Thursday, June 5, 2014

[ கவிதை ] கனா

மலராத கனவுகளைப் 
பற்றிக் கொண்டு 
பாதாளத்தை வெறித்தபடி
தொங்கிக் கொண்டிருக்கிறாய் 

விதியென்னும் பறவை
தலையிலிட்டு சென்ற எச்சம் 
துடைக்க நேரமோ தோதோ 
இல்லாதது குறித்த கவலைகள் 
உன் கண்களில் இல்லை 

மலரும் கனவுகள் 
மேலிழுக்கும் நேரமெப்போது 
என்பதிலேயே இருக்கும் 
உன் சிந்தனைகளை 
விரிந்து கொட்டிக் கிடக்கும் பாதாளம் 
அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது 

கனவுகள் களையக் கூடியவையென்று 
தரை தட்டிய யாரோவொருவரின் குரல் 
எதிரொலித்திருப்பதை செவிமெடுக்க 
விரும்பாத நீ 
கனவுகளின் மீதான
பற்றுதலை இறுக்குகிறாய் 
அது 
காற்றின் திசையில் 
மெல்ல கலைந்து அறுகிறது 

பால் ஆரோக்கியம்.
05-ஜூன்-2014.

No comments:

Post a Comment