Tuesday, December 28, 2010

மழலைப் பருவத்தின் அழகு..!!


Photo, originally uploaded by GOPAN G. NAIR.
இன்று காலை டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன் [ பொதுவாவே வீட்ல தான டீ குடிப்பாங்க, நான் டீ குடிச்சிட்டு வீடு திரும்பினதா சொல்றேனேன்னு நெனைக்குறீங்களா..? வீட்ல டீ போட்டு தர ஆள் இல்லப்பா.. அதான் வெளிய போய் குடிச்சிட்டு வந்தேன் ]. சரி கதைக்கு வருகிறேன்..

அப்போது வீட்டு முதலாளியின் பேரனுக்கு அந்த குட்டிப் பையனது அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் என்னைப் பார்த்ததும், "ஹல்லோ" என்று சொல்வான். அது நான் அவனுக்கு கற்றுக் கொடுத்தது. அவன் கைக் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவனை தினமும் பார்ப்பேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்வான், ஏனென்றால் அந்நேரங்களில் அவன் பேச கற்றுக் கொள்ளவில்லை. தினமும் நான் அவனைப் பார்த்து, "ஹல்லோ" என்று சொல்லி அவன் திரும்ப சொல்கிறானா என்று பார்ப்பேன்.. அவன் உதடுகள் முயற்சி செய்யும், ஆனால் வார்த்தைகள் வராது. வெறும் புன்சிரிப்பு மட்டுமே வரும்.. உள்ளம் கொள்ளைக் கொள்ளும் புன்னகை அது.. பிறகு ஒருநாள் அவனைப் பார்த்து வழக்கம் போல் நான் "ஹல்லோ" சொல்ல, பதிலுக்கு புன்னகைத்தவன் தனது பிஞ்சு மொழிகளில், "ஹல்லோ" என்று சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனேன்.

அதற்காக இப்போது அவன் பெரிதாக வளர்ந்து விட்டான் என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவனுக்கு இரண்டு வயது கூட ஆகவில்லை. இன்று காலை அவனைப் பார்த்ததும் புன்னகைத்தேன்.. அவனாக "ஹல்லோ" சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.. என்னைப் பார்த்ததும் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, "பைன்" என்றான். எனக்கு சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அது என்ன "பைன்" என்று குழம்பிப் போனேன். என் முகத்திலிருந்த புன்னகையை நழுவ விடாமல், எனது ஒரு புருவத்தை மேல் நோக்கி உயர்த்தி கேள்விக் குறியுடனான முக பாவனையை காண்பித்தேன். அவன் மீண்டும் புன்னகைத்து, "பைன்' என்றான்.

நான் சிரித்தவாறே, "என்ன சொல்கிறான்..?" என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். "நேத்து நைட் நீங்க 'ஹவ் ஆர் யூ'ன்னு கேட்டீங்கல்ல, அதுக்கு இப்ப பதில் சொல்றான்", என்று அவன் அம்மா கன்னடத்தில் விளக்கம் சொன்னார்கள் [ அவங்க கன்னட மொழி பேசும் குடும்பம் ].. அவனது செயல் என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது.

நேற்றிரவு நான் வீடு திரும்பிய போது அவன் வெளி கேட்டுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். வழக்கம் போல் நாங்கள் பரிமாறி கொண்ட "ஹல்லோ"விற்கு பின்பு, நான் புன்னகையோடு முதன்முறையாக "ஹவ் ஆர் யூ..?" என்று கேட்டேன். அதற்கு எப்படி பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. வெறும் சிரிப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. யாரும் அவனிடம் இதுவரை அந்த கேள்வியை கேட்டதில்லை என்று நான் புரிந்து கொண்டேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. "குட் நைட்", என்று நான் சொல்ல, பதிலுக்கு அவனும் "குட் நைட்" என்று சொல்லி கையசைத்தான். இதை அவனது அப்பா உள்ளிருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

நான் சென்ற பின்பு, "ஹவ் ஆர் யூ..?" என்று யாராவது கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டுமென அவனது அப்பா சொல்லி கொடுத்திருக்க வேண்டும். இன்று காலை என்னைப் பார்த்ததும் மறக்காமல் முதல் வேலையாக எனது நேற்றைய கேள்விக்கு அவனாகவே பதிலளித்த அவனது மழலைத்தனம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹவ் க்யூட் அண்ட் ஸ்வீட்..!! ரொம்பவே மகிழ்ந்து போனேன். நேற்று கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொண்டு, ஞாபகம் வைத்து என்னைப் பார்த்ததும் முதல் காரியமாக அவன் புன்னகையுடன் பதில் சொன்ன விதம்.. ச்ச.. சான்ஸே இல்ல.. மழலைப் பருவத்தில் கொட்டி கிடக்கும் அழகு எப்போதுமே மனதை சொக்க வைக்கிறது. எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாத இன்பம் இந்த மழலைத்தனம்.. இன்றைய பொழுது மிக நன்றாகவே விடிந்தது..!!

Thursday, December 23, 2010

குளிர்கால மாலை நேரமொன்றில்..


Photo, originally uploaded by Kausthub.
சற்றே தலை வலிக்க தேநீர் அருந்தலாமென்று அருகிலிருக்கும் கடைக்கு சென்றேன்.. முதிர்ச்சியடைந்த மாலை நேரமது. இருள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட போதிலும் கூட கரைந்துக் கொண்டிருக்கும் பொழுதின் சாயல் கொஞ்சம் மிச்சமிருக்கவே செய்தது.. ஒருவேளை அடைபட்ட சுவர்களுக்குள்ளேயே பொழுது முழுவதையும் கழித்ததால் தலை வலித்ததோ என்னவோ..

குளிர் காலமென்பதால் காற்றில் நிறையவே ஈரப்பதம் கலந்திருந்தது. எல்லோரும் உடம்பிற்கு கதகதப்பு கொடுக்கும் கம்பளியாடைகளை அணிந்தபடி நடந்து சென்று கொண்டிருக்க, எனகென்னவோ அந்த குளிரில் நனைய பிடித்திருந்தது. குளுமையை முழுவதுமாக உணர பிரியப்பட்டு மெல்லிய மேல்சட்டை மட்டுமே அணிந்திருந்தேன்.. இதமாக குளிர்காற்று மேனியை வருடிக் கொண்டிருக்க சூடான தேநீர் தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது சுகமான ஒரு உணர்வு ஏற்பட்டது.

பாதி தம்ளர் தான் குடித்திருப்பேன்.. வீதியை மேய்ந்துக் கொண்டிருந்த கண்கள் சட்டென்று காட்சியொன்றில் லயிக்க ஆரம்பித்தது. கசங்கிய ஆடை அணிந்துக் கொண்டு சுருங்கிய தேகம் பூசி முதியவளொருத்தி அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் அதிகளவில் தயக்கம் கலந்திருந்தது. முதல் பார்வையிலேயே தெரிந்தது ஆதரவில்லாதவள் என்பது. முகம் அதிகமாய் துவண்டிருக்க, அதில் தென்பட்ட அயர்ச்சி கலந்த சோகம் நன்றாகவே உணர்த்தியது அவள் சாப்பிட்டு வெகு நேரமாகி விட்டது என்பதை..

அவளால் கவரப்பட்ட என் கண்களிரண்டும் அவளது நடையின் வேகத்திலேயே தொடர்ந்து பயணித்தது. வீதியில் போய் கொண்டிருந்தவள் நான் நின்று கொண்டிருந்த கடைக்கு வந்து, "இந்த பன் கொடுப்பா', என்றவாறே கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டிருந்த கிரீம் பன் ஒன்றை கை நீட்டி காண்பித்து கேட்டாள். கடைக்காரன் அவளை நோக்க, "இது என்ன வெல..?, என்று கேட்டாள். பன்னை நோக்கி நீண்டிய அவள் கையில் சில சில்லறை நாணயங்கள் தென்பட்டன.

"ஆறு ரூபா", என்று அவன் பதிலளிக்க, சில வினாடிகள் யோசித்தவள் சட்டென்று அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள். அவளது முகமாற்றத்திலிருந்தே தெரிந்தது அவள் வைத்திருந்த சில்லறை அதற்கு போதவில்லையென்பது. அந்த கடையில் நான் உட்பட இன்னும் ஓரிருவரும் நின்றுபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். எங்கள் யாரிடமும் பசியென்றோ அல்லது அதை வாங்கிக் கொடுக்கச் சொல்லியோ கேட்கவில்லை அவள்.

அக்கடையிலிருந்து நடந்தவள் எதிரிலிருந்த இன்னொரு கடைக்கு சென்றாள். அங்கும் எதையோ அவள் கைநீட்டி கேட்க, அக்கடைக்காரன் பதிலளித்த மறுநொடியே ஏமாற்றம் கலந்த பாவனையை அவள் முகம் வெளிப்படுத்தியது. பின்பு எதுவும் வாங்காமலேயே அங்கிருந்தும் விலகி தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள்.

காட்சிகளை என் விழிகள் உள்வாங்கி கொண்டிருக்க, மனதிற்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அது உதவ வேண்டுமென்பதான துடிப்பு மட்டுமல்ல.. அதற்கும் மேல்.. பிறர் படும் கஷ்டங்களை காணும் போது ஏற்படும் ஒருவிதமான அனுதாபம் கலந்த வேதனை.. இன்னொரு பரிமாணத்தில் சற்று தலை தூக்கும் ஆதங்கம், 'ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது..?' என்று. பல உணர்வுகளின் கலவை. அது ஒருவிதமான தவிப்பு..

மௌனமாக நின்றபடி அக்காட்சிகளைப் பார்த்து கொண்டிருந்தேன். அவளை அடிக்கடி அருகிலிருக்கும் வீதிகளில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் ஒரு கோவிலிற்கு எதிரே அவள் சில நேரங்களில் அமர்ந்திருப்பாள். ஆனால் அவள் பிச்சையெடுத்து பார்த்ததில்லை. அவ்வழியாக போவோர் வருவோரை பார்த்தபடியே அமர்ந்திருப்பாள்.

தேநீர் குடித்து முடித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடியே வீடு வந்தேன். சில ரூபாய் நோட்டுகளை என் பணப்பையில் இருந்து எடுத்துக் கொண்டு அதே கடைக்கு திரும்ப சென்றேன். அவள் கைநீட்டி விலை கேட்ட க்ரீம் பன்னையும், அதனுடன் சேர்த்து இன்னும் சிலவற்றையும் வாங்கிக் கொண்டேன்.

அந்த முதியவளைத் தேடி நடக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நேரமானது அவளை கண்டு பிடிக்க. வீதியில் ஓரிடத்தில் ஓரமாக அமர்ந்திருந்தாள். அருகில் சென்று நான் வாங்கி வந்த தின்பண்டம் அடங்கிய பையைக் கொடுத்தேன். என்னை ஆச்சர்யமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கி, பின்பு அதை வாங்கி கொண்டாள். கூடவே அவள் கையில் சில ரூபாய் நோட்டுகளைத் திணித்தேன். அவள் முகத்தில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தென்பட்டது. நான் தேடி வந்தது அது தான் என்று எனக்கு தோன்றியது.

என் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். இருட்டத் தொடங்கி விட்டபடியால், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல வீடுகளில் மின்சார ஒளியில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவ்வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் ஒருவித சந்தோசம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த வருடமும் கிறிஸ்மஸ் தாத்தா வந்து ஆசைப்பட்ட ஒன்றை தருவார் என்பதான எதிர்பார்ப்பில் ஏற்பட்டிருக்கும் குதூகலமாக இருக்கலாம். விரும்பியதை அவர்கள் பெரும் போது அவர்களுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு சந்தோசம் கிறிஸ்மஸ் தாத்தா அடைவார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

காற்றில் கரைந்திருந்த ஈரப்பதம் இப்போது சற்று அதிகமாக குளிர்ந்தது. ஒருவேளை உள்ளுக்குள் மனதும் குளிர்ந்திருப்பதால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம் அது.


பின்குறிப்பு: அனைவருக்கும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி பரவட்டும்..!!

Monday, December 20, 2010

காதல் சார்ந்தவை [3]: சில காதல் பொய்கள்.. சீச்சீ.. மெய்கள்..!!


Photo, originally uploaded by sabatoa.
"ஏதோ என் அதிர்ஷ்டம் நான் அழகாய் பிறந்து விட்டேன்", என்று நீ சொல்கிறாய்.. அடியே, அழகாய் பிறக்க நீயொன்றும் கொடுத்து வைக்கவில்லை.. நீ அழகாய் இருக்க ஒப்புக் கொண்டது தன் அதிஷ்டம் என்று ஊர் முழுதும் சொல்லி வருகிறதாம் அழகு!!

"ஒருவேளை நான் அழகாய் இல்லாமல் இருந்திருந்தால்..?", என்பதாக கேட்கிறாய்.. அப்படியிருந்திருந்தால் நிச்சயமாக எனக்கு அழகென்பது பிடிக்காமல் போயிருக்கும்!!

"அது ஏன் நான் மல்லிகை சூடி வீதியில் நடக்கும் போது மட்டும் எல்லோரும் ஆச்சர்யமாகவேப் பார்க்கிறார்கள்", என்று கேட்கிறாய். மல்லிகை சூடி பெண்கள் வலம் வருவதையே பார்த்துப் பழகிய அவர்களுக்கு மல்லிகையே ஒரு பெண்ணை சூடி வலம் வருவதை பார்க்கும் போது ஆச்சர்யப்படாமல் என்ன செய்வார்கள்..

இன்னும் சில உண்மைகள் சொல்கிறேன் கேள்.. உன் மேனிபட்டு பூமியில் வழிந்தோடும் மழைத்துளிகளை உறிஞ்சி மூச்சுவிடும் செடிகளில் பூக்கின்ற மலர்களுக்கு இதுவரை கண்டிராத அழகு நிரம்பி வழிவதனால் சந்தையில் அவற்றிற்கு வரவேற்பு அதிகமாம்.. உன் விழியினது இமைகள் படபடக்கும் அழகு கண்ட மலர்களெல்லாம் இப்போது வண்ணத்துப் பூச்சிகளை கண்டுக் கொள்வதேயில்லையாம்..

உன் பாதச் சுவடு பட்ட இடமெல்லாம் கொடுத்து வைத்ததாக பூமி சொல்கிறதாம்.. பிற்காலத்தில் அவ்விடங்களில் காதல் கோவில்கள் கட்டியெழுப்பப்படலாம் என்பதாகவும் சில செய்திகளுண்டு..

நாசி நுழைந்து உன்னுயிர்த் தொடுவதற்கு காற்றணுக்களுக்குள் எவ்வளவு போட்டி நடக்கிறதென்பது உனக்கெங்கே தெரியப் போகிறது.. அவ்வப்போது நீ மூச்சுவிட சிரமப்படுவதற்கு காரணம் உள்சென்ற காற்று உன்னை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே குடியிருக்க முயல்வதால் கூட இருக்கலாம்..

"போடா.. இப்படி கவிதை சொல்லியே என்னை கிறங்கடிச்சிடு எப்போ பாத்தாலும்", என்கிறாய்.. அடியே, உனக்கு தெரியுமா..? கவிதை தன் பிறவிப் பயன் கண்டுக் கொண்டதே உன்னை பற்றி எழுதப்பட்ட பின்பு தானாம்.. அன்று தனியாய் இருக்கையில் என் காதில் கதைத்த ரகசியமிது. உன் பெயரினது மூன்றெழுத்துக்களுக்கு இப்போது மொழியில் முதல் இருக்கையில் இடமாம்.. மற்ற எழுத்துக்களுகெல்லாம் அவை மீது பொறாமையென்று அரசல் புரசலாய் செய்திகளும் உண்டு..

"ஹையோ முடியல..", என்று புன்சிரிப்பு கொள்கிறாய்.. ஆமாமடி.. இதையே தான் தோட்டத்து மலர்களும், வானவில் நிறங்களும், வண்ணத்து பூச்சியினது சிறகுகளும், இன்ன பிற இயற்கையினது அழகுகளும் சொல்கின்றனவாம்.. உன்னுடன் போட்டிப் போட முடியவில்லையாம் அவைகளுக்கு..!!

Friday, December 10, 2010

குறையொன்றுமில்லை..!!


சமீபத்தில் எதேச்சையாய் பார்த்த குறும்படமொன்று மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் குறும்படம் அது. 'உடைந்த கடவுள்' என்னும் அர்த்தத்தில் வைக்கப்பட்ட "புரோக்கன் காட்" (Broken God) என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனது சிந்தனைகள் ஏதோவொரு திசையில் பயணிக்க தொடங்கி விட்டது.



மேலே இணைக்கப்பட்டிருக்கும் அக்குறும்படத்தின் ஒளிப்பதிவை இணைய வேகம் குறைவின் காரணமாக காண இயலாதவர்களுக்காக அவ்வொளிப்பதிவின் காட்சிகளை கீழே விரித்திருக்கிறேன்.. அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவோம்.. [ ஒளிப்பதிவைப் பார்த்தவர்கள், கீழே விரித்திருக்கும் அதன் காட்சிகளை பற்றிய பத்திகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்து படியுங்கள், அதனால் தான் அவற்றை வேறு வண்ண எழுத்துக்களில் எழுதியுள்ளேன்.. ]


"சார்.. சாமி சிலை பாருங்க சார்.. சாமி சிலை..", என்றவாறே சுவாமி சிலைகளை தள்ளுவண்டியில் வைத்தபடி ஒருவன் விற்றுக் கொண்டிருக்கிறான். தவறுதலாக ஒரு சிலை கீழே விழுந்து உடைந்து விடுகிறது.. பின்னணியில், "குறையொன்றும் இல்லைக் கண்ணா.." என்ற பாடல் ஒலிக்க, "புரோக்கன் காட்" என்கிற தலைப்புடன் படம் தொடங்குகிறது..

"தினமும் இதே வேலை..", என்று குறைபட்டுக் கொண்டே உடைந்த சிலையை எடுத்து வண்டியின் கீழே போடுகிறான்.. அப்போது சிலை வாங்க ஒருவர் வருகிறார்.

"சார்.. சிலை பாக்குறீங்களா சார்.. சிலை..! பெரிய சிலையெல்லாம் இருநூறு ரூவா சார்.. சின்ன சிலையெல்லாம் நூறு ரூவா சார்..", என்று அவரிடம் தனது வியாபாரத்தை தொடர்கிறான்.

உடைந்ததால் வண்டியின் கீழே போடப்பட்ட சிலை ஒன்றை அவர் சுட்டிக் காட்டி, "அத பாக் பண்ணுங்க.." என்கிறார்.

