Wednesday, April 9, 2014

கவிதை..

உனக்கும் எனக்கும் 
பொதுவான வார்த்தைகளில் 
காதல் ஒளிந்துக் கொண்டிருக்கிறது 
நாணத்தை தன் முந்தியில் போர்த்தியபடி 

உனக்கும் எனக்கும் 
பொதுவான காற்றில் 
மிதமான வெப்பம் கலந்திருக்கிறது 
வேட்கை கொண்ட நம் உடல்களை 
வருடிக் கொடுக்க தயாராக 

உனக்கும் எனக்கும் 
பொதுவான வெளியில் 
நாம் மிதந்துக் கொண்டிருக்கிறோம் 
வார்த்தைகளை உளறிக் கொண்டு 
தேகங்களை உரசிக் கொண்டு 

உனக்கும் எனக்கும் 
பொதுவற்ற சில 
உன்னையும் என்னையும் 
எதிரெதிர் பக்கமிழுக்க 
பற்றியிருக்கும் கரங்களை 
சிக்கல்கள் எதுவுமின்றி 
விடுவித்துக் கொள்கிறோம் 

கலாச்சார வன்முறைகளின் மூலம் 
நாமறிய வைக்கப்பட்டிருக்கிறோம் தானே 
எதிர் கொள்வது கடினமென்பதை 
பொதுவானவைகள் பொதுவற்றவைகளுடன் 
கலப்பதால் உருவாகும் விளைவுகளை

பால் ஆரோக்கியம்.
09-Apr-2014.

No comments:

Post a Comment