Tuesday, June 17, 2014

[ நாவல் பற்றி ] சிந்துவைக் கொன்று விட்டார்கள் - சில துளிகள்

"அதெப்படி என்னைப் படிக்காமலேயே நான் சொல்லிக் கொண்டிருப்பதை சொல்லி விட்டு சென்றிருக்கின்றனர்..?", என்றான் நகு.

கடற்கரை.. கூட்டம்.. மாலை.. மணல்.. உவர் காற்று.. காலடிக்கு மிக அருகில் வந்து தன்னைப் பின்னிழுத்துக் கொள்ளும் அலை.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் இப்படி தான். திடீரென்று சம்பந்தமே இல்லாத ஏதோவொன்றைப் பற்றி, தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் நடுவில் இருந்து ஆரம்பிப்பான். "ஏன் எப்பவுமே இப்படி நடுவுல ஆரம்பிக்கிற..?", என்று கேட்டால், "நடுவுல தான சுவாரசியமான விஷயங்களே இருக்கு சிந்து..", என்று கண்ணடித்துக் கொண்டே அங்கேப் பார்ப்பான்.

".டேய்..", என்று அவன் புஜத்தில் ஒரு குத்து விடுவேன். அவனது இரட்டை அர்த்த வசனங்களுக்கு வேறென்ன செய்வது. சிரித்துக் கொண்டே அடியை வங்கிக் கொள்வான்.

"நீ என்ன சொல்லிட்டு இருக்க..? யார் என்ன சொல்லிட்டு போய் இருக்காங்க..?", சத்தியமாக ஒன்றுமே புரியாமல் தான் கேட்டேன்.

"அஹம் பிரம்மாஸ்மி..", என்றான்.

"டேய்.. அது 'நான் கடவுள்' படத்துல பாலா சொன்ன மாதிரியே இருக்கு"

"பாலா ரொம்ப லேட்.. அதுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடில இருந்தே நான் சொல்லிட்டு இருக்கேன் 'நான் தான் கடவுள்'ன்னு.."

"யார்கிட்ட..?"

"யார்கிட்டயும் இல்ல.. எனக்குள்ளையே தான்.."

"ஹவ் கன்வீனியண்ட்..", என்று சிரித்தேன்.

"சிரிக்காதடி.. ஒய் ஷூட் ஐ லை..? ஐ மைட் ஹாவ் டோல்ட் இட் டு ப்யூ பீபிள் டூ..", சொல்லிக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

"சரிடா.. நீ அப்படி சிந்திக்கிற ஆள் தான்.. இப்ப என்ன ஆச்சு..?". நிகழ் உலகத்திற்கு அவனை இழுத்து வந்தேன்.

"இல்ல.. ஓஷோ.. புத்தர்.. எல்லாருமே அதை தான் சொல்லிட்டுப் போய் இருக்காங்க.. படிச்சு பாக்குறப்ப தான் தெரியுது..", என்றவன் சிரித்துக் கொண்டே மீண்டும் கேட்டான், "அதெப்படி என்னைப் படிக்காமலேயே நான் சொல்ல இருந்தத அவங்க எல்லாம் சொல்லிட்டுப் போய்  இருக்காங்க..".

"டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.."

"இல்ல சிந்து.. நெஜமா தான் கேக்குறேன்.. அதெப்படி..?", என்று இழுத்தான்.

"சரிடா.. யூ ஆர் எ பர்சனா.. ஒத்துக்கிறேன்..", என்று அவனிடம் சொல்லி விட்டு வானத்தைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்து கொண்டு, "கடவுளே, நிஜமாவே நீ இப்படி தானா..?", என்றேன்.

"எரும..", என்று தலையில் கொட்டினான்.

"அது சரி.. கடவுளுக்கு எதுக்குடா காதல்..? சந்நியாசம் இல்ல போகணும்.."

"போடி லூசு.. அங்க தான் நீ தப்பு பண்ற.. காதல் இல்லாத கடவுள் நிஜ கடவுளே இல்ல.. தெய்வீகம் பிறக்கிறதே காதல்ல இருந்து தாண்டி..", என்று சொல்லிக் கொண்டே இடைவெளியைக் குறைத்து அருகில் நெருங்கினான். அணைக்க முயன்றான்.

"தெய்வீகம் அப்பறம் தனியா இருக்கப்ப பொறக்கட்டும்.. நீ தள்ளி உக்காரு", என்று சொல்லி விட்டு நான் இடைவெளி விட்டு அவனிடம் இருந்து நகர்ந்து அமர்ந்தேன்.

....

<<"சிந்துவைக் கொன்று விட்டார்கள்" நாவலில் இருந்து..>>

பால் ஆரோக்கியம்.
17-ஜூன்-2014.

No comments:

Post a Comment