Sunday, April 13, 2014

வாழ்தல் !

வாழ்வது என்பது கொல்லப்படுவதில் இல்லை. கொல்வதில் இருக்கிறது. உன்னை பின்னுக்கு இழுக்கும் உள்ளுக்குள் சிதைக்கும் அந்நினைவுகளை கொல்வதில் இருக்கிறது.

நான் நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். எளிதானது எது என்று. முன்னதா அல்லது பின்னதா ? இரண்டிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே எனக்கு தோன்றி கொண்டிருந்தது. நினைவுகளை அழிக்கும் போது சுயமும் அழிந்து இறுதியில் வாழ்வு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு விடும் என்பதான சிந்தனை அது. ஆனால் நான் வாழ வேண்டும். எனவே தான் இவ்வாறு எழுதினேன்.

"வாழ்வது என்பது கொல்லப்படுவதில் இல்லை. கொல்வதில் இருக்கிறது. உன்னை பின்னுக்கு இழுக்கும் உள்ளுக்குள் சிதைக்கும் அந்நினைவுகளை கொல்வதில் இருக்கிறது"

பிறகு இரண்டிற்கும் இடையில் இருப்பதாக நான் எண்ணிக் கொண்டிருந்த தொடர்பை ஏதேனும் சூட்சுமம் கொண்டு அறுக்க விரும்பினேன். பறிக்கப்பட இருக்கும் வாழ்வை என்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். எண்ணிக் கொண்டிருந்த தொடர்பு ஒரு எண்ணம் மட்டுமே என்பதை அறிந்து ஆனந்தம் கொண்டேன். நிஜமாக தோன்றிய தொடர்பு கானல் நீராக கரைந்து போன சூட்சுமம் என்ன என்று சில நாட்கள் குழம்பி தான் போனேன். பிறகு எதுவாக அது இருந்தாலென்ன என்று தோன்றவே, அந்நினைவுகளைக் கொல்லும் உத்திகள் குறித்து சிந்திக்கலானேன்.

சுயத்தை கொல்லுதல் என்பது நிஜமாகவே எளிதான ஒன்று. ஒரு நீண்ட கயிறு, அளவில் சற்று கூடிய மருந்து, மலை உச்சி முகடு, இரயில் தண்டவாளத்தின் இடை என்று நீண்டு கொண்டு போகும் பட்டியல் அது. தான் அருளியதைப் பறித்துக் கொள்ள இயற்கை நிறைய விட்டு சென்றிருக்கிறது. அது அதன் மாலை நேர விளையாட்டு. தூண்டிலிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வம் அது. கண்டு கொள்ளாதவரை நாம் காணப்பட்டுக் கொண்டிருப்போம்.

சிந்தனையிலிருந்து உத்திகளுக்கு திரும்பிய போது, பாதி நினைவுகள் அழிக்கப்பட்டு இருந்தன. மிகவும் விந்தையாக இருந்தது. நான் உத்திகளைப் பற்றி யோசிக்க தானே ஆரம்பித்து இருந்தேன். அதற்குள் எப்படி பாதி நினைவுகள் காணாமல் போய் இருக்கின்றன ? எனக்கு பதிலாக ஆயுதத்தை வேறு எவரும் கையிலெடுத்துக் கொண்டார்களோ ? சரி போகட்டும். மீதி ? மிகவும் பலவீனமாக தெரிந்தன. அவ்வளவு பலம் கொண்டவைகளாக என்னை சிதைத்துக் கொண்டிருந்த அந்நினைவுகள் பலவீனமற்று காட்சியளிப்பது சற்று ஆறுதலாய் இருந்தது. இப்போது அவற்றை கொல்வது எளிது. மிக சிக்கலான உத்திகள் பற்றி சிந்திக்க தேவையில்லை என்று தோன்றியது. அல்லது தானாகவே அவை மாண்டு போய் விடக் கூடுமென்று தோன்றியது. திடீரென்று நான் எழுதிய கவிதையின் சில வரிகள் என் மனதில் வந்து சென்றன..

"...
எதிரிகளுக்கு பலமென்று
அவர்களிடம் எதுவுமே
இருப்பதில்லை..
நம் விழிகள் வெளிப்படுத்தும்
அச்சம் தவிர.."

பிறகு எல்லாம் புரிந்தது. தொடர்பை கானல் நீராக்கிய சூட்சுமம் எது என்று புரிந்தது. நினைவுகளை கொன்று கொண்டிருக்கும் அவ்வுத்தி எது என்றும் அறிந்து கொண்டேன். அது முடிவு.

பால் ஆரோக்கியம்.
13-ஏப்ரல்-2014.

No comments:

Post a Comment