மரணத்தின் விளிம்பை
முத்தமிடும் ஒவ்வொரு முறையும்
நீ புதிதாய் பிறக்கிறாய்
உன் ஆத்மா
உன்னிலிருந்து விலகும் அத்தருணத்தை
முழுதாய் உணர
நீ சிரத்தை எடுக்கிறாய்
உன் நடையின் வேகம்
அச்சத்தை நசுக்கி முன்னேற
மிச்சம் ஏதுமில்லாததனால்
முன்னை விடவும் கறுத்திருக்கிறது
உன் நிழல்
பிறகு நீ
மேலாடைகளைக் கழற்றியெறிந்து
நீரோடையின் ஆழத்திற்கு
மெல்ல செல்கிறாய்
கற்று அறிந்திருந்த நீச்சலை
மிகவும் கடினப்பட்டு
மறக்க முயலும் அத்தருணத்தில்
முன்ஜென்ம பாவமொன்று
இன்னொரு ஜென்மமளிக்கிறது உனக்கு
நீ புதிதாய் பிறக்கிறாய்
வயோதிகத்தை நீ
வெல்ல முயலும் போதும்
இயற்கையின் சிறைக்கம்பிகளை நீ
உடைத்தெறிய முயலும் போதும்
நீ புதிதாய் பிறக்கவே செய்கிறாய்
உன் மீதான
என் பரிதாபமெல்லாம்
உன்னுடன் கடைசி வரை
ஒட்டிக் கொண்டேயிருக்கும்
நீ உதற விரும்பிய
அவ்வுடல் பற்றியதே
பால் ஆரோக்கியம்.
15-Apr-2014.
No comments:
Post a Comment