எல்லாவற்றையும் சொல்லிய பிறகு
சொல்வதற்கு எதுவும் இருக்கிறதாவென்று
நாம் வினவப்படுகிறோம்
சொல்வதற்கு நமக்கு
நிறைய இருக்கிறது
அவர்கள் சொல்லிய அனைத்தையும்
சொல்லாமலேயே சென்றிருக்கலாம்
என்பது உட்பட
சொல்வதற்கு நமக்கு
நிறைய இருக்கவே செய்கிறது
நாம் சொல்ல நினைப்பது
அவர்கள் சொல்லிய எல்லாவற்றிற்கும்
முரணாக இருக்க போகிறது
என்பது உட்பட
சொல்வதற்கு நமக்கு
நிறைய இருக்கவே செய்கிறது
ஆனாலும்
எதுவும் சொல்லாமல்
அங்கிருந்து நாம்
விலக விரும்புகிறோம்
எதுவுமே சொல்லாத
நம் மௌனம்
அசௌகர்யமான அதிர்வலைகளை
சூழலில் ஏற்படுத்துகிறது
அவர்களுக்கு
தேவைப்படவே செய்கிறது
விரும்பாத போதிலும்
புரிந்து கொண்டதான
நம் தலையசைப்பு
நகர முனையும் நம்மை
தடுத்து நிறுத்த
கரமெதுவும் நீளப் போவதில்லை
என்னும் சிந்தனை
சற்றே தடுமாற வைக்கிறது நம்மை
பிறகு
அங்கிருந்து விலகி செல்கிறோம்
நிழல் எதுவுமற்று அவர்களும்
இரு நிழல்களுடன் நாமும்
பால் ஆரோக்கியம்.
11-ஜூன்-2014.
No comments:
Post a Comment