"இதையா.. அது உடைஞ்சிருக்கு சார்..", என்று சொல்லியபடியே அந்த வியாபாரி வண்டியின் மேல் இருக்கும் உடையாத சிலைகளை காண்பித்து, "சார்.. இங்க பாருங்க சார்.. இதெல்லாம் நல்ல சிலைகள் சார்.. அழகழகா இருக்கு சார்.." என்கிறான்.

"அதுவும் அழகா தாங்க இருக்கு.. நீங்க அதையே பாக் பண்ணுங்க.." என்கிறார் அவர்.

"என்ன சார்.. அது உடைஞ்ச சிலை சார்.. அதெல்லாம் யாரும் வாங்க மாட்டாங்க சார்..", என்றவாறே உடைந்த அந்த சிலையை எடுத்து பாக் பண்ணுகிறான்.

"சார்.. ஏதோ உடைஞ்ச சிலைங்கிறதுக்காக ஓசிக்கு எல்லாம் தர முடியாது.. ஒரு அம்பது ரூவா குடுங்க.." என்றவாறே அந்த சிலையை அவரிடம் கொடுக்கிறான். அவர் சிலையை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறார். எண்ணிப் பார்க்கையில் இருநூறு ரூபாய் இருக்கிறது. "என்ன சார்.. இருநூறு ரூபாய் குடுக்குறீங்க..?", என்று வியப்புடன் அவன் கேட்கிறான்.

"வச்சுக்கோங்க.. வச்சுக்கோங்க.. எல்லாம் ஒரே சாமி தானங்க..", என்று சொல்லி விட்டு அந்த சிலையை எடுத்துக் கொண்டு அவர் நடக்க ஆரம்பித்து விடுகிறார். போகும் அவரை அந்த வியாபாரி வியப்பாய் பார்க்கிறான். அப்போது காட்சி மாறுகிறது.. அவர் நடப்பதை காண்பிக்கும் போது தான் தெரிகிறது, அவரால் சாதாரண மனிதனைப் போல நேராக நடக்க முடியாமல் சற்றே சாய்ந்தபடி ஒற்றைக் காலை இழுத்து தான் நடக்க முடியும் என்பது.

அவர் செல்வதை பார்த்தபடியே, அந்த வியாபாரி வண்டியின் கீழே போட்டிருக்கும் உடைந்த சிலைகளை எடுத்து தூசு தட்டி வண்டியின் மேல் மற்ற சிலைகளுடன் சமமாக வைத்து, "சார்.. சாமி சிலை வாங்கிக்கிறீங்களா சார்..?" என்றவாறு தனது வியாபாரத்தை தொடர்கிறான்.

உடைந்த சாமி சிலையொன்று மற்ற சிலைகளுடன் சமமாக ஒருபுறம் இருக்க, மறுபுறம் சாலையில் அவர் சிலையுடன் நடந்து செல்ல, " ஒரு சரிசமமான வாய்ப்பு என்பது மில்லியன் சலுகைகளுக்கு நிகரானது" என்கிற எழுத்துக்களுடன் காட்சி முடிவடைகிறது..



பல லட்சம் சலுகைகள் கொடுப்பதை விட ஒரு சரிசமமான வாய்ப்பு கொடுப்பது எவ்வளவோ மேலானது என்கிற கருத்தை மிகவும் அழுத்தமாக சொல்லும் இக்குறும்படத்தை பார்த்து முடித்தவுடன் நிச்சயமாக பார்த்தவர் மனதில் ஆழமான ஒரு பாதிப்பை இவ்வொளிப்பதிவு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கைகால் முதல் எல்லாமே நன்றாக இருந்தால் தான் கடவுளையே கண் கொண்டு பார்க்கவும் கையெடுத்து கும்பிடவும் முன் வருகின்றனர் நம் மக்கள் என்று தான் எனக்கு தோன்றியது இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவுடனேயே. எல்லாம் நன்றாக இருந்தால் மட்டுமே கடவுள் என்று சொல்லத் தோன்றுகிறது நம்மவர்களுக்கு. இல்லையென்றால் அது வெறும் உடைந்த சிலையாகி விடுகிறது.. கடவுளுக்கே அந்த கதியென்றால் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது..? ஆனால் பணத்திற்கு அந்த கதியில்லை.. எவ்வளவு தான் கிழிந்து இருந்தாலும் அதன் மதிப்பை குறைத்து நம்மவர்கள் எடை போடுவதில்லை..

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, "ஏன் கடவுள் தரத்தில் (quality) கவனம் செலுத்தாமல் எண்ணிக்கையில் (quantity) மட்டுமே கவனம் செலுத்துகிறார்..?" என்பதான கண்ணோட்டத்தில் "Is God concentrating on quantity than quality..?" என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். மாற்றுத் திறன் பொருந்தியவர்கள் படக்கூடிய கஷ்டங்களை எண்ணி எழுதிய பதிவு அது. "ஒருவரை பார்வையில்லாதவராகவும், மற்றொருவரை கேட்கும் திறன் இல்லாதவராகவும், இன்னொருவரை பேச இயலாதவராகவும் என்று மூன்று மனிதர்களை படைப்பதற்கு பதிலாக எல்லா திறன்களையும் கொண்ட ஒரே ஒரு மனிதனை மட்டுமே நீ படைக்கலாமே..?", என்று கடவுளிடம் கேட்க வேண்டுமென்று தோன்றியது.

அந்த பதிவை படித்துவிட்டு என்னுடைய தோழி ப்ரீத்தி சொன்ன கருத்து நான் நினைத்திருந்த சில விஷயங்களை அப்படியிருக்காது என்று யோசிக்க வைத்தது. இதுவரை சப்தங்களை கேட்டேயிராத ஒருவருக்கு அத்திறன் இல்லாதது பெரிய கஷ்டம் எதையும் கொடுக்காது என்று சிந்திக்க வைத்தது. காட்சிகள் எதையுமே பார்த்தேயிராத ஒருவருக்கு பார்க்க முடியும் என்பது தெரியாதவரை பார்க்க வேண்டும் என்பதான ஆசை கூடத் தோன்றாது. அவரை பொறுத்தவரையில் அது கண்டிராத ஒன்று. நாம் காட்சிகளை பார்த்தே பழகி விட்டதால், "திடீரென்று பார்க்க முடியாமல் போய்விட்டால்..?" என்பதான சிந்தனையில் தான், 'பார்க்க இயலாத அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்' என்று நமக்கு யோசிக்க தோன்றுகிறதே தவிர, உண்மையில் அவர்களும் அதே போல முதலில் யோசிப்பார்களா என்பது சந்தேகமே.

எதற்காக "முதலில் யோசிப்பார்களா" என்னும் வார்த்தைகளை உபயோகிக்கிறேன் என்றால், 'இது ஒரு குறை'யென்றே சிந்தித்திராத அவர்களிடம், "உங்களிடம் இது இல்லை'யென்று நாம் தான் அவர்களை அப்படி பல நேரங்களில் சிந்திக்க வைத்து விடுகிறோம்.

பொதுவாகவே இழப்பென்பதோ குறையென்பதோ இதுவரை இருந்து இப்போது இல்லாமல் போனாலோ அல்லது வேறு ஒன்றுடன் ஒப்பிடப்படும் போதோ மட்டுமே தோன்றுவது. நாம் நம்மை மற்றவர்களுடன் அவ்வாறு ஒப்பிட ஆரம்பித்தோமென்றால் நிச்சயமாக இங்கு இருக்கும் ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் குறைபட்டவர்களே.. சலுகைகள் என்னும் பெயரில், "என்னிடம் இருக்கும் ஒன்று உங்களிடம் இல்லை" என்பதை சொல்லி அவர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக சிந்திக்க வைக்கவும், குறை கொண்ட ஒருவருக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் தமது புகழை உயர்த்திக் கொள்வதான ஆதாய நோக்கத்துடனேயே தான் இன்று பல விஷயங்கள் நடக்கின்றன.

அதற்காக மாற்றுத் திறன் பொருந்தியவர்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நாம் அவர்கள் கஷ்டப்படுவதாக நினைக்கும் சில விஷயங்கள் அவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள அவர்களுக்குள் வேறு பல திறமைகள் இருக்கின்றது என்பது தான் உண்மை. அதனால் தான் "மாற்றுத் திறனாளிகள்" என்கிற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது தான் சரியான வார்த்தைகள். முதன் முதலில் எனது அலுவலக நோட்டீஸ் போர்டில் "Opportunities for 'differently' abled people" என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது, "அடடா எவ்வளவு சரியாக சொல்லியிருக்கிறார்கள்" என்று தோன்றியது. தாம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை தான் யாருமே எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அதற்கொன்றும் விதிவிலக்கல்லவே..


பின்குறிப்பு: இது என்னுடைய நூறாவது பதிவு.. ஆங்காங்கே சில உப்பு சப்பான மொக்கை பதிவுகளை எழுதியிருந்தாலும் கூட எண்ணிக்கையை கூட்டும் நோக்கத்துடன் அவற்றை நான் எழுதாததால் "நூறு" எண்ணிக்கையை தொட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு தூரம் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை விட இன்னும் வெகு தூரம் போக வேண்டும் என்பதான ஆசை எப்போதுமே என் நெஞ்சில் உண்டு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் நிச்சயமாக "followers" தான். அதனால் தான் "உயிரூற்றுபவர்கள்" என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அணைய எத்தனித்த வேளைகளிலெல்லாம் உயிரூற்றிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.. பார்ப்போம் இது எவ்வளவு தூரம் தொடர்கிறதென்று!! :-)

Thursday, December 9, 2010

தானாக ஒட்டிக் கொள்ளும் தவிப்புகள்..


Photo, originally uploaded by Sadia Rahman.
தனித்திருக்கும் வேளைகளில் அனுமதி கேட்காமலேயே தவிப்புகள் சில தானாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. எதேச்சையாய் செய்தித்தாள் புரட்டும் போது தட்டுப்பட்டு மனதை பதற வைக்கும் செய்திகள், வழி பயணங்களில் பார்வையில் பட்டு நெஞ்சில் சுமையாய் ஏறிக் கொள்ளும் காட்சிகள், விழிநீர் வழிந்தப் பின்னும் கூட கருவிழிகளுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் காயத்தின் சுவடுகள்.. இன்னும் எத்தனையோ.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..

வெவ்வேறு பரிமாணங்களில் அவ்வப்போது அடிமனதை அரிக்கும்படியாக ஏதாவதொன்று நடந்து கொண்டோ, பார்வையில் பட்டு கொண்டோ அல்லது காதில் விழுந்து கொண்டோ தான் இருக்கின்றது. பல நேரங்களில் விழிமூடி வெகுநேரமானப் பின்னும் கூட உறக்கம் தட்டுப்படுவதேயில்லை. மற்ற சில நேரங்களிலோ உறக்கத்திலும் கூட தொடர்கின்றன அப்பாதிப்புகளைப் பற்றிய மனதினுள்ளான சலசலப்புகள்..

'கண்டும் காணாமலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று போகும் மனமோ அல்லது எளிதாக சிலவற்றை உதறியெறிந்து விட்டு அடுத்தது என்னவென்று சிந்தித்தபடி முன்னோக்கிச் செல்லும் குணமோ நமக்கு மட்டுமேன் இல்லை'யென்று தனித்திருக்கும் வேளைகளில் யோசித்தபடி தவித்ததுண்டு. எல்லோரும் உதறிவிட்டு முன் செல்லும் காட்சிகளையும் அக்காட்சிக்கு உள்ளானவர்களையும் 'கண்டுக் கொள்ள ஒருவராவது வேண்டுமே'வென்று என்னைக் கேட்காமலேயே சுமைகள் சிலவற்றை ஏற்றிக் கொள்கின்றது மனம்.

உடலில் ஏறிக் கொள்ளும் சுமைகளில் பொதுவாக தட்டுப்படக் கூடியது அதிக அளவிலான கனமும், அதை சார்ந்த உடல் வலியும் மட்டுமே. நினைத்த நேரத்தில் இறக்கி வைத்து இளைப்பாறுவதோ அல்லது தைலம் தேய்த்து வலி களைவதோ எளிதான காரியமாகி விடுகிறது. இன்னும் சில நேரங்களில், நமக்கு எதற்கிந்த சுமையென்று தூக்கி எறிந்து விட்டு போவதும் கூட எளிதாகி விடுகிறது..

ஆனால் மனதினுள் ஏறி உட்கார்ந்துக் கொள்ளும் சுமைகளையோ மூச்சு முட்டினாலும் கூட இறக்கி வைக்க முடிவதேயில்லை. அச்சுமைகளின் கனமோ அல்லது அவை ஏற்படுத்தும் வலியோ காலம் பல கடந்தாலும் கூட துளியும் குறைந்தபாடில்லை. அவை கடைசியில் கண்மூடும் வரையிலும் கூட உள்ளே இருந்தபடி ஒருவித அழுத்தத்தையும் வலியையும் நெஞ்சுக்குள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் போலும்..

கடவுளை சந்தித்தால் கேட்க நினைக்கும் பல கேள்விகளில் ஒன்று, "என் வாழ்வில் ஏற்படும் வலிகளையே தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கும் போது, பிறர் வாழ்வினது துன்பங்களை கண்டுக் கொள்ளும் மனதையும் அவர்களுடைய வலிகளை பகிர்ந்துக் கொள்ள முயலும் குணத்தையும் எனக்கு ஏன் கொடுத்தாய்..?" என்பது தான்.

Monday, December 6, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (15): பார்க்கத் தவறும் கோணம்..


Photo, originally uploaded by ganglionn.
"மற்றவருக்காக உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்", என்னும் கருத்தை வலியுறுத்த ஜென் கதையொன்றை சொல்வார்கள். அந்த கதையை நீங்கள் படித்திருக்க கூடும். அக்கதையிலிருக்கும் சொல்லப்படாத இன்னொரு கோணத்தை சொல்ல வேண்டுமென்று தோன்றியது எனக்கு. அதனால் தான் இந்த பதிவு..

முதலில் அக்கதையைப் பார்ப்போம்.. அதன் பிறகு தொடர்ந்து பேசுவோம்..

ஒரு துறவியும் அவருடைய சிஷ்யனும் காட்டின் வழியே பயணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். போகும் வழியில் ஒரு ஆறு அவர்கள் கண்ணில் படுகிறது. தாகம் தீர்த்துக் கொள்வதற்காக அந்த ஆற்றை நெருங்கி அதிலிருக்கும் நீரை பருகுகின்றனர் இருவரும்.

நீர்க் குடித்து விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, தேள் ஒன்று அந்த ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி கவனித்து விடுகிறார். உடனே அதை காப்பாற்றும் பொருட்டு வேகமாக அத்தேளை கையில் பிடித்து கரையில் விட முயற்சி செய்கிறார். நீரை விட்டு வெளியே அந்த தேளை அவர் எடுத்தவுடன் அது அவரை கொட்டி விடுகிறது. "ஆஆ..", என்று சொல்லி தனது கையை அவர் உதற, மீண்டும் தேள் ஆற்றிலேயே விழுந்து விடுகிறது.

அதை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அத்துறவி கரையோரத்தில் கிடக்கும் ஒரு குச்சியை எடுத்து, அதன் உதவியுடன் அந்த தேளை தூக்கி கரையில் விடுகிறார். பின்பு அத்துறவியும் அவருடைய சிஷ்யனும் தொடர்ந்து நடந்து செல்கின்றனர். சிஷ்யனால் நீண்ட நேரத்திற்கு தான் கேட்க நினைத்த கேள்வியை அடக்கி வைக்க முடியவில்லை.

"குருவே, காப்பாற்ற முற்பட்ட உங்களை அந்த தேள் கொட்டிவிட்டதே. பிறகும் எதற்காக அதை காப்பாற்றினீர்கள்..?" என்று அவன் கேட்கிறான்.

"என்ன செய்வது.. கடவுள் அந்த தேளிற்கு அப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான், எனக்கு இப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான்", என்று அந்த துறவி பதிலளிக்கிறார்.


"தீமை செய்வது அந்த தேளின் குணமாக இருக்கிறது என்பதற்காக நன்மை செய்யும் எனது குணத்தை நான் எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்", என்னும் அர்த்தத்தில் சிஷ்யனிடம் பேசி கைத்தட்டல் வாங்கி விடுகிறார் அந்த துறவி..

ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே இக்கதையை நாம் பார்க்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குள் எழுந்தது. நாம் பார்க்கத் தவறும் இன்னொரு கோணமும் இருக்கலாமென்று எனக்குப்பட்டது. "ஒருத்தர் உங்களுக்கு தீமை செய்கிறார்கள் என்பதற்காக உங்களது நல்ல சில குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமே" என்பது நல்ல கருத்தாக இருந்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு கருத்து சொல்லி விட்டோமோ என்பதான சிந்தனை எனக்கு வந்தது. சொல்லப்படாத அந்த கதையின் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்..

தண்ணீரில் விழுந்து விட்ட தன் கணவனை எப்படி காப்பாற்றுவது என்று கரையில் துடித்துக் கொண்டிருந்த அந்த தேளின் துணை, துறவி அந்த தேளைக் காப்பாற்றுவதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்கிறது. காப்பாற்றப்பட்ட தேள் தன் துணையிடம் வந்து அதை கட்டிக் கொள்கிறது.

"உங்க உயிரை காப்பாத்தின அந்த துறவியை எதுக்காக கொட்டினீங்க..?", என்று அந்த தேளிடம் அதன் துணை கேட்கிறது. "என் உயிரை காப்பாத்துற அவருக்கு உடனே நன்றி சொல்லனும்னு தோனுச்சு, அதான் அப்படி செய்தேன். என்னை காப்பாதிட்டாருங்கிற சந்தோசத்துல நாம கொட்டினா அவருக்கு வலிக்குமே அப்படிங்கிறத மறந்திட்டேன்.. விஷம் இல்லாம தான் கொட்டினேன் அவரை.. எனக்கு வேற எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல", என்று சொன்னதாம் அந்த தேள்.


அந்த கதைக்கு இப்படியொரு தொடர்ச்சியை சொல்ல வேண்டுமென்று எனக்கு தோன்றியதற்கு காரணங்கள் உண்டு.

பல நேரங்களிலே, தான் நல்லவன் மற்றும் உயரிய கொள்கைகளை உடையவன் என்பதான ஒரு சிறிய ஆணவம் கலந்த எண்ணங்களும் சிந்தனைகளும் நம்மை சூழ்ந்துக் கொள்வதால் நிகழ்வினுடைய உண்மையான சில விஷயங்களை நாம் கவனிக்காமல் தவறவிட்டு விட வாய்ப்புகள் உண்டு.

தேளின் குணம் எப்போதுமே கொட்டுவது என்று தேளை பற்றிய முத்திரை அத்துறவியினுடைய உள்ளத்தில் பதிந்து விட்டதாலும், தாம் தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்பவன் என்பதான எண்ணம் அவருக்குள் இருப்பதாலும் தான் அவர் சற்று அவசரப்பட்டு தேளின் குணம் அப்படியென்று சொல்லிவிட்டாரோ என்று தோன்றுகிறது. தேள் கொட்டியது வலித்தது என்றாலும் கூட,' நாம் இன்னமும் உயிரோடு நடந்துக் கொண்டிருக்கிறோமே, தேளின் விஷம் ஏன் நம் உடம்பில் ஏறவில்லை", என்று அந்த துறவி யோசித்திருந்தார் என்றால், அந்த தேள் ஒருவேளை அதற்கு தெரிந்த விதத்தில் நன்றி சொல்கிறதோ என்று அவர் சிந்தித்து இருக்க கூடும். அதற்காக முதல் பகுதியினுடைய கருத்து தவறென்று நான் சொல்ல வரவில்லை.

பொதுவாகவே ஒரு மனிதரை, "இவர் கெட்டவர்" என்பதான முத்திரை குத்தி அவரை அந்த கண்ணோட்டத்திலேயே பல நேரங்களில் பார்க்க நம் கண்களும் மனமும் பழகி விடுகிறது. ஒருவரின் குணமறிந்து அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும் கூட, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கும் குணமானது அவர் திருந்தினாலும் கூட நாம் அதை கண்டுக் கொள்ள முடியாமல் செய்து விடக் கூடும்.

எப்போதும் யார் எது செய்தாலும் சூழ்நிலைகளை சற்று ஆராய்ந்து, அவர்கள் அவ்வாறு செய்வதற்கு என்ன காரணமிருக்க கூடும் என்று ஒவ்வொரு முறையும் சற்று உள்ளார்ந்து சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.. முன்பு நடந்த நிகழ்வுகளின் உதவியுடனோ அல்லது ஒருவர் எப்படிப்பட்டவர் என்று நமது உள்ளத்திற்குள் நாம் கொண்டிருக்கும் முத்திரையின் காரணமாகவோ சூழ்நிலைகளை ஆராயாமல் அவசரப்பட்டு முடிவெடுப்பதை முடிந்தவரை தவிர்ப்போமே..!!

Thursday, December 2, 2010

ஒரு அவசரம்


Random Bangalore Traffic, originally uploaded by Peter Richmond.
அது ஒரு குளிர்கால மாலை நேரம். மிதமாக வீசிக் கொண்டிருந்த வெயில் வடிந்திருந்த போதிலும் வெளிச்சத்தின் சுவடு இன்னும் மிச்சமிருந்தது. வேலைகள் அதிகமில்லாததால் சீக்கரமே வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. பெரும்பாலானவர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் அந்நேரத்திற்கு சாலையில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்திருந்தது. என்றாலும் கூட பைக்கை ஓட்டுகையில் தேகத்தில் மோதும் எதிர்த்திசைக் காற்றில் குளுமை கலந்திருந்தபடியால் எப்போதும் மனதிற்குள் எழும் சலிப்பும் எரிச்சலும் அன்று எழவில்லை. அம்மாலை நேரத்துக் குளிர்க்காற்று ரொம்பவே பிடித்துப் போய்விட்டதால் தலைக்கவசத்தில் இருந்த முகம் காக்கும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டபடி பொழுதில் கலந்திருந்த அழகையும் தேகத்தில் மோதும் காற்றையும் ரசித்தவாறே பைக்கை மிதமான வேகத்தில் வீடு நோக்கி செலுத்தினேன்.

பாதி தூரம் வந்திருப்பேன். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் சப்தம் எனக்கு பின்புறம் தொலைதூரத்திலிருந்து லேசாய் கேட்க ஆரம்பித்தது. சைரனை அலறவிட்டபடியே வரும் ஆம்புலன்ஸ் எப்போதுமே எனக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அன்றும் அப்படித் தான். தூரத்தில் கேட்ட சைரன் சப்தம் சில வினாடிகளில் அதிகரித்தவாறே என்னை நெருங்க, 'வேதனையில் யாரோ' என்று நெஞ்சுக்குள் படபடப்பு அதிகரித்தது. சாலையின் நடுவில் போய்க் கொண்டிருந்த வாகனங்கள் சில இடதுபுறம் ஒதுங்கி வழிவிட, இன்னும் சில வாகனங்களோ எனகென்னவென்று போய்க் கொண்டிருக்க மிகவும் சாமர்த்தியமாக கிடைத்த இடைவெளியில் முடிந்தமட்டும் வேகத்துடன் சீறி முன்சென்றது அந்த ஆம்புலன்ஸ்.

அந்த ஆம்புலன்ஸ் என்னை கடந்த சில வினாடிகளிலேயே டிராஃபிக் சிக்னல் ஒன்று வந்து விட்டது. நாங்கள் செல்ல வேண்டிய வழியில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்ததால் எல்லா வாகனங்களும் தேங்கி நின்றிருக்க வழி கிடைக்காது சைரனை அலறவிட்டபடியே என்ஜினை உறுமிக் கொண்டு பின்னால் தங்கி விட்டது. என் பைக்கையும் அதன் அருகிலேயே நிறுத்தும்படியாகி விட்டதால் அந்த சைரன் சப்தம் என் காதுகளை நிரப்ப, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உயிர் போகும் அவஸ்தையை உள்ளுக்குள் என்னால் உணர முடிந்தது. 'போக முடியாம நிக்குதே ஆம்புலன்ஸ்', என்று என் மனதிற்குள் ஒரு பதற்றம் பற்றிக் கொண்டது.

ஆம்புலன்சின் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்ற, பைக்கில் அமர்ந்தபடியே லேசாக எம்பி அதன் கண்ணாடி ஜன்னல்களை பார்க்க முயன்றேன். திரை சீலை மூடியிருக்க, லேசாக விலகியிருந்த ஓரத்தில் வெள்ளையுடையில் யாரோ வீற்றிருப்பது தெரிந்தது.

"அதான் ஆம்புலன்ஸ் இப்புடி அலறுதே. சட்டுன்னு இந்த சைடுக்கு கிரீன் சிக்னல் போட வேண்டியது தான..", என்று என் மனதிற்குள் தோன்றியது. சிக்னலில் டிராபிக் போலீஸ் யாரும் தென்படுகிறார்களா என்று சாலையை மேய்ந்தேன். அப்படி யாரும் என் கண்களில் தட்டுப்படவில்லை. சற்று உற்றுப் பார்த்ததில் சிக்னலில் நின்று போக்குவரத்தை கவனிக்க வேண்டிய ட்ராஃபிக் போலீஸ்காரர் ஒருவர் சற்று தொலைவில் தள்ளி நின்றபடி வேலை நேரத்தில் அலைபேசியில் கதையளந்துக் கொண்டிருந்தது தெரிந்தது. எப்போதும் கொஞ்சமாக வரும் கோபம் அன்று சற்று அதிகமாகவே வந்தது. 'பொறுப்பில்லாத நாய்ங்க', என்று மனதிற்கு திட்டினேன்.

நான் மனதிற்குள் திட்டியது அருகிலிருப்பவன் காதில் விழுந்து விட்டது போலும். நான் திட்டி முடிப்பதற்குள், "யூஸ்லெஸ் ஃபெல்லோஸ், இவனுகளையெல்லாம் கட்டி வச்சு அடிக்கணும். வேலைய பாக்காமா போன்ல எவகிட்டயோ கொஞ்சிகிட்டு இருக்கான் பாரு. பாஸ்டர்ட்..", என்று சப்தமாகவே அவன் சொன்னான். சொன்னதோடு நில்லாமல் ஹார்னை விடாமல் அழுத்தவும் ஆரம்பித்தான்.

'என்னை விட உணர்ச்சிவசப்படுபவன் போல', என்று எனக்குள்ளேயே நான் சொல்லிக் கொண்டேன். அவனோடு சேர்ந்து நானும் என்னால் முடிந்த எதையாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. எனது பைக்கின் ஹார்னை நானும் விடாது அழுத்த ஆரம்பித்தேன். ஏற்கனவே அலறிக் கொண்டிருக்கும் சைரன் சப்தத்துடன் எங்களது ஹார்ன் சப்தமும் சேர்ந்துக் கொண்டு எங்களுக்கு முன்னால் இருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்த முகத்தை சுளித்துக் கொண்டு சிலர் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். என் அருகில் இருந்தவனோ ஆம்புலன்சை கை காட்டியபடியே முன்னாடி செல்லுங்கள் என்பதாக அவர்களுக்கு சைகை செய்தான். பலர் அதை அலட்சியப்படுத்தி மீண்டும் திரும்பிக் கொள்ள, அவர்களில் சிலர் எங்களுடன் சேர்ந்துக் கொண்டு ஹார்னை அழுத்த ஆரம்பித்தனர். நிச்சயமாக எங்களது ஹார்ன் சப்தம் ஆம்புலன்சின் சைரனை விட பெரிதாக எழவில்லையென்றாலும் கூட எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை செய்கிறோம் என்பதான நிறைவு நெஞ்சுக்குள் ஏற்பட்டது.

சிக்னலின் முன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களில் சிலவும் எங்களோடு சேர்ந்துக் கொண்டன. பீறிட்டு எழுந்த ஆம்புலன்சின் சைரனும், பல வாகனங்களின் ஹார்ன் சப்தங்களும் அலைபேசியில் ஒன்றியிருந்த போலீஸ்காரரின் கவனத்தை கலைத்தது. அப்போது தான் ஆம்புலன்ஸை கவனித்ததை போன்று பாவனை செய்தபடி போலிப் பதற்றம் உடம்பில் தொற்றிக் கொள்ள வேகமாய் ஓடி வந்தவாறே கிரீன் சிக்னல் விழுந்து போய்க் கொண்டிருந்த வாகனங்களை கைக் காட்டி நிறுத்திவிட்டு எங்கள் பக்கம் பச்சை விளக்கு ஒளிரும்படியாக சிக்னலை மாற்றினார்.

இதனிடையில் ஆம்புலன்சிற்கு எப்படியும் வழி கிடைத்து விடும் என்பதால் அதன் பின்னாலேயே போனால் போக்குவரத்து நெரிசலை எளிதாக தவிர்த்து சென்று விடலாம் என்னும் எண்ணத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, 'என்ன மனுஷங்களோ..?' என்றொரு எண்ணம் என் மனதிற்குள் எழுந்தது.

'உயிருக்கு ஒருத்தன் போராடிட்டு இருக்குறப்ப கூட அதுல நமக்கு என்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு எப்புடி இவங்களால இப்புடி சுயநலமா யோசிக்க முடியுது', என்று தோன்றியது.

கிரீன் சிக்னல் கிடைத்ததும் முன்னால் நின்றிருந்த வானங்கள் பல வேகமாக சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கி ஆம்புலன்ஸ் போக வழி விட்டுக் கொண்டிருக்க ஒரு சில வாகனங்கள் மட்டும், 'இது தான் சான்ஸ்' என்று கிடைத்த வழியில் ஆம்புலன்ஸை முந்திக் கொண்டு போகும் நோக்கத்துடன் வழிவிடாமல் வேகமாக சீறிப் பாய்ந்தன.

'இவனுங்கல்லாம் என்ன ஜென்மங்க. எப்புடி இவனுங்களால இப்படிலாம் நடந்துக்க தோணுது..?', என்று ஆதங்கப்பட்டது மனது. 'உயிருக்கு போராடிட்டு இருக்குற இன்னொரு மனுஷனுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழிவிட கூட முடியாத அளவுக்கு அப்புடியென்ன அவசரம் இவனுங்களுக்கு..?', என்று எனக்கு தோன்றியது..

"இவனுங்கள எல்லாம் திருத்தவே முடியாது. அவனவனுக்கு வந்தா தெரியும்", என்று அவர்களை நான் மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, கிடைத்த வழியில் ஆம்புலன்சை முந்திக் கொண்டு வேகமாக சீறிப் பாய முயன்ற பைக் ஒன்று லேசாய் தடுமாற, அதை சீர் செய்வதற்காக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன் வேகத்தை சட்டென்று குறைத்தான். கிடைத்த வழியில் அவனைத் தொடர்ந்து சீறிப் பாய முயன்ற கார் ஒன்று அவன் வேகத்தை குறைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் வேகமாக முன்னோக்கி சென்று அந்த பைக்கை பின்புறம் லேசாக தட்ட, தடுமாறிய பைக்கை நிலைப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிலைகுலைந்து கீழே சரிந்தான். பைக் ஒருபுறம் சரிய அவனோ தூக்கி எறியப்பட்டு தனது உடம்பை சாலையில் தேய்த்துக் கொண்டே தூரப் போய் விழுந்தான்.

சட்டென்று கிறீச்சிட்ட பிரேக் சப்தங்கள்.. சின்னதாய் ஒரு அலறல்.. தொடர்ந்திட்ட பதற்றம்.. பதறியபடியே அவனைத் தூக்க ஓடிய காலடிகள்.. ஸ்டைலுக்காக தாடையை காக்கும்படியான தலைக்கவசம் அணியாமல் வெறும் தலையை மட்டுமே மூடும் தொப்பி போன்ற தலைக்கவசத்தை அவன் அணிந்திருந்ததால் விழுந்ததில் தாடைப் பகுதி பிளந்திருக்க நிறைய ரத்தத்தை சாலையில் கொட்டியவாறே கீழே கிடந்தான். அவனது உடம்பின் கைகால் மூட்டுப் பகுதிகளில் சதை பிய்த்தெறியப்பட்டிருக்க, எல்லா இடங்களிலும் ரத்தம் வேகமாய் வடிந்துக் கொண்டிருந்தது. அவனால் எந்திரிக்க முடியவில்லை. வலியில் கொஞ்சம் சப்தமாகவே முனகினான். கிட்டத்தட்ட நினைவிழக்கும் தருவாயிலிருந்தான்.

நடந்திட்ட விபத்தின் நிமித்தம் முன்செல்ல முடியாது அந்த ஆம்புலன்சும் அங்கேயே நின்று விட்டதால், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சிலரின் உதவியுடன் அவசர அவசரமாக அவன் அந்த ஆம்புலன்சிலேயே ஏற்றப்பட, சைரனை வேகமாக அலறவிட்டபடியே கிளம்பிய ஆம்புலன்சை முந்திக் கொண்டு போக இம்முறை யாரும் சீறிப் பாயவில்லை. எல்லா வாகனங்களும் ஒதுங்கி வழிவிட எளிதாக முன்னோக்கி வேகமாக சென்றது அந்த ஆம்புலன்ஸ்.

Saturday, November 20, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (14): ஆண்மையென்பது..?


Photo, originally uploaded by heaven_bound.
மதிய உணவருந்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வரும் வழியில் வீதியோரத்தில் ஒரு வீட்டின் வெளியே பெண்ணொருத்தி தன் குழந்தையை இடுப்பில் சுமந்தவாறே வீதியை வெறித்துப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருக்க, அவள் கணவன் அவளருகே வந்து அவளை உள்ளே வரும்படி கிட்டத்தட்ட மிரட்டும் தோரணையில் அதட்டிக் கொண்டிருந்தான். சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போதே அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் என்று தெளிவாகப் புரிந்தது. அவளை நெருங்கி கடந்து சென்ற போது கலக்கத்துடன் மௌனமாய் நீர் கசிந்துக் கொண்டிருந்த அவளது விழிகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. தலைமுடிகள் கலைந்திருக்க அவளது புருவத்திற்கு அருகில் கீறல்பட்டு லேசாக ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. சண்டையில் அவன் அவளை மிகவும் பலமாக அடித்திருக்கிறான் ரத்தம் வருமளவிற்கு..

மனைவியையும் வீட்டிலுள்ள பெண்களையும் கை நீட்டி அடிப்பவர்களை பார்க்கும் போது எனக்கு வரும் கோபத்தை வார்த்தைகள் கொண்டு (அவ்வளவும் கெட்ட வார்த்தைகள்) விளக்கி விட முடியாது.. அவர்களைப் பார்க்கும் போது, "இவனுங்கல்லாம் ஆம்பளைங்களா..?" என்றுத் தோன்றும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்.

'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். தான் தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்ட உண்மையை ஒருநாள் அவளிடம் அவள் கணவன் சொல்லும் போது, அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுப்பாள். அப்போது அவள் கணவன் அவளை சமாதனப்படுத்த முயலுவான். ஆனால் அவள் சமாதானமாகாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்படும் போது, அவன் அவளை தனது பலத்தை உபயோகித்து இழுத்துக் வந்து ஷோபாவில் உட்கார வைத்து சமாதானப்படுத்த முயலுவான். அப்போது அவள், "யூ ஜஸ்ட் யூஸ் ஃபோர்ஸ் ஜஸ்ட் பிகாஸ் யூ ஆர் ஸ்ட்ராங்..?" என்று கேட்பாள். என்னை மிகவும் கவர்ந்த வசனங்களில் ஒன்றது..

அப்படித் தான் இங்கு பல ஆண்பிள்ளைகள் நடந்துக் கொள்கின்றனர். தாம் உடலளவில் வலிமையானவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பெண்களை அடிப்பவர்களையும் அவர்களை சர்வாதிகாரம் செய்பவர்களையும் பார்க்கும் போது, 'இவர்களெல்லாம் என்ன மாதிரியான ஜென்மங்கள்' என்று கூட எனக்கு தோன்றும். உடலளவிலான தனது வலிமையை முன்வைத்து ஒரு பெண்ணை (உடலளவிலோ அல்லது மனதளவிலோ) காயப்படுத்துவது எப்படி ஆண்மையின் குறியீடாக இருக்க முடியும்..?

மென்மையானவள் என்பதற்காக ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவதும், அவளை உடலளவில் காயப்படுத்துவதும், அவளை கண்ணீர் விட வைப்பதும், அவளது இதயத்தை கிழித்து சுக்குநூறாக்குவதும் நிச்சயமாக ஆண்மையில் மிளிரக்கூடிய அம்சங்களாக இருக்கவே முடியாது. ஆண்மை என்பது பெண்மையை விட பலம் பொருந்தியதாகவோ அல்லது பெண்மையை விட ஏதோ ஒருவகையில் உயர்ந்ததாகவோ நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறென்ன இருக்க முடியும்..?

தனது எதிர்பாலை கவர்ந்திழுப்பதும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் போது தானே பெண்மையோ ஆண்மையோ அழகு கொண்டு மிளிர்கிறது.

பெண்ணின் உள்ளத்தை நெகிழச் செய்யக் கூடிய, அவள் முகத்தில் புன்னகையை மலர வைக்கக் கூடிய, அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவள் மனதை கவரக்கூடிய குணங்களும் செயல்களுமே ஆண்மையின் அடையாளமாக இருக்க முடியும். அது தான் ஆண்பிள்ளைகளுக்கு அழகும் கூட..

ஆண்மை என்பது பெண்ணின் மனதை கவர்வது. அவளை கண்கலங்க வைப்பதல்ல.. உண்மையான ஆண்மை என்பது அன்பு, நேசம் மற்றும் பாசம் கலந்த ஒன்றே தவிர ஆதிக்கத்தையோ, ஆணவத்தையோ அல்லது உடல் வலிமையையோ முன்னிறுத்தி ஒரு பெண்ணை விட தான் உயர்ந்தவன் என்று சொல்ல முற்படுவதல்ல..

இது என் கருத்து.. உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லி விட்டுப் போங்கள்..

Wednesday, November 17, 2010

இந்த நாய்ங்க தொல்ல தாங்க முடியலப்பா..


Photo, originally uploaded by viwehei.
"ஆமாங்க.. இந்த நாய்ங்க தொல்ல தாங்க முடியல"..

கொஞ்சம் பொறுங்கள்.. மக்களை ஏமாற்றும் சில [ 'சில'வா ??!?] அரசியல்வாதிகளையோ அல்லது போக்குவரத்து சந்திப்பில் வேலையை கவனிக்காமல் தெருவோரம்.. சீ.. சீ.. சாலையோரம் நின்றபடி இருசக்கர அல்லது நான்குசக்கர வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தி பணம் வசூலிக்கும் சில (?!??) போக்குவரத்து அதிகாரிகளையோ அல்லது வேலையை செய்வதற்கே லஞ்சம் வாங்கும் சில (??!?) அரசுத்துறை அதிகாரிகளையோ அல்லது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை கடத்தி ஏழைகளின் வயிற்றிலடிக்கும் சில (?!??) ரேஷன் கடை ஊழியர்களையோ அல்லது பொதுவாகவே சாதாரண மக்கள் வயிறெரிந்து 'நாய்ங்க' என்று ஏசும்படியாக நடத்துக் கொள்பவர்களையோ நான் இங்கே நாய்களென்று குறிப்பிடவில்லை.. அதற்காக நான் மேற்சொன்னப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் நாய்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், "மன்னிக்கவும், நான் அந்த விவாதத்திற்கு இப்போது வரவில்லை"..

நான் தொல்லை தாங்கவில்லையென்று குறிப்பிட்டது உண்மையான நாய்களை.. அதாவது நான்கு கால்கள், இரண்டு காது, முன்புறம் சற்றே நீண்டிருக்கும் முகம், குறிப்பாக பின்புறம் வாலுடன் 'உர்ர்ர்ர்' என்று உறுமுவதும் 'லொள்' என்று குரைப்பதுமான மொழியைக் கொண்ட விலங்கின வகையை சேர்ந்த நாய்களை தான். "ஹப்பா.. நாய்கள் என்பதை மக்கள் பலவற்றுடன் குழப்பி புரிந்துக் கொள்வதால், நான் சொல்ல வருவது என்ன என்பதை விளக்கி புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது"..

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்..? ஹா.. பெங்களூருல இந்த நாய்கள் தொல்லை உண்மையிலேயே தாங்க முடியலைங்க. தெருவில் கால் வைக்க முடியவில்லை. அதுவும் இருள் பரவத் தொடங்கிவிட்டால் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகிவிடுகிறது. எல்லாமே கிட்டத்தட்ட வெறிப் பிடித்த நாய்கள். எப்போது நம் மீது பாயுமென்று பயந்துக் கொண்டே போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு காரணம் பல நேரங்களில் பலர் மீது அவை பாய்ந்தும் கடித்தும் இருப்பதால் தான்.

அதுவும் பின்னிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலைப் பொழுதுகளிலோ இருசக்கர வாகனங்களில் போகும்போது நான்கைந்து நாய்கள் ஒன்று சேர்ந்துக் கொண்டு துரத்துவதும் பல நேரங்களில் சீறிப் பாய்ந்து கடிப்பதுமாக இவற்றின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இரண்டு மூன்று முறை நானே மயிரிழையில் கடி வாங்காமல் தப்பித்து வந்திருக்கிறேன்.. அதனாலேயே ஊரடங்கியப் பின்பும் ஊர் விழிப்பதற்கு முன்பும் வீதியில் இறங்க நிறையவே பயமெனக்கு.. எனக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் பலருக்கும் தான்.

தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு நாய்களின் தொல்லை இல்லை என்பது நிச்சயம். இங்கு ஐம்பது மீட்டர் அளவே உள்ள சிறியத் தெருவில் கூட குறைந்தது ஐந்து நாய்களையாவது காண முடியும். அதிகபட்சம் பத்து பதினைந்து என்று கூட இருக்கலாம். ஒரு குறுகிய சந்தில் கூட இரண்டு மூன்று நாய்கள் இருக்கும்.

நான் பார்த்தவரையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாய்கள் சாதுவானவை.. சில நாய்களே அங்கு சீறிப் பாய்ந்துக் கடிக்கும் ரகத்தை சேர்ந்தவை. அங்கிருக்கும் பெரும்பாலான நாய்கள் குரைத்தாலும் கூட நாம் அதட்டினாலோ குனிந்து கல்லெடுத்தாலோ அவை அடங்கிப் போய்விடும். ஆனால் இங்கிருக்கும் நாய்களோ மூர்க்க குணம் கொண்டவை.. இங்கு வெகு சில நாய்களே சாதுவாய் பணிந்து போகும் ராகம். மற்றவையோ நாம் அதட்டினாலும் கூட எதிர்த்து நின்று குரைத்தபடியே பாய்ந்து தாக்க தான் முயலும்.

நான் கவனித்த இங்கிருக்கும் நாய்களைப் பற்றிய இன்னும் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும்.

ஒன்று: இங்கிருக்கும் தெருக்களின் ஒவ்வொரு பத்து பதினைந்து மீட்டருக்கும் இரண்டு மூன்று நாய்கள் அவ்விடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும். வேறு எந்த நாய் அந்த எல்லைக்குள் நுழைந்தாலோ அல்லது அவ்வழியாக கடந்து சென்றாலோ அவ்வளவு தான். அவ்விடத்தை சொந்தமாக்கி கொண்ட நாய்கள் புதிதாக வந்த நாயை பாய்ந்து சென்று கடித்து குதறிவிடும். "தமிழ்நாட்டில் கூட நா இத பாத்திருக்கிறேனே", என்று சொல்வீர்களேயானால், அங்கே வெகு சில நேரங்களில் மட்டுமே இப்படி நடக்க கூடும். ஆனால் இங்கிருக்கும் நாய்கள் அவை வாழும் இடத்தின் வழியாக எப்போதுமே இன்னொரு நாய் செல்வதை அனுமதிக்காது. அப்படி புதிதாக அவ்வழியே கடக்க முயலும் நாயை அவை பாய்ந்து தாக்கும் தருணத்தில் நீங்கள் அந்த பக்கமாக போக நேர்ந்தால் அவ்வளவு தான்.. ஒரு சில கடிகள் உங்கள் மேலும் விழலாம்..

இரண்டு: நன்றியுணர்வு இல்லாத நாய்களை இங்கு தான் நான் பார்த்திருக்கிறேன். நா உண்மைய தாங்க சொல்றேன். நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நாய்களை இங்கு நான் நிறைய பார்த்திருக்கிறேன். பொதுவாகவே தமிழ்நாட்டின் டீக்கடை ஓரங்களில் நின்றிருக்கும் நாய் ஒன்றிற்கு இரண்டு மூன்று நாள் ரொட்டி வாங்கிப் போட்டால் நாம் அந்த டீக்கடைக்கு செல்லும் எல்லா நேரங்களிலும் நம்மை எப்படியும் அடையாளம் கண்டுக் கொண்டு வாலாட்டியபடியே நம் பின்னால் வந்து நிற்குமல்லவா.. இங்கிருக்கும் பெரும்பாலான நாய்களுக்கு வாலாட்டுவதென்றால்.. ம்ஹூம்.. என்னவென்று கூட தெரியாது. எத்தனை நாள் நீங்கள் ரொட்டி வாங்கிப் போட்டாலும் கூட, நீங்கள் அதற்கு ரொட்டி வாங்கிப் போடுவது உங்கள் கடமை என்பதைப் போல ரொட்டியை தின்றுவிட்டு எனகென்னவென்று போய்விடும். "அதான் இத்தன நாள் பிஸ்கட் போட்டிருகோம்ல, நம்மள எங்க கடிக்கப் போகுது', என்று நினைத்துக் கொண்டு அவ்வழி செல்வீர்களேயானால், "தப்பு கணக்கு தப்பு கணக்குன்னு சொல்வாங்களே.. அதுக்கு பேரு இது தான் மாமு!!".. சும்மா பிரிச்சு மேஞ்சுடும்.. நன்றிகெட்ட நாய்களை நீங்கள் இங்கு தான் பார்க்க முடியும். "அதான் டெய்லி பாக்குறோமே", என்று சொல்லாதீர்கள். நான் சொல்வது நான்கு கால் நாய்களை..

அது ஏன் இங்கிருக்கும் மாநகராட்சி இதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன்.. நான் இங்கு எழுதியிருப்பது விலங்கினங்களை சேர்ந்த நான்கு கால்களைக் கொண்ட நாய்களைப் பற்றி மட்டுமே!! வேறு எண்ணிக்கையிலான கால்களைக் கொண்ட வேறு இனங்களை சேர்ந்த சில பல உயிர்களுடன் இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கிற ஏதேனும் பொருந்துமென்றால் அது முழுக்க முழுக்க தற்செயலான பொருத்தமே தவிர வேறொன்றுமில்லை.

Monday, November 15, 2010

மாற்றுத் திறனாளிகளுக்கு பார்வையாக இருக்க ஒரு வாய்ப்பு..


Photo, originally uploaded by Melgo2K.
மனதின் அடியாழத்தையும் தொடும் ஆனந்தமான உணர்வைத் தரக் கூடிய சிலவற்றில் ஒன்று இயலாதவர்க்கு இயன்றதை செய்யும் போது அவர் முகம் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி..

மாற்றுத் திறன் கொண்ட நம்மின சகோதர சகோதரிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகள் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதான ஆர்வம் உள்ளவரா நீங்கள்..? உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்..!! இதோ உங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம். பார்வையற்ற நண்பர்கள் சிலருக்கு கொஞ்ச நேரம் அவர்களது பார்வையாக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் சென்னையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரத்தில் (9:30am to 1pm) பார்வையற்றோருக்கான வகுப்புகளை நடத்துகின்றனர். தேவைப்படும் உதவி என்னவென்றால் அவர்களது பாடங்களை அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்க ஆர்வமுள்ள சிலர் தேவை. அவ்வளவே..!!

பெரும்பாலும் அவர்கள் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள். அவர்களுக்கு பார்க்கும் திறன் இல்லையாதலால் அவர்களது பாடங்களை நாம் வாசித்துக் காட்ட அதை அவர்கள் மனதில் ஏற்றிக் கொள்வார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் பாடங்களை அவர்கள் ஒலிநாடாவில் பதிவும் செய்துக் கொள்வார்கள். தமிழில் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதென்றால் தமிழ் இலக்கியங்களை படித்து தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

விடுமுறை நாட்களில் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க எவ்வளவு நேரமாகுமோ அதே அளவு நேரம் தான் இதற்கும் நீங்கள் செலவழிக்க வேண்டியது. ஆனால் படம் பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு பரவசமும் சந்தோசமும் மனநிறைவும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நீங்கள் செய்யும் உதவியால் அவர்களுக்கு தங்கள் பாடங்களை மனதில் ஏற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு. உங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை சக இனத்தவருக்கு செய்த திருப்தி, மகிழ்ச்சி மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு. பார்வையற்ற அவர்களது படிக்கும் ஆர்வத்தில் ஆதரவாக உதவுவதால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு மனநிறைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பதற்றமும் கவலைகளும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து கொஞ்ச நேரம் உங்களுக்கு நிம்மதியான விடுதலை கிடைக்கும். உங்கள் மனது சாந்தமடையும்.

அங்கே நீங்கள் காணக் கூடிய உலகம் மிகவும் வித்தியாசமானது. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தென்றல் காற்று அவ்வப்போது உலா வரும் உலகமது. நிறைய புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். கருத்து பரிமாற்றலாம். அங்கே நீங்கள் செலவழிக்கும் பொழுதுகள் நிச்சயமாக திருப்தி தரும் என்பதில் சந்தேகமில்லை. எழுத்தறிவித்தவனே இறைவனாகும் போது அவ்வெழுத்துக்களை கண்டுக் கொள்ள நீங்கள் பார்வையாக இருப்பீர்களேயானால் அது எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை உங்களுக்கு தரும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

வேண்டுமானால் ஒரு நாள் வந்துப் பாருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று முயற்சித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடருங்கள். இதில் எந்த கட்டாயமும் கிடையாது. எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் என்னால் இதை செய்ய முடியாது என்று நினைப்பீர்களேயானால், உங்களால் முடிந்த நாட்களில் மட்டும் சென்று இவ்வகுப்புகளில் வாசித்து காண்பியுங்கள். நேரடியாக அங்கு செல்ல முடியாதவர்கள் பாடங்களை ஒலிநாடாவிலோ (cassette) அல்லது மின்தட்டிலோ (cd) பதிவு செய்தும் தரலாம். நிபந்தனைகள் எதுவும் இல்லை.. ஆங்கிலத்தில் இலக்கியம் பயிலும் மாணவர்களும் கூட இங்கு வருகிறார்கள். எனவே உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக வாசிக்க வரும் என்றால் உங்களால் அவர்களுக்கும் உதவ முடியும். ஒரு நாள் வந்து தான் பாருங்களேன்!!

சனிக்கிழமை:
இடம்: பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை. [Fathima Higher Secondary School, Kodambakkam, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஞாயிற்றுக்கிழமை:
இடம்: குட்வில் ஃபவுண்டேஷன், மேதா நகர், சென்னை. [Goodwill Foundation, Metha Nagar, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வகுப்புகளை நடத்தும் நண்பர்களின் தொலைப்பேசி எண்களில் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஜோசப்: 9688644474 மற்றும் 9962054684
மணிவேல்: 9788571231
பொற்செல்வன்: 9894627109

வாருங்கள்..! புதியதொரு உலகை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் நாம் வாழும் இவ்வுலகிற்கு நம்மால் முடிந்த மட்டும் இனிமை சேர்ப்போம்..!!

Sunday, November 14, 2010

த.க [1]: வாசம் கண்டுக் கொள்ள இயலாத் தன்மை


Photo, originally uploaded by peter_hasselbom.
அதென்ன "த.க" என்கிறீர்களா..? கடைசி பத்தியைப் பாருங்கள். இப்போது நேரே பதிவிற்கு..

நிறக்குருடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ['அப்படீன்னா என்ன..?' என்று கேட்பவர்களுக்காக சிறிய விளக்கம்: காட்சிகள் யாவும் பழைய காலத்து படங்களைப் போன்று கருப்பு வெள்ளையாக மட்டுமே தெரியும் குறைபாடு அது. வண்ணங்களைக் கண்டுக் கொள்ள முடியாத குறைபாடு தான் நிறக்குருடு].. ஆனால் வாசனையை உணர இயலாத குறைபாடு என்று ஒன்றுண்டென்பதை சமீபத்தில் தான் தெரிந்துக் கொண்டேன். கேள்விப்பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.

சுவாசிக்க முடியும் ஆனால் காற்றில் கலந்திருக்கும் மணம் (அது நறுமணமாகட்டும் நாற்றமாகட்டும்) நாசிகளுக்கு தட்டுப்படாது. அப்படியொரு குறைபாடென்று ஒன்றுண்டு. அந்த குறைபாட்டை அநோஸ்மியா (Anosmia) என்று சொல்வார்கள். முதன்முதலில் கேட்டப் போது ஆச்சரியமாக இருந்தாலும் கூட, அதை பற்றிய சில தகவல்களைப் படிக்கும் போது தான் தெரிந்தது, 'அடடே.. நாமும் கூட அவ்வப்போது தற்காலிகமாக அதை அனுபவித்திருக்கிறோமே' என்று.

பொதுவாகவே நமக்கு சளி அதிகமாக பிடித்திருக்கும் காலங்களில் பெரும்பாலும் வாசங்களை நம்மால் உணர இயலாது. அதை நீங்கள் கூட அனுபவித்திருப்பீர்கள். வைரஸால் (virus) ஏற்படும் சில நோய்களின் போது நாம் அதை அனுபவித்திருப்போம். ஆனால் நாம் அனுபவிப்பது தற்காலிகமானது. சிலர் பிறந்ததிலிருந்தே 'அநோஸ்மியா'வால் பாதிக்கப்படலாம். அக்குறைபாட்டால் நிரந்தரமாகவே வாசனையை உணரும் தன்மையை பெரும்பாலானவர்கள் இழந்து விடுவதுண்டு.

இக்குறைபாடு உள்ளவர்களைப் பொறுத்தவரை நாசி வழி செல்லும் காற்றானது எவ்வித மணமும் அற்றது. வாசத்தை கண்டுக் கொள்ள இயலாவிட்டாலும் கூட இக்குறைபாடுள்ள பலரால் ருசியை கண்டுக் கொள்ள முடியும். சாப்பிடும் போது சாப்பாட்டின் வாசத்தை அவர்களால் உணர முடியாது. ஆனால் உப்பு, இனிப்பு, காரம் என்பதான சுவைகளை உணர முடியும். இக்குறைபாடுள்ள சிலர் ருசியையும் கண்டுக் கொள்ள இயலாத நிலைக்கு போய்விடுவதுண்டு என்றொரு தகவலும் உண்டு.

இவர்கள் எளிதாக கூவம் நதிக் கரையோரத்தில் நடை பயில முடியும்.. துர்நாற்றங்களில் இருந்து விடுதலை பெற்றவர்கள். இக்குறைபாடுள்ள ஒருவர் நகைசுவையாக சொன்ன விஷயம், "சில நேரங்களில் வகுப்புகளின் போது சிலர் உடம்பிலிருந்து சப்தம் வரும் போது எல்லோரும் சிரித்தவாறே மூக்கை பொத்திக் கொள்வார்கள்.. ஆனால் எனக்கு நடப்பது என்ன என்று தெரியாது.. ஏதோ சப்தம் மட்டும் கேட்குமே தவிர வேறு எதையும் என்னால் உணர முடியாது", என்று.

மனதினை கிறங்கடிக்கும் மல்லிகைப் பூவின் மணம், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சாப்பாட்டின் நறுமணம் என்று எதையுமே இவர்களால் உணர முடியாது. பெரும்பாலும் இக்குறைபாட்டினால் பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட, சமயலறையில் எரிவாயு கசிவதை இவர்களால் கண்டுக் கொள்ள இயலாது. திடீரென்று வீட்டின் ஓரத்தில் தீப் பிடித்து விட்டதென்றால் புகை வாசத்தை வைத்து இவர்களால் உடனே கண்டு பிடிக்க முடியாது..

நாசியில் ஏற்படும் அடைப்பே ( nasal congestion or blockage of the nose) பெரும்பாலும் இக்குறைபாட்டிற்கு காரணம். ஆனாலும் சில நேரங்களில் இக்குறைபாடு நரம்பமைப்புகளில் ஏற்படும் கோளாறின் (nervous system (neurological) condition) அறிகுறியாக அல்லது தலையிலோ மூளையிலோ இருக்கும் கட்டியின் (tumors of the head or brain) விளைவாகவோ கூட இருக்கலாம். எனவே இக்குறைபாடுள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இன்னும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) உட்பட நிறைய பிரபலங்களுக்கும் இக்குறைபாடு இருந்திருக்கிறது என்பது தான். முதன் முதலில் கேள்விப்பட்டபோது, 'இப்படியும் ஒரு குறைபாடு உண்டா' என்று ஆச்சர்யமாக இருந்ததால் இதை பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.

தலைப்பில் இருக்கும் 'த.க' என்பது 'தகவல் களஞ்சியம்' என்பதன் சுருக்கம். ஏதோ தெரிந்த சிலவற்றையும், 'அடடே இது புதுசா இருக்கே' என்று ஆச்சர்யப்பட்ட சிலவற்றையும் பற்றிய ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். அதனால் தான் இந்த தலைப்பு. பிடித்திருந்தால் பின்னூட்டமிட தவறாதீர்கள்..

Tuesday, November 9, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (13)



எதேச்சையாக இந்த ஒளிப்பதிவை பார்க்க நேர்ந்தது.. சிரிக்க வைத்தபடியே சிந்திக்கவும் வைக்கின்ற மிக அருமையான பேச்சு. இன்றைய சூழ்நிலையில் நடக்கின்ற பல விஷயங்களை மிகவும் அழகாக சொல்லிய விதம் பிடித்திருந்தாலும் கூட பார்த்து முடித்தவுடன் சொல்லப்பட்ட சில கருத்துகளுக்கு பதில் தர வேண்டுமென்று தோன்றியதால் தான் இந்த பதிவு..

இன்றைய இளைய தலைமுறை பலவற்றை இழந்து விட்டது என்பதான வாதத்திலே சொல்லப்பட்டிருக்கும் இக்கருத்துக்களை 'இழப்புகள்' என்று வகைப்படுத்தி விட முடியாது.. பணத்தையும் பொருளாதாரத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி தம் வாழ்க்கையை நகர்த்தும் பலர் அதை அடைவதற்கு தாம் எதை விட்டுக் கொடுக்கிறோம் (இழத்தல் அல்ல விட்டுக் கொடுத்தல்) என்று தெரிந்தே செய்கின்ற விஷயமிது. இது அவரவரின் விருப்பத் தேர்வு.. அது தான் உண்மை.

இழப்பென்பது வேண்டுமென்று விரும்பி அரவணைக்க முனைந்தாலும் கூட கைவிட்டு போவது.. இங்கே இழப்பென்று இவர்கள் அடுக்குவது இவர்களாக விரும்பி தேர்ந்தெடுத்தது..

எவ்வளவு தான் வேலையில் மும்முரமாக இருந்தாலும் கூட தம் பால்ய சிநேகிதர்களுடன் தொடர்பில் இருக்கும் பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர். அன்பையும் உறவுகளையும் விட்டுக் கொடுத்து விட்டு அசுர வளர்ச்சி பெற முனைவது ஒரு தனி மனிதனுடைய மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களின் விளைவே தவிர அதை இழப்பென்று எப்படி சொல்வது..?

இன்று கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றது உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒருவரை எளிதாக இணைத்துக் கொள்ள.. முன்பெல்லாம் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அஞ்சலட்டை வாங்கி கடிதமெழுதி தபால் பெட்டியில் போட்டால் இரண்டு மூன்று நாட்களாகும் செய்தி போய் சேர.. இன்று அலைபேசி எடுத்து பொத்தானைத் தட்டினால் அதே செலவில் இரண்டு மூன்று நிமிடங்கள் உடனடியாக தாம் சொல்ல நினைத்ததை சொல்ல முடிவதோடு மட்டுமல்லாமல் அதற்கு அவர்களது பதில் என்ன என்பதையும் உடனடியாக தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அப்படியிருந்தும் கூட உறவுகளையும் நட்புகளையும் வளர்த்துக் கொள்ளாதது மனிதனுடைய மனோபாவத்தின் கோளாறென்று சொல்லாமல் அதை இழப்பென்று எப்படி சொல்வது..? நினைத்தவுடன் எளிதாக தொடர்பு கொள்ள தொழில்நுட்பம் கொடுத்துள்ள சாதனங்களை மென்மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்தாமல் வெட்டியாய் பொழுது போக்க உபயோகிப்பது தனிமனிதனின் முட்டாள்தனமல்லவா..

அக்காலங்களை போல் காதலிக்க முடியவில்லை என்றும் கொடுக்கும் முத்தத்தில் பாதி அலைபேசிக்கு தான் போய் சேர்கின்றதென்றும் வருத்தப்படும் பலர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் அக்காலங்களில் தொலைதூர காதலியிடம் பேசும் வாய்ப்பெல்லாம் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை என்பதை தான். தொலைதூர உறவுகளுக்கு கடிதமெழுதுவதும் முத்தத்தை அக்கடிதத்திலே பதிப்பதும் தான் அதிகபட்சம் முடியும்.. இன்று தொலைபேசிக்கு அதிகளவில் முத்தங்களை கொடுக்க நேர்ந்தாலும் கூட மறுமுனையில் இருக்கும் காதலி அம்முத்தத்தின் சப்தத்தையாவது கேட்க கொடுத்து வைத்திருக்கிறாளே என்று சந்தோசப்படுவோம்..

தமக்கு நேரம் போதவில்லையென்று பிதற்றிக் கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவர்கள் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்தி கொடுத்திருக்கிறது.. முன்பெல்லாம் பணமெடுக்க வேண்டுமென்றால் அரை நாள் வங்கியில் வரிசையில் நிற்க வேண்டும். இப்போதோ ஒருசில நிமிடங்களில் ஏ.டி.எமில் பணமெடுத்துக் கொண்டு தம் பொண்டாட்டி பிள்ளைகளுடன் உணவகம் சென்று மகிழ்ச்சியாக அந்த அரை நாள் பொழுதை கழிக்க முடியும்.. முன்பெல்லம் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் செய்த பல விஷயங்களை இப்போதெல்லாம் நிமிடங்களிலும் வினாடிகளிலும் செய்து முடிக்க முடிகிறது.. அவ்வாறு மிச்சமான பொழுதுகளை தம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் செலவழிக்காமல் வீணாக்குவதும் மனித உறவுகளின் மீது அக்கறையில்லாதிருப்பதும் தவறான மனோபாவத்தின் விளைவே..

வேண்டுமென்றே தெரிந்தே இது வேண்டுமென்றும் அது வேண்டாமென்றும் சுயமாக முடிவெடுத்துக் கொண்டு 'நான் இதை இழந்து விட்டேன்' என்று போலி முத்திரை குத்துவது எனகென்னவோ சரியாக படவில்லை..

இன்றைய சமூக சூழ்நிலை மிகவும் வேகமான வாழ்க்கைமுறை கொண்டதாக இருந்தாலும் கூட தமக்கு எது முக்கியம் என்று தனிமனிதன் தான் முடிவெடுக்கிறான். குடும்பத்தையும் உறவுகளையும் நட்புகளையும் அரவணைத்தபடியே முன்செல்வதனால் ஒருவனது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் சற்று மிதமான வேகத்திலே தான் இருக்கும்.. அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது வேலையும் அதில் கிடைக்கும் பதவி உயர்வுகளும் தான் முக்கியம் என்று குடும்பத்தையும் உறவுகளையும் பின்னுக்கு தள்ளுவது ஒருவன் தெரிந்தே சுயமாக எடுக்கும் தேர்வு.. 'இரண்டு வருட பதவி உயர்வுக்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை, எனது உறவுகளுக்கும் நான் சமமான முன்னுரிமை கொடுத்து என் வாழ்க்கையை நகர்த்துகிறேன்' என்னும் மனோபாவத்துடன் வாழ்கின்ற எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கின்றேன்.. அதே சமயத்தில் தனது வேலையும் பதவியும் தான் முக்கியமென்று தம் பொழுதுகளை வேலையிலேயே கழிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன்.. இது ஒவ்வொருவரும் சுயமாக எடுக்கும் முடிவு.. பின்னாளில் நான் இதை இழந்து விட்டேன் என்று பிதற்றுவது முட்டாள்தனம்..

எவ்வளவு தான் வேலைபளு அதிகமாக இருந்தாலும் படுக்க போகும் முன் தனது நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ அலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் கூட தன்னால் பேச முடியாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அது சுத்த அபத்தம்.. சீரழிந்து போன மனோபாவத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் தொழில்நுட்பத்தையும் வேகமான வாழ்க்கை முறையையும் நாம் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம்.. அது தான் உண்மை..

வாழ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.. அசுர வளர்ச்சியையும் வேகமான பதவி உயர்வுகளையும் கொஞ்சம் சமரசம் செய்துக் கொண்டும் பணத்தின் மீதான மோகம் மட்டுமே கொள்ளாமல் உறவுகளிலும் நட்புகளிலும் நேசம் பாராட்டி வாழ நினைத்தால் வாழலாம்.. இன்றைய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் அதற்கு எவ்வளவோ வழிகளை நமக்கு தருகின்றன.. நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தாமல் தெரிந்தே வீணடித்துக் கொண்டு 'இழந்து விட்டோம்' என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை..

Wednesday, October 27, 2010

உயிரூட்டும் பொழுதுகள்..


Photo, originally uploaded by TGKW.
மொழியிலுள்ள அத்தனை வார்த்தைகளும் தீர்ந்த பின்பு நமக்குள் நிலவும் அந்த மௌனப் பொழுதுகளின் போது தான் பேசுகின்ற மௌனத்தை நான் முழுதாய் உணர ஆரம்பித்தேன்.. இரவில் பல மணி நேரம் கதைத்தப் பின்னும் அலைபேசியை வைக்க மனமில்லாது, "அப்புறம்" என்று நீ கேட்க, அடுத்தென்ன பேசலாமென்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி வழியே கசியும் உன் மூச்சுக் காற்றின் மெல்லிய சப்தம் என் சிந்தையை ஆழ்நிலை போதையொன்றில் ஆழ்த்துகின்றது..

நாமிருவரும் பேசிக் கொண்ட தருணங்களை விட நம்மிருவருக்குமிடையில் நிலவுமந்த மௌனமான பொழுதுகளும், செவி தட்டும் இதழுதிர்க்காத வார்த்தைகளும் , நாசியின் இயக்கம் நிமித்தம் வெளிவரும் சுவாசத்தின் சன்னமான சப்தங்களும், நெஞ்சுக்குள் படருமந்த அருகாமையின் உணர்வுகளும் தான் நம்முறவிற்கு உயிரூட்டுவதான எண்ணம் எப்போதும் தோன்றுவதுண்டு..

பொழுது புலரப் போவதற்கான அறிகுறிகள் தட்ட, 'அலைபேசியை நீ வை..' என்று நான் சொல்ல, 'மாட்டேன், நீ வை..' என்று நீ சொல்ல, 'நான் வைக்க மாட்டேனெ'ன்று இருவரும் மாறி மாறி அடம் பிடிக்க நீளும் அப்பொழுதுகளில் சொட்டும் நம் காதலின் துளிகளில் வழியும் போதை.. பருக பருக இன்பம்..

இருவரும் ஒன்றாக வைக்கலாமென்று எண்களை எண்ணி முடித்தப் பின்பும் கூட நீ வைப்பாயென்று நானும் நான் வைப்பேனென்று நீயும் மூச்சை இழுத்துப் பிடித்தபடி காத்திருக்க, மீண்டும் பொழுதுகளை ஆட்கொள்கின்றது பேசுகின்ற அதே மௌனம்.. அதை தொடர்ந்த, "எனக்கு தெரியும்டா நீ வைக்க மாட்டனு" என்பதான உன் சிரிப்பொலிகள்.. எப்படியோ அலைபேசியை வைத்தப் பின்னும் கூட இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன உன்னிதழ்கள் உதிர்த்த வார்த்தைகளும் நீ பேசிய மௌனங்களும்..

Monday, October 25, 2010

சக மனித உயிர்க்கு குரல் கொடுப்போம்..

"நமக்கு எதுக்கு வம்பு..?" என்று போகும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.. நாம் பயணிக்கும் பாதைகளிலும், பொது இடங்களிலும், அக்கம் பக்கமென்று நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் மற்றவருக்கு நிகழும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போக தான் பெரும்பாலும் நாம் முயல்கிறோம்.

அதே கொடுமைகளும் அநீதிகளும் நமக்கு இழைக்கப்படும் போது நமக்கு துணையாக தோள் கொடுத்து அவற்றை எதிர்த்து போராட யாரும் முன்வருகிறார்களா என்று சுற்றிலும் தேடும் நம் விழிகள் அவை மற்றவர்களுக்கு இழைக்கப்படும் போது வேறுதிசை பார்ப்பதாக பாவனை செய்து அவ்விடம் விட்டு நகரவே முயல்கின்றன..

உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்களுக்கு கொடுமைகள் நடக்கும் போதும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போதும் நாமாகவே முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தருவதும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதை உதவியாக மட்டுமே நினைத்து, "உதவி செய்ய எனக்கு இப்ப மூடு இல்லை" என்பதை போன்று அங்கிருந்து நகர்வது சரியான செயலன்று. காரணம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அதே சூழ்நிலையில் இருப்பார்களேயானால் நாம் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் அங்கிருந்து நகர்வோமா..?

"அவர்கள் என்ன எனக்கு நெருக்கமானவர்களா..?" என்று கேள்வி எழுப்புவீர்களேயானால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருநாள் நீங்கள் இல்லாத வேளையில் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதே கொடுமைகள் நிகழும் போது அங்கு சுற்றியிருக்கும் மனிதர்களும் அதே போன்று நினைத்து அவர்களுக்கு கை கொடுக்க முன்வராமல் போகலாம்..

பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டும் காணாமலும் போகாமல் எதற்காக நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை விளக்க கூடிய சிறுகதையொன்றை சில நாட்களுக்கு முன்பு படித்தேன்.. ஆழமான கருத்து பொதிந்த அக்கதை இதோ..

தனது நாற்பதுகளில் இருக்கும் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மங்கிய வெளிச்சத்துடன் வெறிச்சோடிய சாலையொன்றை அவன் கடக்கும் வேளையில் சாலையை ஒட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மெலிதாக கேட்கிறது..

சில வினாடிகள் யோசனைக்கு பின், வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலறல் வரும் திசை நோக்கி செல்கிறான்.. அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்புறம் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறான். அப்பெண்ணை காப்பாற்ற முயலும் வேளையில் அவன் கையில் ஆயுதம் ஏதாவது இருந்து தன்னை தாக்கிவிட்டால் என்ன செய்வதென்று சில வினாடிகள் அவன் யோசிக்கிறான். தன்னை பலாத்காரம் செய்பவனது பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திமிறிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் கை கால்கள் மரத்தை தாண்டி வெளியில் தெரிய, என்ன ஆனாலும் பரவாயில்லையென்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹே.. அவள விடுறியா இல்லையா..?", என்று சப்தமெழுப்பியவாறே கீழே கட்டை எதுவும் கிடக்கிறாதாவென்று பார்த்துக் கொண்டே தட்டுப்படும் சில கற்களை பொறுக்கிக் கொண்டு வேகமாக அம்மரத்தை நோக்கி போகிறான்.

அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுக் கொண்டிருப்பவன் சப்தமிட்டபடியே தன்னை நோக்கி வரும் இவனைப் பார்த்ததும் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விடுகிறான். மரத்தை நெருங்கும் அவன், "பயப்படாதம்மா.. அவன் போய்ட்டான்.. நீ தைரியமா வெளிய வா.." என்று சொல்ல, "அப்பா நீங்களாப்பா.." என்றபடியே மரத்திற்கு பின்புறமிருந்து வெளிப்படுகிறாள் அப்பெண். அப்போது தான் அவனுக்கு தெரிகிறது அது அவன் மகளென்று.. அழுதபடியே வேகமாக ஓடிவந்து தன் தந்தையை கட்டிப் பிடிக்கிறாள் அப்பெண்..


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. எனக்கென்னவென்று அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் அவன் அங்கிருந்து போய் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று.. கொடுமைக்கும் அநீதிக்கும் உள்ளாகியிருப்பவர் யாரோ என்பதான அலட்சியப்போக்கு கொள்வதை இனியாவது தவிர்ப்போமே.. உடலளவிலும் மனதளவிலும் பலவீனமான சக மனித உயிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்பதும் அவர்களுக்கு துணையாக குரல் கொடுப்பதும் மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்வோம்..

Wednesday, October 20, 2010

சூன்யம் அப்பிய இரவொன்றில்..


Photo originally uploaded by teddypopit.
பசியின் காரணமாக வான் கடித்துண்ட மிச்சம் கொண்டு இருள் துளைக்க முயன்று தோற்றுப் போய் துவண்ட முகத்துடன் ஒடுங்கிய இலையாய் மேகங்களுக்குள் மறைந்தவாறே மெலிதாய் வெளிச்சம் கசிகிறாள் வானத்து நிலா.. நீர்த்துகள்களை தாங்கிய குளிர்ந்த காற்று தேகத்தில் மோதினாலும் கூட உள்ளுக்குள் இன்னும் வெக்கையின் தாக்கம்..

அமைதி ஆட்கொண்டுவிட்ட நடுநிசியில் எங்கோவொரு மூலையில் நிசப்தத்தை கொலை செய்தபடியே ஊளையிடும் நாய்க் கூட்டம் உள்ளுக்குள் இருக்கும் உயிரை நடுங்க செய்யாமலில்லை.. ஆனாலும் ஏதோவொரு தைரியத்தில் மொட்டை மாடியின் திறந்தவெளியில் தன்னந்தனியாய் நின்றபடியே ஆளரவமற்ற வீதியை வெறிக்கிறேன்..

சருகுகள் எங்கோ படபடக்கும் ஓசையும் சுவர்க்கோழிகளின் சன்னமான இரைச்சலும் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டிருக்க சூன்யம் அப்பிய அவ்விரவின் கருமை அடிமனதினது ஆழத்தில் ஒருவித பயத்தை மெலிதாக உண்டாக்குகிறது..

உள்ளுக்குள் சென்றுவிடலாமென்று திரும்ப எத்தனிக்கும் வேளையில் அறையினுள் அவள் விட்டுச் சென்ற சுவடுகள் யாவும் அவளில்லையென்பதை உமிழ்ந்தபடியே அடிமனதின் ஆழங்களை காயப்படுத்தும் அந்த ஞாபகங்கள் மீண்டும் கண்முன் அகோர தாண்டவமாடுகின்றன.. துளியும் தாங்க முடியா வலி தரும் அவ்வுணர்வுகள் எதிர்த்து தாக்க, அறைக்கு திரும்ப பயந்து இருளை மீண்டும் வெறிக்கிறேன்.. அதே சருகுகள் படபடக்கும் ஓசை.. சுவர்க்கோழிகளின் இரைச்சல்.. சூன்யத்தின் சுவடுகள்.. ஆனாலும் அவை சில கணங்களுக்கு முன்பு நெஞ்சுக்குள் ஏற்படுத்திய பயம் இப்போது சற்று குறைந்திருப்பதாக தோன்றுகிறது..

அறையின் சுவடுகள் கண்முன் நிறுத்தும் கடந்தகால நினைவுகளும் இரவை கவ்விக் கொண்டிருக்கும் சூன்யம் ஏற்படுத்தும் பீதியும் மாறிமாறி உள்ளத்தை நடுநடுங்க செய்ய, கிழக்கு வெறிக்கிறேன்.. வானமோ விடிந்தபாடில்லை..!!

Tuesday, October 19, 2010

மௌனமே கவியாக..!!

ஒவ்வொரு இரவின் மடியிலும் இமை மூடிய பொழுதுகளில் விரிந்திடும் கனவில் நாழிகை பிசகாது வலம் வருபவளே.. விடியலின் விளிம்பில் விழித்திடும் என் சிந்தையின் முதல் தேடலே.. என் நாசியின் தடத்தினில் தங்கிவிட்ட வாசமே.. வெறும் கூட்டிற்குள் செயற்கையாய் துடித்திருந்த இதயத்திற்குள் உயிரென்னும் காற்றை ஊதி சுவாசமாய் நிறைந்திட்டவளே.. என்னுயிரே..! எனதன்பே..!!

நுனிவிரல் சருமம் முதல் அடியணு ஆழம் வரை கரைந்திருக்கும் ஜீவனே.. உயிரற்ற சிந்தனைகள் கூட உயிர்பெற்றெழுவது உன்னை பற்றிய நினைவுகளின் போது மட்டுமே.. நீயில்லாத பொழுதுகளில் மனதிலிருக்கும் உன் பிம்பங்கள் உயிர் கொள்வதால் தனித்திருக்கும் வேளைகளில் கூட தனிமையொன்றும் தாக்குவதில்லை இப்போதெல்லாம்..

கணம் விடாது இன்பம் சேர்க்கும் என் வசந்தமே.. என் நினைவுகளின் பிம்பமாகவும் நிகழ்வுகளின் அங்கமாகவும் ஆனவளே.. இதழ் உதிர்க்கும் வார்த்தைகளில் உணர்ச்சிகள் ஒட்டிக் கொள்ளும் உயிர் சொல்லே.. என் அணுவின் நடுநிலையானவளே..! எனதான்மாவின் உயிர்நிலையே..!!

உடலின் பாதியாகி என்னுயிரின் மீதியாக எனக்கே எனக்காய் பிறந்த எனதுயிரே.. கருவறை தொட்டிலின் கதவு திறக்க அந்நியம் அப்பிய காற்று நுகர்ந்து, சன்னமாய் சற்றே அழுது, நிலம்தனில் நீ பாதம் பதித்த தருணங்களின் இப்பிம்பங்களை உன்னுடன் பகிர நான் பெற்ற வரம் எண்ணி உள்ளம் கொள்ளும் உவகையின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை நான் தேடாமலில்லை.. மொழியின் ஆழத்தில் புதைந்திருக்கும் வார்த்தைகள் கூட என் அகத்தின் உணர்வுகளை துளிக் கூட வெளிப்படுத்தாத உணர்வே தோன்றுவதால், குறைபட்ட வார்த்தைகளை கையிலெடுக்க சித்தமின்றி மௌனத்தின் மொழி பேசி இதழ் விரித்து இன்பம் கசிகிறேன்..

ஏதேதோ சொல்ல முயன்று இதழ் துடித்து தோற்றுப் போகிறேன் உள்ளுக்குள்.. உன் விழி பேசும் மௌனத்தின் முன்பு வார்த்தைகளை உதிர்க்க நினைக்கும் என்னிதழ்கள் எப்போதுமே வலிமையிழந்து விடுகின்றன..

என் அமைதியின் சுவடுகளையும் அவை பேசும் மொழிகளையும் நீயறிவாய். அதனால் தான் உனக்கும் எனக்கும் மட்டுமே புரிவதான மௌனத்தின் மொழி பேசி மகிழ்ச்சி ததும்ப புன்னகையுடன் உன்னருகில் நெருங்கி அழகு கசியும் உன் பஞ்சு முகத்தை கையிலேந்தியபடியே மூச்சுக் காற்றின் வெப்பம் கலக்க இதழ்களோடு அன்பு பரிமாறி உன் கருவிழி நோக்குகிறேன்..

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"..!!

Sunday, October 17, 2010

கடற்கரைப் பொழுதுகள்..

எவ்வளவு ஓடியாடினாலும் கூட அசந்திடாத தன்மை கண்டு கொஞ்சம் பொறாமை பற்றிக் கொள்கிறது அலைகளைப் பார்க்கும் போது.. நீரில் நனைந்தவாறு இரண்டு அடிகள் எடுத்து வைத்த பின்பு முற்கால நிகழ்வுகள் சில கண்முன் வந்து செல்ல, தேகம் தாண்டி உட்புற செல்களையும் உறைய வைக்கும் கடல் நீரின் குளுமை பிடித்திருந்தாலும் கூட ஏனோ தொடர்ந்து அலைகளுடன் சல்லாபிக்க தோன்றவில்லை.. அலையை ஒட்டியவாறே மணற்பரப்பில் கால்கள் பரப்பி கையூன்றி சாய்ந்தமர்ந்து உப்பு கலந்த காற்றை எதிர்கொண்டு கடல் வெறிக்கிறேன்..

மேடும் பள்ளமுமான பட்டு போன்ற கடலினது மேனியை ரசித்தாலும் கூட விழிகளினது ஓரம் கண்டுக் கொள்ள தவறவில்லை அயர்ச்சிக் கொள்ளாது கரையுடன் காதல் கொள்ளும் அலையினது நுனிகளை விரட்டியபடி குதித்தாடிக் கொண்டிருக்கும் குட்டிச் சிறார்களை.. 'கடந்திட்டதே குழந்தை பருவம்' என்பதான அங்கலாய்ப்பு உள்ளுக்குள் படர்கிறது..

விழிகளை திசை திருப்புகிறேன்.. சற்று தள்ளி விற்றவாறே கடந்து செல்லும் காத்தாடியை கைகாட்டி வேண்டுமென்பதாக சிறுவனொருவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, வாங்கி தர மறுக்கும் பெற்றோரோ அவனது கவனத்தை திசை திருப்ப முயன்றுக் கொண்டிருக்கின்றனர்.. காண்பனவற்றை வேண்டுமென்று கைநீட்டி ஏக்கங்களை வெளிப்படுத்திய பிஞ்சு பருவம் சில நொடிகள் கண்முன் விரிகின்றன..

இன்று பை நிறைய காசிருந்தும் கூட சிறுவயதில் ஆசைக் கொண்டு விழிநீர்க் கோர்த்தவைகளை வாங்கி அனுபவிக்க வேண்டுமென்பதான எண்ணமோ அப்போதிருந்த உற்சாகமோ பெரிதாய் எழவில்லை.. ஆசைபடும் வேளைகளில் அவை கைகெட்டா தொலைவில் இருப்பதும், இயலும் வேளைகளில் அவ்வாசைகளின் மீதான உற்சாகம் கரைந்து போவதும் வாழ்வின் இயல்பாகிவிடுகிறது..

இழந்திட்ட குழந்தை பருவம் குறித்த வருத்தம் நெஞ்சுக்குள் எழுந்தாலும் கூட கையிலிருக்கும் இளைமைப் பருவத்தை கவலைகளுக்குள் துளைக்க விருப்பமில்லை.. கடந்திட்டவை குறித்து கவலைக் கொண்டு கையிலிருக்கும் தருணங்களை வீணடித்து என்ன பயன் என்றொரு எண்ணமும் தோன்றுகிறது.. ஒவ்வொரு பருவமும் அதற்கே உண்டான சிறப்பம்சங்களையும் அழகையும் கையிலேந்தியே நிற்கின்றன.. கையிலிருப்பவற்றின் அழகை ரசிப்பதா அல்லது தவறவிட்டவை பற்றிய அங்கலாய்ப்பில் வாழ்வதா என்பதான முடிவு நம் கையிலேயே இருக்கிறது என்றும் தோன்றுகிறது..

விழிகள் மீண்டும் கடலை நோக்குகின்றன.. தூரத்தில் வெளிச்சப்பொட்டுகளாய் அணிவகுத்து நிற்கின்றன மீனவப் படகுகள்.. மணற்துகள்கள் தட்டி எழுந்து அலை நுனியில் நடக்க ஆரம்பிக்கிறேன்.. பாதம் தட்டும் குளுமை உள்ளுக்குள்ளும் மெலிதாக படர்கிறது..

Friday, October 15, 2010

சொல்வன திருந்தச் சொல்..

சொல்லப்படும் கருத்துக்களை விட அவை சொல்லப்படும் விதம் தான் பெரும்பாலும் சர்ச்சைக்கு உரியதாகவும் பிரச்சனையை உண்டு பண்ணுவதாகவும் அமைந்து விடுகிறது. இதை எளிதாக விளக்க ஒரு சின்ன நகைச்சுவையான உதாரணம் சொல்கிறேன் (உதாரணம் என்னுடையதல்ல):

ஒரு பொண்ணுகிட்ட "கொஞ்சம் வாயை மூடு.." என்று சொல்வதற்கு பதிலாக, "உன் வாய் திறந்திருக்குறத விட மூடியிருக்குறப்ப நீ ரொம்ப அழகா இருக்க.." என்று சொல்வானாம் புத்திசாலி..

அதிலிருக்கும் நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் தெளிவாக புரியும், எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயமாக (sensitive matter) இருந்தாலும் கூட அதை முடிந்தவரை மற்றவர் மனது கஷ்டப்படாதவாறு சொல்லிவிட முடியும் என்பது.

பொதுவாகவே நாம் சொல்ல வருகிற கருத்தினுடைய நல்லவிதமான அர்த்தத்தை முன் நிறுத்தி வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் அதை கேட்பவரது முகசுளிப்பை முடிந்தவரை தவிர்த்திட முடியும். நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றாலும் கூட முற்றிலுமாகவே முடியாத விஷயமல்ல இது.

பல நேரங்களில் சொல்லப்படும் வார்த்தைகளும் கருத்துக்களும் மற்றவர் முகத்தில் சுளிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம் 'விளக்கமின்மை' தான். 'அதை செய்யாதே' என்று மட்டுமே சொல்ல முன்வரும் நாம், 'எதற்காக அதை செய்யக்கூடாது?' என்பதான விளக்கத்தை கொடுப்பதேயில்லை. சில வாக்கியங்களோ கருத்துக்களோ ஒருவரை பார்த்து சொல்லப்படும் போது, "எதற்காக இப்படி சொல்கிறீர்கள்..?" என்று திரும்ப கேட்பவர்கள் மிகவும் குறைவு.

அவர்கள் விளக்கம் கேட்கவில்லையென்றாலும் கூட (முடிந்தவரை அவர்கள் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே) நமது கருத்துக்களை அதற்கான விளக்கங்களுடன் வெளிப்படுத்தும் போது அது ஆமோதிப்பை பெறுவற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத மற்ற நேரங்களில் நல்லதொரு ஆரோக்கியமான கருத்துரையாடலை அது ஆரம்பித்து வைக்கலாம். சொல்ல போகும் கருத்தில் கவனமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் உபயோகிக்கும் வார்த்தைகளிலும் கூட கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினோமென்றால் ஆரோக்கியமான சூழ்நிலைகளை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Monday, October 11, 2010

அரசு விரைவு பேருந்துடன் தவறாமல் வரும் இலவச இணைப்பு..

"மூட்டைப்பூச்சிய நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன்" என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையை சொல்கிறேன்.. மூட்டைப்பூச்சியை நசுக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல.. அதுவும் சாரை சாரையாய் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் இருக்கைகளுக்குள் பதுங்கியிருந்து அமர்ந்தவுடன் பாய்ந்து தாக்கும் அவைகளிடம் இருந்து தப்பிப்பதென்பது கனவில் கூட நடக்காத காரியமே.. காரணம் தூங்கவே முடியாது.. அப்புறம் தானே கனவு காண்பதெல்லாம்!!

இருநூற்று ஐம்பது ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் செலுத்தி வாங்கும் பயணச்சீட்டில் சின்னஞ்சிறு எழுத்துக்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடிக் கொண்டு பார்த்தாலும் கூட "மூட்டைப்பூச்சிகள் ஜாக்கிரதை" என்பது எழுதாமல் எழுதப்பட்டிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கே தெரியாது பயணச்சீட்டோடு சேர்த்து ஒரு இருக்கை நிறைய மூட்டைப்பூச்சிகளை இலவசமாக தருகிறார்கள் என்பதை.. ஏறி அமர்ந்தவுடன் தான் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்..

அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்யும் போது, சிவராத்திரிக்கு ஒத்திகை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மூட்டைப்பூச்சி கடியால் தடித்துக் கொள்ளும் சருமத்துடன் இரவு முழுவதும் விடாமல் சொறிந்துக் கொண்டே இருக்க வேண்டிய அவஸ்தையையும் தவறாமல் அனுபவிப்பீர்கள். பயணக்கட்டணம் என்று இவ்வளவு காசை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் இந்த அரசு பேருந்தின் இருக்கைகளில் பூச்சி மருந்தடிக்க கொஞ்சம் காசை ஒதுக்கினால் என்ன..? 'மருந்தடிக்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கட்டணம் கொடுங்கள்' என்று சொன்னால் கூட கொடுப்பதற்கு மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கட்டணங்களை உயர்த்துவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அதற்கு பெறுமானமுள்ள சேவைகளை வழங்க வேண்டுமென்பதான எண்ணம் ஏன் இவர்கள் மனதில் எழ மறுக்கிறது என்பது தெரியவில்லை..

பதவியிலிருக்கும் ஒரு அரசியல்வாதி எந்த ஊரிலாவது சாலையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நேரங்களில் அங்கிருக்கும் வேகத்தடைகளை அகற்றுவது மற்றும் சாலையின் குண்டுக் குழிகளை மூடுவது என்று எந்த குலுங்களும் இன்றி அவர்கள் வசதியாக பயணிக்க எல்லா கட்டளைகளையும் பிறப்பிக்கும் இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான சில தேவைகளைக் கூட ஏன் ஒழுங்காக வழங்க வேண்டும் என்று யோசிக்க மறுக்கின்றனர்...?

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வரும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளிலும் பராமரிப்பு என்பதின் சுவடை காணவே முடியாது. இருக்கைகளின் மேல் மூடப்பட்டிருக்கும் துணி அழுக்கு கலந்து பழுப்பு நிறத்திலேயே தான் எப்போதும் இருக்கும். அதனுடைய உண்மையான நிறம் என்ன என்பதை உங்களால் கண்டறியவே முடியாது.. அவ்வளவு அழுக்கு அப்பி போய் இருக்கும். அதையும் பொறுத்துக் கொண்டு முகம் சுளித்தபடி அமர்ந்தால் இந்த மூட்டைச்பூச்சி தொல்லை அமர்ந்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஆரம்பித்து விடும். சொல்லப்படும் புகாரை நடத்துனர் கொஞ்சம் கூட கண்டு கொள்வதேயில்லை. "நான் என்ன சார் செய்யறது.." என்று எளிதாக கைவிரித்தபடி முன் சீட்டில் போய் உட்கார்ந்துக் கொள்கிறார். தமிழக அரசு பேருந்துகளில் இது என்னுடைய முதல் அனுபவமல்ல. இது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது எப்போதும்.

அசுத்த குறைபாடோ மூட்டைப்பூச்சி தொல்லையோ இந்த அளவிற்கு பெங்களூரின் அரசு பேருந்துகளில் (கே.எஸ்.ஆர்.டீ.சி) பார்க்க முடியாது. அவர்களது பராமரிப்பு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இது என்னுடைய அனுபவம். அங்கே சீட்டுகளில் பூச்சிகள் வாராதிருக்க மருந்தடித்திருப்பதை சில நேரங்களில் உங்களாலேயே வெளிப்படையாக உணர முடியும். கே.எஸ்.ஆர்.டீ.சி பேருந்துகளில் இந்த தொல்லைகள் இருப்பதேயில்லை. கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் கூட அதற்கு பெறுமானமுள்ள சேவையை அவர்கள் வழங்க தவறுவதில்லை. அடுத்த மாநிலம் வழங்க தயாராக இருக்கும் சரியான சேவையை நம்மவர்களுக்கு வழங்க நம் அரசு துறைகள் ஏன் தாயாராகயில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே..!!

Friday, October 8, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (12)

தாம் விரும்பியவாறு எதுவும் நடப்பதில்லையென்றும், வாழ்க்கை எப்போதுமே ஒரு போர்க்களமாகவே இருப்பதாகவும் பலர் குறைபட்டு கொள்கின்றனர். தாம் அதிர்ஷ்டசாலியில்லை என்றும் வாழ்க்கையில் தமக்கான (போர்க்)களங்கள் அவைகளாக விதிப்படி அமைகின்றன என்பதுமான குற்றச்சாட்டை முன் வைக்கும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை, பல நேரங்களில் அக்களங்கள் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டவை தான் என்பது.

நாம் மேற்கொண்ட முற்கால வினைகளின் ('வினை' அப்படினா 'செயல்'ன்னு அர்த்தங்க) மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருந்திருந்தோமேயானால் இக்கால நிகழ்வுகளின் போக்குகள் நாம் விரும்பும்படியாக அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பல நேரங்களில் இன்று நடக்கும் பல நிகழ்வுகள் கடந்த காலத்தில் நாம் செய்த செயல்களின் விளைவே..

இன்னும் சொல்லப் போனால், நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தை (அல்லது) விளைவை கொண்டுவரும் என்பது தெரிந்தும் கூட பல நேரங்களில் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. 'அப்படியெதுவும் நடக்காது' என்று நமக்கு நாமே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டோ அல்லது 'அத அப்ப பாத்துக்கலாம்' என்று விளைவை பற்றிய எண்ணங்களை புறக்கணித்தோ நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்கிறோம். விளைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் செய்ய இருக்கும் செயலை இன்னும் கொஞ்சம் திருத்தி செய்வதற்கோ அல்லது நம்மை நாமே அப்போதே திருத்திக் கொள்வதற்கோ நமக்கு பொறுமை இருப்பதில்லை.

"இவ்வழி கடினமாக இருக்கும்" என்று தெரியும் கணத்திலேயே பயணிக்கும் பாதையை மாற்றிக் கொள்ளும் முயற்சியையோ அல்லது அதே வழியில் வரவிருக்கும் கஷ்டங்களை கையாள்வதற்கான ஆயத்தங்களையோ செய்யாமல் அலட்சியத்தோடு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பயணத்தை தொடர்வதும் பின்பு கஷ்டம் வரும் போது சூழ்நிலையின் மீதும் வாழ்க்கையின் மீதும் குறைபட்டுக் கொள்வதும் அறிவின்மை என்பதை நாம் பெரும்பாலும் அறிவதேயில்லை..

அதற்காக விதி செய்யும் சதியின் வேலைகளை நான் முழுவதுமாக புறக்கணிக்கவில்லை. விதியின் காரணமாக நிகழ இருக்கும் சில நிகழ்வுகளை (எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட) நாம் விரும்பிய பக்கம் திசை திருப்பிவிட்டிருக்க முடியும் சரியான நேரத்தில் சரியான அளவிலான மதியை நாம் வினைகளின் மீது காட்டியிருந்தால்..

பல நேரங்களில் விளைவுகளின் மீது மட்டுமே கோபம் கொள்கிறோம் நாம் வினையின் மேல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே என்பதை அறியாமல் :-)

Tuesday, September 7, 2010

ஏன் உனக்கின்னும் புரியவில்லை..?

கண்ணாமூச்சு ஆடியது போதும்.. நீ ஓடி ஒளிந்த பின்பு உன்னை கண்டுபிடிக்க தாமதமாகும் ஒவ்வொரு கணமும் மரணத்தின் விளிம்பில் நிற்பதை போன்றதொரு உணர்வு உள்ளுக்குள் படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை. விளையாட்டின் இடைவெளிகளினூடே கூட விபரீதமாக சிந்திக்கும் என் மனம் நீ விட்டு விலகுவது விளையாட்டல்ல என்று தெரிந்தால் எப்படித் தாங்கிக் கொள்ளும்..

'விட்டு விடலா'மென்று இனி நீ விளையாட்டிற்கு கூட சொல்லாதே.. இதழ் சுருக்கி முகம் திருப்பி 'போய் விடு' என்று நீ சொல்வதற்கு தேனருந்தி தாவிச் செல்ல வந்த வண்டல்ல நான்.. உரையாடி உடனிருக்கவும், உடல் தாண்டி உயிர் சேரவும், உடன் துயில்கொண்டு துணையிருக்கவும், மடி தந்து தலைக்கோதவும், தோள் தந்து விழிநீர் துடைக்கவும் ஒற்றை வரம் வாங்கி லட்சம் அணு தாண்டி உனக்காக ஜனித்த உயிர் நான்..

நீ தொலைவில் இருப்பதான சிந்தனைத் தட்டும் போதே நீளும் நிமிடங்கள், நீ தொலைந்து போகிறாய் என்பதை உணர்ந்தால் ஸ்தம்பித்து போகாதா..? பொதுவாகவே, நீர்த்திவலைகள் ஆனந்த தருணங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கும் என் விழிகளில் இப்போது அழுகையின் காரணமாய் பல கண்ணீர்த்துளிகள்.. இறுக்கம் தளர்த்துவது கைப்பிடியில் தானே என்று வாதிக்கும் உனக்கு ஏன் தெரியவில்லை அது வாழ்வின் மீதான பிடிப்பையே என்னுள் தகர்க்கிறது என்பதை..

Saturday, September 4, 2010

எங்கு தவறவிட்டோம்..?

பிற்காலைப் பொழுதொன்றில் வேலைப்பளு அதிகமாகி சோர்வின் சுவடுகள் சில மனதில் அரும்ப, இளைப்பாறுவதற்காக தேநீர் அருந்த அலுவலகத்திற்கு வெளியே வந்தோம்.. செப்பனிட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கும் புல்வெளிகளுக்கிடையிலான திட்டுகளில் தேநீர் கோப்பையுடன் அமர்ந்தவாறே காற்று வாங்குவதும், அங்கே செயற்கையாக வழிந்தோடும் நீருற்றுகளின் எழிலை உள்வாங்குவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

அங்கிருப்பவர்கள் கவனத்தை காந்தம் கொண்டு தன் பக்கம் ஈர்த்தாள் தனக்கே உரிய மழலை தடுமாற்றத்துடன் தத்தி நடை பயின்ற அந்த இரண்டு வயது சிறுமி.. தன் தந்தையின் விரல்நுனி பற்றியபடி பாதங்களை காற்றில் உலாத்தி சீறில்லாத அடிகளை எடுத்து வைத்தவாறே அவள் நடந்த அழகு நிச்சயமாக எல்லாரது கண்களையும் அவள் பக்கம் திரும்ப செய்தது.. அமர்வதற்காக அங்கிருந்த திட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அவளது தந்தை அமர, அவரை சுற்றி வந்தபடியே நிறைய குறும்புகள் செய்து கொண்டிருந்தாள்..

காற்றினது இசைக்கு தாளம் போட்டவாறே இலைகள் கொண்ட ஒரு செடியினது கிளை அவள் தலைக்கு சற்று மேலும் கீழும் அசைந்தது அவளது ஆர்வத்தை தூண்டவே உற்சாகத்துடன் எழுந்து அதை தொடுவதற்காக தன் கைகளை நீட்டியவாறே முயற்சி செய்ய ஆரம்பித்தாள்..

அவளது விரல் நுனிகளுக்கும் செடியில் தொங்கும் இலைக்கும் சில அங்குலங்களே இடைவெளி இருந்தது.. இருந்த போதிலும் அதை எட்டி தொட அவளால் முடியவில்லை.. ஆனாலும் அவள் முகத்தில் மிகுந்த சந்தோசம்.. இலைகளை தொட முடியாதது அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அவளை பொறுத்தவரையில் கைக்கு எட்டவில்லையென்றாலும் கூட காற்றின் உதவியுடன் மேலும் கீழும் அசைந்தாடும் இலைகளிலும் அவள் எடுக்கும் முயற்சியிலும் தான் அவளுக்கு கேளிக்கை.. சற்று நேரத்தில் அதை விட்டு விட்டு அருகில் இருந்த செயற்கை அருவியில் வழிந்தோடும் நீருடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்..

விளைவுகள் மற்றும் முடிவுகள் பற்றிய சிந்தனைகள் ஏதுமில்லாமல் தான் செய்யும் அப்போதைய செயல்களில் மகிழ்ச்சி காண்பதும், கையிலிருக்கும் அப்பொழுதுகளை உவகையுடன் செலவழிப்பதும், அப்பொழுதுகள் கரைய கரைய முன்னோக்கி நகர்ந்து அடுத்தடுத்தவற்றில் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதும் என்று நாமும் தானே குழந்தை பருவத்தில் இருந்திருக்கிறோம்.. எளிதாக வாழுமந்த மனப்பாங்கை வளரும் போது எந்த இடத்தில் தவறவிட்டோம்..?

Sunday, August 29, 2010

மழலை..

வெளிச்சம் வலிமையிழந்துக் கொண்டிருக்கிறது.. பறவைகள் கூடு திரும்புகின்றன.. ஆரவாரங்கள் அடங்கிக் கொண்டிருக்கின்றன.. எல்லாமுமே எல்லாருமே அமைதியாய் இயல்புநிலையின் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, சாந்தப்படாத எண்ணங்களும் கொதித்தெழும் சிந்தனைகளுமாக என் மனம் மட்டும் பரபரப்பின் உச்சத்தில் சுழன்றுக் கொண்டிருக்கின்றது..

கண்கள் திறந்திருந்தாலும் கூட காட்சிகள் எதுவும் பதியவில்லை என்பதை நிலைத்துப் போயிருக்கும் விழிகளின் உட்கரு தெளிவாகவே சொல்கிறது. திறந்திருக்கும் வானம் எல்லாம் நிறைந்திருந்தாலும் கூட ஏதோவொரு வெறுமையை பிரதிபலித்த வண்ணமே உள்ளது. சுற்றியிருக்கும் மனிதர்களைப் போலவே இந்த காற்றுக் கூட திசை மாறி தீண்ட மறுத்து செல்கிறது..

தன்னுணர்வில் இயங்கிக் கொண்டிருப்பது நாசிவழி உள்சென்று வெளிவரும் சுவாசம் மட்டுமே.. அமர்திருக்கும் சுற்றுவெளியில் அசைவுகள் இருப்பதாக உள்மனம் சொன்னாலும் கூட விழிகளோ செவிகளோ பெரிதாய் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை..

எதற்குமே கலைந்திடாத ஆழ்நிலை மௌனம் சட்டென்று கலைகிறது தோள் மீது படர்ந்திட்ட மென்மையின் மிருதுவான ஸ்பரிசம் உணர்ந்து.. தெய்வீகம் கலந்த புன்னகையுடன் முன்வந்து தோள் சரிகிறாள் அந்த குட்டி தேவதை.. "எனக்கு தெரியும் நீங்க இங்க இருப்பீங்கன்னு", மழலை மொழியை காற்றில் உமிழ்ந்தபடி புருவம் உயர்த்தி தலையசைத்து சிரிக்கிறாள்.. இறுக்கம் தளர்ந்து இயல்பு திரும்ப, அடிமன ஆழத்திலிருந்து மேலெழுந்து என் உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது புன்னகையொன்று..

Wednesday, August 18, 2010

எப்போதுமில்லாத சில உணர்வுகள்..

எப்போதுமே உணர்ந்த தனிமை தான்.. ஆனால் எப்போதுமில்லாத வலி இப்போது மட்டும்!! வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட எல்லோருமே கண்டு கொள்கிறார்கள் 'இவனுக்கு என்னமோ ஆகிவிட்டதென்று'.. ஒருவேளை வெளித்தோற்றம் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறதோ..

இப்போதெல்லாம் 'என்னாயிற்று' என்பதான கேள்விகளே அதிகம் காதில் விழுகின்றன. கேள்வி கேட்போருக்கு பதிலளிக்க தெரியாமலில்லை.. பதிலளிக்க தோன்றுவதில்லை.. அதிகபட்சம் ஒரு புன்னகை மட்டுமே.. அதுவும் எனக்காகவல்ல.. அவர்களுக்காக!!

வீழும் வேளையில் கயிறொன்று கைகளில் தட்டுபட, உயிர் பிழைத்தோமென்று சுவாசக்காற்றை உள்ளிழுக்கும் போது, விதியின் விளையாட்டாலோ அல்லது யாரோ ஒருவர் செய்த வினையின் விளைவாகவோ அக்கயிரின் மறுமுனை அறுபட்டு விடை கொடுக்கவே, தளர்ந்திட்ட நம்பிக்கையுடன் செய்வதறியாது தரை நோக்கி கீழ் விழும் நிலையை ஒத்தது தான் என் நிலையும்..

இதுவரை மனதின் ஓரத்தில் தேங்கியிருந்த வீராப்பும், தைரியமும், மீண்டு மேல்நோக்கியெழும் அந்த வெறியும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதில் கொஞ்சம் ஆச்சர்யமே.. பல விஷயங்கள் இப்போது பொருள்படுகின்றன.. படிப்பினைகளுக்கு குறைவேயில்லை.. என்ன.. படிப்பினைகளின் அளவு மிக அதிகம்.. ஏற்றுக் கொள்வதற்கு தான் மனதில் இடமில்லை..

Wednesday, August 4, 2010

நான் வருகிறேன்..

உள்ளுணர்வுகள் யாவும் உயிர் பெற்று ஏதோ சொல்ல முயல, என்றும் போலல்லாது அன்று அவற்றை அலட்சியப்படுத்துகின்றேன்.. அடி எடுத்து வைத்த காரியம் அவசரமானது மட்டுமல்ல.. என் வாழ்வின் மிகவும் அவசியமான ஒன்றும் கூட. 'பயந்தால் இனி பூமி பந்தில் பங்கில்லை' என்பதாக ஏதோவொரு உள்குரல் சப்தமிட, இனியும் தாமதிக்கலாகாது என்பதான எண்ணமே மேலோங்குகின்றது..

எவ்வளவு காலம் தான் தயக்கத்தின் தடுமாற்றத்திற்கு தீனிப் போடுவது..? தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் தரணியிலான பொழுதின் கணக்கு கரைந்து கொண்டே போகின்றது என்பதை உணர்ந்த பின்னும் கூட எவ்வாறு அமைதி காப்பது..? 'பொறுத்திருந்தேன் அதனால் பொங்கி எழுகிறேன்' என்பதாக நான் சொல்லவில்லை. பொடி நடையாக இனியாவது முன்னோக்கி நகரலாமே என்பதான எண்ணம் தான்.. வேறொன்றும் இல்லை..!!

ஏதோவொரு நம்பிக்கையில் பயங்களை பின் தள்ளி பயணத்தை தொடங்கிவிட்டேன். நடத்துனர் வருகின்றார்.. சிரித்த முகத்துடன் இலக்கென்னவென்று வினவுகின்றார்.. புதைத்து வைத்திருந்த தயக்கத்தின் ஒரு சொட்டு நாவின் நுனியில் வேகமாய் வந்து ஒட்டிக் கொள்ள எனக்கும் அவருக்கும் மட்டும் கேட்குமான குரலில் போகத் துடிக்கும் இலக்கின் பெயர் சொல்கின்றேன். சிரித்தபடி சில்லறையுடன் பயணச் சீட்டையும் தருகின்றார். பதிலுக்கு புன்னகைக்க சொல்லும் உணர்வொன்றை சட்டை செய்யாது உறைந்து போய் இருக்கின்றன உதடுகளும் விழிகளும்..

பின் மண்டையில் பாதிக்கும் மேல் சிதறிக் கிடப்பது முன் நிற்கும் காரியம் பற்றிய சிந்தனைகளே.. சன்னமான இரைச்சலுடன் முன்னோக்கி நகரும் பேருந்தின் இதயம் என் மனதின் அப்போதைய நிலையை அப்படியே பிரதிபலிக்கின்றது..

காத்திருத்தல் இதோ கரைய தொடங்கிவிட்டது.. காணத் துடித்த ஒருவர் முகம் ஒருவர் காண்போம்.. கண்கள் கலப்போம்.. அருகாமை உணர்வோம்.. உரையாடுவோம்.. உலகம் மறப்போம்.. உவகை கொள்வோம்.. உயிர் உணர்வோம்.. விரல்கள் பின்னி உள்ளங்கை பற்றுவோம்.. கற்பனைகளும் கனவுகளும் இனி நிகழ்வுகளாகும்.. உனதாகவும் எனதாகவும் மட்டுமே இருந்த பொழுதுகள் இனி நமதாகும்.. இனி நீ தனியாகவோ தவித்திருக்கவோ வேண்டியதில்லை.. உனக்காக.. எனக்காக.. நமக்காக.. இதோ நான் வருகிறேன்..!!

Sunday, August 1, 2010

வழக்கம் போலவே இன்னுமொரு விடியல்..

விடியல் வேண்டாமென்று இமைகளை இறுக்கி மூடி துயில் கொள்ள நினைக்கும் போது தான் ஜன்னல் வழி காற்றுடன் வேகமாய் பரவி விழுகின்றன அதிகாலை கதிரவனின் ஒளிக்கற்றைகளில் சில.. கருமை கலந்திருந்த இரவுகளில் இமை மூடாது எதையெதையோ தேடித் திரிந்த விழிகள், இருள் வெளுத்தப் பின் தூக்கம் வருவதாக சொல்லி துயில் கொள்ளத் துடிக்கின்றன.

'பாசாங்கு செய்தது போதும்.. நிறைய வேலையிருக்கிறது', என்று போராடி எழ முயன்றாலும், "விடைகளில்லாத இன்னுமொரு விடியலா..? எவ்வாறு சமாளிப்பது..?", என்பதான அவஸ்தை பரவுகிறது கனமான இதயத்தின் ரணமான காயங்களிலிருந்து..

"இரவு மட்டும் தினம் தினம் விடிகிறது. ஏன் வாழ்க்கை மட்டும் இன்னுமதே இருட்டில் இரைந்தே கிடக்கிறது..?" நிஜத்தின் பொய்மை பிரதிபலிக்கும் கண்ணாடி முன்னின்று தினந்தோறும் கேட்கும் கேள்வி தான்.. வழக்கம் போல் வெற்றுப் புன்னகையும் அசாத்திய மௌனமுமே பதிலாக இன்றும்..

"கனவுகளிலும் கற்பனைகளிலும் எண்ணங்களிலும் எழுத்துக்களிலுமே மட்டும் இன்னும் எத்தனை நாட்கள் தான் வாழ்க்கை ஓடப் போகின்றது..? இருள் பிரித்து வெளிச்சம் படரும் இந்த நிஜமான பொழுதுகளோடு எனக்கே எனக்கான வாழ்க்கையும் புலராதா..?" என்பதான ஏக்கம் கண்களின் கருவிழிகளுக்கு பின்னால் கனமாகவே இன்னும்..!!

இன்னுமொரு விடியல் கண்ட குதூகலத்துடன் எல்லோரும் மலர்ந்திருக்கும் போது ஏனோ என் மனம் மட்டும் நிசப்தம் கலந்த பின்னிரவு பொழுதுகளிலேயே இன்னமும் தங்கி இருக்கின்றது.. தனிமை கலந்துவிட்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் காணும் காட்சிகளில் தட்டுப்படும் மௌனங்களை மட்டுமே விழிகள் உள்வாங்குகின்றன.. எனக்கே எனக்கான பொழுதுகளுடன் விடியலொன்று மலருமென்பதான நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகின்றேன் தன்னந்தனியாய்..!!

