப்பமில்லை.. கடந்திட்டவை குறித்து கவலைக் கொண்டு கையிலிருக்கும் தருணங்களை வீணடித்து என்ன பயன் என்றொரு எண்ணமும் தோன்றுகிறது.. ஒவ்வொரு பருவமும் அதற்கே உண்டான சிறப்பம்சங்களையும் அழகையும் கையிலேந்தியே நிற்கின்றன.. கையிலிருப்பவற்றின் அழகை ரசிப்பதா அல்லது தவறவிட்டவை பற்றிய அங்கலாய்ப்பில் வாழ்வதா என்பதான முடிவு நம் கையிலேயே இருக்கிறது என்றும் தோன்றுகிறது..

விழிகள் மீண்டும் கடலை நோக்குகின்றன.. தூரத்தில் வெளிச்சப்பொட்டுகளாய் அணிவகுத்து நிற்கின்றன மீனவப் படகுகள்.. மணற்துகள்கள் தட்டி எழுந்து அலை நுனியில் நடக்க ஆரம்பிக்கிறேன்.. பாதம் தட்டும் குளுமை உள்ளுக்குள்ளும் மெலிதாக படர்கிறது..

2 comments:

  1. மொத்தமும் ஒரு கவிதையை வசனமா படிக்கிற உணர்வு...

    நல்லா எழுதியிருக்கீங்க பால்!

    ReplyDelete