Friday, January 30, 2015

ஒரு கிறுக்கனின் நேர்ப்பார்வை [2]

மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் சிங்கம் அடிபட்டு விடும் போது, அடிபட்டுவிட்ட ஒன்றை போல தான் அது நடந்து கொள்கிறது. தனது தன்மானம் நகைப்புக்கு உள்ளாக்கப்படும் கணங்களை அது மெளனமாக எதிர்கொள்கிறது. மறுப்பேதும் சொல்வதில். சீறி பாய முனைவதில்லை. அதற்கு தெரியும். தனது நேரம் இன்னும் வரவில்லை என்று. அது வன்மம் கொள்வதில்லை. அதற்கு தெரியும் மாபெரும் குறிக்கோளை நோக்கிய தனது பயணத்தை வன்மம் திசை திருப்பக் கூடும் என்று.

தனது காயங்களைக் குணமாக்கிக் கொண்டு, தனது ஆற்றலை திரும்ப பெற்று மீண்டும் தனக்கான இடத்தில் அமர விரும்பும் சிங்கத்திற்கு இருக்கும் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். அது இந்த கணத்தை கடந்து செல்லுதல். அக்கணத்தின் நகைப்பு, அவமானம், பின்னடைவு மற்றும் துரோகம், அதை சார்ந்த வலி, கோபம் மற்றும் தன் இருத்தலை அழிக்கவல்ல இன்னப் பிறவற்றை புறக்கணித்தவாறு இக்கணத்தை கடந்து செல்லுதல்.

அது அவமானங்களை வருத்தமின்றி எதிர் கொண்டு புன்னகைக்கிறது. பின்னாளில் தனது சரித்திரத்தை தாங்கி நிற்கும் தூண்களாக அவற்றைப் பார்கின்றது. அதற்கு தெரியும். இப்பின்னடைவு மற்றும் இந்த வலி தற்காலிகமான ஒன்று என்பது. அதற்காக கோபம் கொள்ளுதலும், எதிர்வினை ஆற்றுதலும் தனது முன்னோக்கிய பயணத்தில் பின்னோக்கிய அடிகளாகி விடும் என்று அது அறிந்தே இருக்கிறது.

அது தனது இன்னல்களை தடுமாறும் உறக்கத்தின் இடைப்பட்ட அமைதியில் கரைய விடுகிறது. பிறகு சேமித்து வைத்திருக்கும் ஆற்றலின் உதவியுடன் எழுந்து நடக்கிறது.

அது அறிந்தே இருக்கிறது 'நடந்தால் தான் நடக்கும்' என்பதை.

----

பந்துடனான ஆட்டம் 
-----------------------------------

படும் பாதங்களை 
புதைத்து விழுங்கிக் கொள்ளும் 
மணற்பரப்பிற்கும் 
தெளிவிழந்து 
மேகங்களைத் தாங்கி நிற்கும் 
வானிற்கும் இடையே 
தன்னை நோக்கி 
வீசப்படும் பந்துகளைத்
தடுக்கவும் பிடிக்கவும் 
கீழே விழாமல் அதை 
மற்றவர்க்கு கடத்தவும் 
ஒரு மனிதன் கொள்ளும் 
சிரத்தையும் 
அதன் முன்பின்னான படபடப்பும் 
பார்க்க அலாதியானது..!!

[கிறுக்கல் தொடரும்]

--
பால் ஆரோக்கியம் 

No comments:

Post a Comment