பொல்லாத குணம் கொண்ட விதியின் முன்னே போராடி வெல்வதற்கு இருகரம் போதவில்லை.. தன்னந்தனியாகவே போர்க்களம் எதிர்கொள்வதால் கரைந்திடும் நாட்களைப் போலவே நம்பிக்கையின் இறகுகள் மெல்ல உதிர்கின்றன.. உரையாடி உறவாடினாய்.. உடனொருவர் தேவைப்படும் முக்கியமான தருணமிது.. உடனிருப்பாயா..? யோசித்துச் சொல்..!!

Saturday, July 31, 2010

இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ்..

இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு பண்ணி விட்டீர்களா..? பண்ணலேன்ன பண்ணிடுங்க.. இன்னிக்கு தான் கடைசி நாள்.. வழக்கம் போல இந்த தடவையும் கடைசி தேதியை நீட்டிக்க வாய்ப்புகள் அதிகமென்றாலும் கூட, 'இருக்கிற தலைவலி போதாதா..? இதை வேறு எதற்காக சுமக்க வேண்டுமெ'ன்று நேற்று நானும் எனது நண்பனும் பைக் எடுத்துக் கொண்டு நேராக இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கே சென்று பதிந்து கொண்டு வந்துவிட்டோம்.

'இதுக்கெல்லாம் ஒரு பதிவா..?' என்று கேட்காதீர்கள். இதை பதிப்பதற்கு காரணம், இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு செய்வது எவ்வளவு எளிதானது என்பதை எடுத்து சொல்வதற்காக தான். பெரும்பாலான உங்களை போல தான் நானும் ஏதாவது ஒரு தரகர் மூலமாக நூறு ரூபாயோ அல்லது நூற்றைம்பது ரூபாயோ கொடுத்து முன்பெல்லாம் பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்படி நான் செய்வதற்கு காரணம் 'இதற்காகவெல்லாம் யார் மெனக்கெடுவார்கள்..?' என்பதான எண்ணம். 'அதுவும் இல்லாமல் அங்கே நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கலாம்' என்று நான் தவறான எண்ணத்துடன் இருந்தது தான்.

இந்த முறை எனது நண்பனொருவன், "வா.. நாம் இந்த முறை நேரில் சென்று என்ன தான் இருக்கிறதென்று பார்க்கலாம்.. இதில் நமக்கு ஒரு முறையாவது அனுபவம் வேண்டாமா..?" என்பதாக சொல்ல, நானும் சரி போய் தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.

ITR ஃபார்மை நிரப்புவது மிகவும் எளிதான வேலை தான். அதை உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் உதவியுடன் ஒரு முறை நிரப்ப கற்றுக் கொண்டுவிட்டால் எளிது தான். அதை நிரப்புவதற்கு தேவையான எல்லாமே உங்களுடைய ஃபாரம் 16-ல் இருக்கும். இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கு சென்றதில் இருந்து அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும் எங்களது ரிடான்ஸ்-ஐ பதிவு செய்ய எடுத்துக் கொண்ட நேரம். வரிசையில் நிற்பதற்கும் பதிவு செய்வதற்கும் மொத்தமே ஒரு நிமிடம் தான் ஆனது (பெங்களூரில்).. காரணம் நிறைய பதிவு சாவடிகளை (booth) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தது தான். நிச்சயமாக எல்லா ஊர்களிலேயும் இந்த மாதிரியான வசதிகள், அதுவும் குறிப்பாக இந்த நேரத்தில் செய்திருப்பார்கள்..

எனவே நேரில் சென்று ஒரு முறை பதிந்து தான் பாருங்களேன்.. இந்த முறை தவற விட்டு இருந்தீர்களேயானால் அடுத்த முறை நேரில் செல்லுங்கள்.. நான் அப்படி சொல்வதற்கு காரணம், நீங்களே நேரில் செல்லும் போது நிச்சயமாக சுய மனநிறைவு ஏற்படும் என்பது உண்மை.. இது என் அனுபவம்.. சொல்லத் தோன்றியது, அதனால் சொல்கிறேன்..!!

Friday, July 30, 2010

காதல் சார்ந்தவை.. [2]

கிள்ளி வலித்த பின்பு தான் தெரிந்தது, 'இது கனவல்ல.. நிஜம்' என்று!! உன்னுடனான எனது இந்த நிமிடங்கள்.. எத்தனை நாள் தவமிது..!! இன்று இதோ நீயும் நானும்.. கற்பனைகளிலும் கனவுகளிலும் உலவியதை போலவே பச்சை கம்பளம் விரித்த பூங்காவில் நீயும் நானும் கை கோர்த்த படி நடைபயிலும் இந்த நிமிடங்கள்.. மீண்டும் கிள்ளிப் பார்க்கிறேன்.. நிச்சயமாய் வலிக்கிறது!! இது நிஜம்..

கோபங்களின் சாயல் மறைந்து நீ உதிர்க்கும் அந்த முத்து சிரிப்புகள்.. என் கற்பனைகளின் ஓவியச் சுவடுகள் உயிர்பெற்றெழும் இந்த நிமிடங்கள்.. நிச்சயம் நான் கொடுத்து வைத்தவன் தான்..!! எவ்வளவோ பேசியிருந்தும் நாம் சந்திக்கும் இந்த நிமிடங்களில் ஏனோ தெரியவில்லை வார்த்தைகள் வர மறுக்கின்றன.. குளுமை அப்பிய மென்மையான உன் உள்ளங்கை பற்றும் போது உயிர் தொடும் அந்த உண்மையான மகிழ்ச்சி முதன் முதலில் உணர்கிறேன்..

விரல்கள் பின்னியிருக்க, கண்கள் மௌனமாய் பேசிக்கொள்ள பூங்காவின் இருக்கையில் நாம் வீற்றிருக்கும் இந்த தருணம் அப்படியே உறைந்து போகாதா என்பதான ஏக்கம் உள்ளுக்குள் படரத் தான் செய்கிறது. இந்த கால தேவனுக்கு நம் காதல் பிடிக்கவில்லையா என்ன..? அது ஏன் எப்போதுமில்லாத வேகம் இப்போது மட்டும்..?

நம் சந்திப்பிற்கு அழகு சேர்க்க வானம் வார்த்த மழையின் மெல்லிய துளிகள் நம்மை சுற்றி விழுந்த போது உன்னை போல தான் நானும் பேரானந்தம் கொண்டேன். ஆனால் மழையினது சில துள்ளிகள் உன் மேனி தொடுவதை பார்த்த வினாடியில் பேரானந்தம் பெரும் அவஸ்தையாக மாறிவிட்டது.. "எனக்கே எனக்கான உன் மேல் உட்காரவும் உறவாடவும் என்ன தைரியம் அவைக்கு..?" என்பதான எண்ணம்..

குளிர் பூசிய தேகத்துடன் ஆதவ ஒளியில் மிளிரும் மழையினது மென்மையான சில துளிகளிடம் கூட கனிவு காட்ட முடியாத அளவிற்கு ஆழமானது உன் மேலான எனது பிரியங்களும் காதலும்.. உன் மேலான எனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் எப்போதுமே அகப்பட மறுக்கின்றன.. உன் மீதான எனதன்பை வெளிப்படுத்த நான் முயற்சிக்கும் போதெல்லாம் மொழியினது எல்லை தொட்டு வெறும் கையுடனேயே திரும்புகிறேன்..

சில வினாடிகளில் தானாகவே காற்றில் கரைந்து போய்விடும் என்று தெரிந்தாலும் கூட உன் தேகத்தில் படர்ந்திருக்கும் மழை துளிகளின் மேலான கோபம் குறைவதாய் தெரியவில்லை. முழு முயற்சியுடன் முட்டி மோதி மேலெழும் பொறாமையின் சில துளிகளை கடினப்பட்டு தலை தட்டி உள்ளுக்குள் அடக்குகிறேன்.. காரணம் உன்னையுமறியாமல் மழைத்துளிகளிடம் நீ காட்டும் பிரியங்களுக்காக.. ஆனாலும் நானிருக்கும் போது என்னை கவனிக்க விடாமல் உன் கவனம் கலைத்ததாலோ என்னவோ அந்த நிமிடம் முதல் மழையை எனக்கு பிடிக்கவில்லை..

Tuesday, July 6, 2010

சிதறல்..

எவ்வளவோ எழுதுவதற்கு இருந்தும், தொடர்ந்து பதிவுகளை எழுத முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், இப்போதெல்லாம் மனது அவ்வளவு அமைதியாக இல்லை. ஏதாவதொன்றை பற்றிய சிந்தனையும் கவலையும் எப்போதும் மனதிற்குள் எழுந்த வண்ணம் உள்ளன. மனம் தெளிவாக இல்லாத சூழ்நிலைகளில், எழுதுவதற்கு எவ்வளவு தான் முயன்றாலும் அது முடிவதே இல்லை.

மனம் சரியில்லை. அதனால் எல்லாமுமே சரியில்லாத மாதிரியான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எத்தனையோ கருக்களை எழுதுவதற்கு யோசித்தாலும், எழுத முயற்சி எடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

ஒருவிதத்தில் அதிகம் எழுத தோன்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், 'யார் இதையெல்லாம் படிக்கிறார்கள்' என்பதான ஒரு எண்ணமும் கூட. எத்தனையோ நாட்கள் இந்த ப்ளாகை (blog) நிறுத்தி விடலாம் என்று நினைத்ததுண்டு. எல்லாவற்றையும் அழிப்பதற்கு 'டெலிட்' (delete) பொத்தானை அழுத்த போயிருக்கிறேன். சொல்லத் தெரியாத ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த முடிவை இதுவரையில் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறதென்று பார்க்கலாம்..

Monday, June 28, 2010

வலி..

sorrow III., photo originally uploaded by *juice.
எதையெதை பற்றியோவெல்லம் சிந்திக்கின்றது மனம். 'நலமா...?' என்பவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. சாய்ந்தழ ஒரு தோளில்லையே என்பதான ஏக்கம் எப்போதும் எட்டாத உயரத்தை அடைந்துள்ளது. 'நமக்காக' என்பதாக நாம் நினைத்த சிலர் நம்மை விட்டு அகலும் போது, என்ன தான் முதிர்ச்சியடைந்த சிந்தனைவாதியாய் இருந்தாலும் கூட, சற்று தடுமாறி தான் போய்விட நேர்கிறது.

'நமக்கான உலகம் இவர்கள்' என்பதான சிந்தனையோடு வாழ்க்கையை நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது 'எனக்கான உலகம் வேறு' என்பதாக பின்னாளில் அவர்கள் நம்மிடம் சொல்வார்களேயானால், அத்தகைய தருணங்களை கையாள்வதென்பது சற்று முடியாத காரியமே. கடினப்பட்டு கட்டியெழுப்பிய கோட்டையின் மையத்தூண் சட்டென்று வழுவிழந்து சாய்வதை போன்று தான் வாழ்க்கை ஆகிவிடுகிறது அந்த நொடிகளில்.

தெரிந்த தவறையே திரும்ப திரும்ப செய்வதில் நம்மை மிஞ்சுபவர்கள் நாம் மட்டுமே. வாழ்க்கையில் என்ன தான் அடிபட்டாலும், மீண்டும் மீண்டும் மற்றவர்களை நமது வாழ்க்கையின் மையமாக வைத்து கோட்டையை எழுப்புவதும், பின்னாளில் நம்பிக்கை மோசத்திற்கு இலக்காவதுமாக நம் வாழ்க்கை ஏன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது..? ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்து நிற்கின்றன. அனுபவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விடைகளென்னவோ அகப்படுவதேயில்லை.

இம்முறைப் போல, சில நேரங்களில் அடி கொஞ்சம் பலமாகவே விழுந்து விடுகிறது. எழுந்து நிற்க முடியாவிட்டாலும் கூட எதிரில் இருப்பவர்களின் உள்ளம் சுருங்கக் கூடாது என்பதற்காக போலியாய் உதடு விரித்து புன்னகைக்கிறேன். மார்பில் துளையிடாது உள்ளுக்குள் பதம் பார்த்த வார்த்தைகள் சிலதின் ஆறா ரணங்களும் அவை சார்ந்த வலியின் சாயங்களும் தன்னையும் மீறி கலந்து விடுமோ என்கிற பயத்தின் காரணமோ என்னவோ அப்புன்னகைகளின் போது உதடுகளின் ஓரப்பகுதிகள் கொஞ்சம் தந்தியடிக்கின்றன..

Friday, June 18, 2010

தனித்திருக்கும் நிமிடங்கள்..


Alone, originally uploaded by Lel4nd.
இந்த தனிமை..!! பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா..? எளிதாக சொல்லத் தெரியவில்லை. அதை பற்றி யோசிக்கையில் ஒரு சிறிய குழப்பம் எப்போதுமே மனதிற்குள் எட்டிப் பார்ப்பதுண்டு. ஒருபுறம் கூட்டத்தின் நடுவில் இருக்கும் போது தனித்திருக்க தோன்றினாலும், மறுபுறம் தவிப்புகள் சிலவும் சலனங்கள் சிலவும் வந்து ஒட்டிக் கொள்ளக் கூடிய தனித்திருக்கும் தருணங்களில் அருகில் சிலர் இருந்தால் நலமாக இருக்குமென்கிற எண்ணமும் தோன்ற தான் செய்கின்றது. மனதின் தேவைகள் நொடிக்கொருமுறை மாறிய வண்ணமே உள்ளன.

ஆனாலும் மனதை ஆழ்ந்து கவனிக்கையில், தனிமை ஒருவிதத்தில் பிடித்து தான் இருக்கின்றது. ஆழ்மனதினது சலனங்களை சற்று உற்று நோக்கவும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்குமென்று சிந்தனைகளை மெல்லுவதற்கும் தனித்திருத்தல் என்பது மிகவும் தேவையான ஒன்றாகி விடுகின்றது.

மற்றவர்கள் அருகிலிருக்கும் போது கட்டுப்பாடோடு இருக்கும் சிந்தனைகள் ஆழ்ந்த அமைதி பூசிய நிசப்தத்தின் நடுவில் தனித்திருக்கையில் தறிகெட்டு ஓடுகின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லையென்றாலும் கூட எனக்கென்னவோ அத்தகைய தருணங்கள் இப்போதெல்லாம் பிடித்து போய்விடுகின்றன. ஆழ்கடலில் மூச்சைப் பிடித்து உள்ளுக்குள் மூழ்கி முத்தெடுப்பதை போன்ற உணர்வையே அக்கணங்கள் ஏற்படுத்துகின்றன. 'நான்' என்னும் சுயத்தை அறிய உதவுவது அத்தகைய தருணங்களே.

தனித்திருத்தலே நிஜம். அது தான் வாழ்வினது நிதர்சன உண்மை. அங்கே தான் 'நான்' என்னும் சுயம் நிறைந்திருக்கின்றது. அக்கணங்கள் தான் என்னை நானாக எனக்கு காட்டுகின்றன. எனக்கே எனக்கான வாழ்க்கையை வாழ்வதற்கு கிடைக்கும் நிமிடங்கள் அவையே. அங்கே முகமூடி அணிவதற்கோ, போலி ஒப்பனைகள் போட்டுக் கொள்வதற்கோ தேவையில்லை. மற்றவர்களுக்காக அழுகை மறைத்து புன்னகைப்பதற்கோ, 'நான்'னில்லாத நானாக இருப்பதற்கோ அவசியமில்லை. அத்தருணங்களில் தான் எனக்கே எனக்கான என்னுலகத்தில் நானாக இருக்க இயல்கின்றது. அதனால் தானோ என்னவோ 'தனிமை' இப்போதெல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

Wednesday, June 16, 2010

கை மீறும் கட்டுப்பாடுகள்..


Uncontrollable, originally uploaded by Silvia de Luque.
மாற்றங்கள் ஏற்படும் தருணங்கள் மறக்க முடியாத பாதிப்பை உள்ளுக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. வேண்டுமென்று தவம் கிடக்கும் போது எட்டிப் பார்க்காத மாற்றங்கள், 'எல்லாம் நலமென்று' மகிழ்ச்சியாக இருக்கும் போது வந்து கதவு தட்டுகின்றன. வேண்டுமென்னும் போது எதுவும் கிடைப்பதேயில்லை. 'சரி அது தான் கிடைக்கவில்லையே, இனி நமக்கு அது வேண்டாம்' என்று விலகவோ விட்டுவிடவோ முடிவெடுக்கும் போது கேள்விகள் எதுவும் கேட்காமலேயே நம்மை அவை பின்தொடர்கின்றன.

பல நேரங்களில் தவமிருக்கும் போது எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சி எதற்காக காத்திருந்தோமோ அவை கிடைக்கும் போது ஏற்படுவதில்லை. ஒருவேளை அதற்கு காரணம், கிடைக்கவில்லை என்பதால் ஏற்படும் ஏமாற்றம் பழகி விட எதிர்பார்ப்பை புதைத்து விடுவதால் கூட இருக்கலாம். என்ன தான் மனமானது முதிர்ச்சியடைந்த பண்பினை (maturity) கொண்டிருந்தாலும் எதிர்பார்ப்புகளையோ அல்லது அதனால் ஏற்படும் ஏமாற்றங்களையோ தவிர்த்து வாழவோ அவற்றை கையாளவோ முடிவதில்லை.

விருப்பங்களும் விழைவுகளும் ஏன் எப்போதுமே எதிரெதிர் திசையிலேயே நிகழ்கின்றன என்று தெரியவில்லை. வாழ்வினது போக்கு ஏன் நமக்கு பிடிபடாமலேயே இருக்கின்றது..? உடலை நாம் விருப்பும் இடத்திற்கு நம்மால் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதை போன்று, ஏன் மனதினது ஓட்டத்தை கட்டுப்படுத்தி நாம் விரும்பும் திசையில் செலுத்த முடிவதேயில்லை..?

எதற்காக மற்றவர்களது ஆளுமையின் கீழ் எளிதாக நமது உணர்வுகள் அடிமையாக விட்டு விடுகிறோம்..? வாழ்க்கையில் பெரும்பாலானவற்றை நமது கைகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கும் நாம், மிகவும் முக்கியமான சில விஷயங்களை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் ஏன் விட்டுவிடுகிறோம் என்று தெரியவில்லை. நம்மை ஆழமாக பாதிக்கக் கூடிய பல முடிவுகளை நமக்கு சாதகமாக நாமே எடுக்கக் கூடிய நிலையிலிருந்தாலும் கூட எதற்காக நாம் முடிவெடுக்காமல் அவற்றை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் விடுகிறோம் என்பது புரியவில்லை.

ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக நமது உணர்வுகளை மற்றவர்கள் எளிதாக அடக்கியாண்டுவிட எதற்காக நாம் இடம் கொடுக்கிறோம்..? பதில் தேடி அலைவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுகிறது போங்கள்..!!