ஒரு புத்தகம் என்பது படிப்பவரை ஒரு சில வரிகளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது சில பத்திகளுக்குள் (paragraphs). அதிகபட்சம் சில பக்கங்களுக்குள். படிக்க வேண்டுமே என்று படிக்க வேண்டிய சில புத்தகங்கள் இருக்கவே செய்கின்றன. அவை, குறைகளுடன் முறையிடப்படும் போதும், படிக்கப்படவே செய்கின்றன. மற்ற புத்தகங்கள், எவ்வகையை சார்ந்தவையாக அவை இருப்பினும், முன் சொன்ன முதல் மூன்றில் ஒன்றாக இருப்பது நலம்.
அவ்வாறு இருப்பது அப்புத்தகங்களை படிக்க தூண்டுவதோடு மட்டும் அல்லாமல் பொதுவாகவே புத்தங்கங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும். மக்களின் படிக்கும் ஆர்வம் குறைவதாக இன்று பல எழுத்தாளர்கள் கொள்ளும் ஆதங்கம் தேவையற்றதாக மாறும். அது முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனின் கைகளில் தான் இருக்கிறது.
இலக்கியம் பேசுகிறேன், அல்லது எழுதுகிறேன், என்பதான பெயரில் எழுதப்படும் இன்றைய பற்பல புத்தகங்கள் கவனிக்கப்படாமலேயே போவதற்கு காரணம் வாசகரை, அவரது மனநிலையையும் தாண்டி, ஒரு சில நிமிடங்களிலேயே உள்ளுக்குள் இழுக்க தவறுவதால் தான் என்றே நினைக்கிறேன்.
என் நண்பன் சொல்வதுண்டு, "சுஜாதவை போல ஒரு சில வரிகளுக்குள் என்னை இழுத்து செல்லும் எழுத்தாளரை நான் தமிழில் இதுவரை வாசித்ததில்லை. அதனாலேயே இப்போதெல்லாம் நான் சுஜாதாவை தவிர வேறு யாரையும் படிப்பதில்லை". சுஜாதா தனது காலம் கடந்து நிலைத்து நிற்பதற்கு அது தான் காரணம். இன்று தன்னை எழுத்தாளராக சொல்லிக் கொள்ளும் பலர் தன்னைப் பற்றிய சுய செய்திகளில் தான் அதிகம் கவனம் செலுத்துகின்றனரே தவிர வாசிப்பவனுக்கு தன் எழுத்துக்கள் கொடுக்க வேண்டிய சுவாரசியம் பற்றி யோசிப்பதேயில்லை. அவனது மனநிலையையும் கூட தாண்டி அவனை எப்படி எழுத்துக்களின் மூலம் வசியம் செய்வது என்பது பற்றி சிந்திப்பதே இல்லை. இன்றைய கால கட்டத்தில் அவனுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் தேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள சிரத்தை எடுப்பதில்லை.
ஒருவன் எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் பெறுவது எழுத்துக்களின் மீதான அவனது ஆளுமையை மட்டுமே பொறுத்தது அல்ல. அதைப் படிப்பவர் மீது அவனது எழுத்துக்கள் ஏற்படுத்தும் பாதிப்பையும் பொறுத்தது. அப்போது அவன் தன்னை எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதை அவனுக்காக மற்றவர்கள் செய்வார்கள்.
--
பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment